செய்திகள்

முரளிதரனின் கோரிக்கையை ஏற்று 800 படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகல்!

19th Oct 2020 04:03 PM

ADVERTISEMENT

 

இலங்கை முன்னாள் வீரர் முத்தையா முரளிதரனின் கோரிக்கையை ஏற்று 800 படத்திலிருந்து நடிகர் விஜய் சேதுபதி விலகியுள்ளார். 

133 டெஸ்டுகள், 350 ஒருநாள், 12 டி20 ஆட்டங்களில் விளையாடி இலங்கையின் மகத்தான கிரிக்கெட் வீரராக அறியப்பட்டுள்ள முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கிறார் விஜய் சேதுபதி. இப்படத்துக்கு 800 என பெயர் வைக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளை எடுத்துள்ளதால் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகவுள்ள இந்தப் படத்தை எம்.எஸ். ஸ்ரீபதி இயக்குகிறார். இலங்கை, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய நாடுகளில் படமாக்கப்படவுள்ளது. அடுத்த வருடத் தொடக்கத்தில் இதன் படப்பிடிப்பு ஆரம்பமாகும். 2021 வருட இறுதியில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழில் உருவாகும் இப்படம் தென்னிந்திய மொழிகளில் மட்டுமில்லாமல் ஹிந்தி, வங்காளம், சிங்களம் ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்படும்.

ADVERTISEMENT

எனினும்  இலங்கை அரசுக்கு ஆதரவளிக்கும் முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க வேண்டுமா என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளார்கள். முரளிதரனாக விஜய் சேதுபதி நடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூகவலைத்தளங்களில் பலரும் பதிவுகள் எழுதியுள்ளார்கள். #ShameOnVijaySethupathi என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டானது. 

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து முத்தையா முரளிதரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

என் மீதுள்ள தவறான புரிதலால் 800 படத்திலிருந்து விலக வேண்டும் என நடிகர் விஜய் சேதுபதிக்குச் சிலர் தரப்பிலிருந்து கடுமையான அழுத்தம் தருவதை நான் அறிகிறேன். விஜய் சேதுபதி கலைப் பயணத்தில் வருங்காலங்களில் தேவையற்ற தடைகள் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதையும் கருத்தில் கொண்டு இப்படத்திலிருந்து விலகிக்கொள்ளுமாறு அவரைக் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். 

முரளிதரனின் அறிக்கையை ட்விட்டரில் விஜய் சேதுபதி பகிர்ந்து, நன்றி வணக்கம் என்று கூறியுள்ளார். 

எனினும் விஜய் சேதுபதியின் முடிவு குறித்து ஒரு குழப்பம் நிலவியது. இதையடுத்து விஜய் சேதுபதியின் மக்கள் தொடர்பாளர் யுவ்ராஜ் ஒரு பேட்டியில், 800 படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகியதை உறுதி செய்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT