செய்திகள்

முரளிதரன் வேடத்தில் நடிப்பது பற்றி விஜய் சேதுபதி யோசித்துப் பார்க்க வேண்டும்: அமைச்சர் கடம்பூர் ராஜூ

16th Oct 2020 01:42 PM

ADVERTISEMENT

திரைப்பட விவகாரத்தில் நடிகர் விஜய் சேதுபதி உணர்வுகளை புரிந்துகொண்டு செயல்பட்டால் அவருடைய எதிர்காலத்திற்கு நல்லது என்றார் அமைச்சர் கடம்பூர் செ.ராஜு.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்படடி வட்டத்துக்கு உள்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின், வெள்ளிக்கிழமை தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு, செய்தியாளர்களிடம் பேசியது: இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் கதாபாத்திரத்தைக் கொண்டு உருவாகவுள்ள படமான 800 படத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடிப்பது பற்றி யோசித்துப் பார்க்க வேண்டும். ஒட்டுமொத்த உணர்வாளர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டிய இடத்தில் விஜய்சேதுபதி உள்ளார்.

திரைப்படத்தில் நடிப்பது நடிகர் விஜய்சேதுபதியின் தனிப்பட்ட உரிமை. ஆனால் உணர்வாளர்களை அவர் மதிக்க வேண்டும். உணர்வுகளைப் புரிந்து கொண்டு செயல்பட்டால் அவரது எதிர்காலத்திற்கு நல்லது. திரைப்படத்துறையினரின் 30 சதவீத கேளிக்கை வரியை குறைக்க வலியுறுத்தியதையடுத்து, 8 சதவீதமாக தமிழக அரசு குறைத்துள்ளது. திரைப்படக் கட்டணமும் முறைப்படுத்தப்பட்டுள்ளது. திரைத் துறையினருக்கு தமிழக அரசு பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளது.

திரையரங்குகள் திறப்பது குறித்து மத்திய அரசு பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. இது நடைமுறைக்கு எப்படி சாத்தியப்படும் என்பது குறித்து திரையரங்கு உரிமையாளர்களுடன் தமிழக அரசு கலந்தாலோசித்து, அவர்களின் கருத்துக்களைப் பெற்று அதன்பின் திரையரங்குகளை திறந்தால்தான் சரியாக இருக்கும். நான் திங்கள்கிழமை சென்னை சென்றவுடன் ஓரிரு நாள்களில் திரையரங்கு உரிமையாளர்கள், சங்கப் பிரதிநிதிகளை தமிழக முதல்வரிடம் நேரடியாக அழைத்துச் சென்று பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்படும்.

ADVERTISEMENT

தொடர்ந்து, திரையரங்கு திறப்பு பற்றி ஒருவாரத்தில் நல்ல முடிவு வரும் என்றார் அமைச்சர் கடம்பூர் செ.ராஜு.

Tags : Cinema Vijay Sethupathi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT