செய்திகள்

கருப்பாக இருப்பவர்களுக்குத் தாழ்வு மனப்பான்மையை வர வைக்கிறீர்கள்: பிக் பாஸ் நிகழ்ச்சியில் உருக வைத்த அறந்தாங்கி நிஷா

7th Oct 2020 04:50 PM

ADVERTISEMENT

 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடைய வாழ்க்கை அனுபவங்கள் குறித்து நடிகை அறந்தாங்கி நிஷா பேசியது ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி, இந்த வருடம் கரோனா அச்சுறுத்தல் காரணமாக தாமதமாகத் தொடங்கியுள்ளது. 

ரம்யா பாண்டியன், ஆஜித், ஆரி, அனிதா சம்பத், வேல் முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி, சோம், ஷிவானி, சனம் ஷெட்டி, பாலா, கேப்ரியலா, ஜித்தன் ரமேஷ், அறந்தாங்கி நிஷா, ரேகா, ரியோ, சம்யுக்தா என 16 பேர் பங்கேற்கிறார்கள். 

ADVERTISEMENT

இந்நிலையில் நேற்று ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை அறந்தாங்கி நிஷா பேசியது பார்வையாளர்களை மிகவும் கவர்ந்துள்ளது. கருப்பாக இருக்கும் தனக்கு இந்தச் சமூகத்தில் கிடைத்த அனுபவங்களை நகைச்சுவையுடனும் நெகிழ்ச்சியாகவும் அவர் பேசியது குறித்து சமூகவலைத்தளங்களில் பலரும் பதிவுகள் எழுதியுள்ளார்கள். நேற்றைய நிகழ்ச்சியில் அறந்தாங்கி நிஷா பேசியதாவது: 

என்னுடைய முழுப் பெயர் ஜகுபர்நிஷா. 12ம் வகுப்பு வரை அறந்தாங்கியிலேயே படித்தேன். பள்ளியில் படிக்கும்போது சின்னச் சின்ன கஷ்டங்கள் என்று சொல்வார்களே, அப்போது அது கஷ்டமாகவே எனக்குத் தெரியவில்லை, நிறம் என்பதே பெரிய விஷயம் என்பதை மற்றவர்கள் சொல்லித்தான் தெரிந்துகொண்டேன். என் அம்மாவிடம் கேட்டேன், ஏம்மா இந்தக் குங்குமப் பூவை எல்லாம் சாப்பிடிருக்கலாமே என. அதற்கு என் அம்மா சொன்னார், 12 டப்பா சாப்பிட்டேன் என்று. 12 டப்பா குங்குமப் பூ சாப்பிட்ட பிறகுமா இந்த நிறம் எனக் கேட்டேன்.

என்னுடைய சிறிய வயதில் ஒரு பெரிய ஓட்டு வீட்டில் வசித்தோம். கூட்டுக் குடும்பம் தான். அம்மாவும் நானும் சமையலறையில் படுத்திருப்போம். என் அப்பா ஆட்டுக் கறிக்கடை வைத்திருந்தார். காலையில் 3 மணிக்கு எழுந்து கடைக்குச் செல்லும்போது என் அப்பா பலமுறை என்னை மிதித்துவிட்டுச் சென்றிருக்கிறாராம். ஏனென்றால் நான் இருக்கிறமே இடமே தெரியாதாம். அந்தக் கண்றாவி நிறத்தில் அந்த இடத்தில் நான் கிடந்திருக்கிறேன். பிள்ளையே இல்லையென்று ஆண்டவனிடம் வரமாகக் கேட்டேன், உனக்குப் பிள்ளை ஆசை வரவே கூடாது என்று உன்னை எனக்குக் கொடுத்திருக்கிறார், பேசாம இருடி என்பார். 

நான் கருப்பு என நானாக நினைத்ததே இல்லை. பள்ளியில் பிரார்த்தனையின்போது நீ பின்னால் நில்லு என்பார்கள். அப்போது எனக்குப் புரியாது. நானும் ஜன கண மன பாடுவேனே, என்னை ஏன் பின்னால் நிற்க வைக்கிறார்கள் என நினைப்பேன். நன்றாக இருக்கும் பிள்ளைகளைத்தான் முன்னால் நிற்க வைப்பார்கள் எனப் பிறகுதான் தெரிந்தது.

கருப்பாக இருப்பவர்களுக்குத் தாழ்வு மனப்பான்மை வரவே வராது. அதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். ஆனால் அந்த தாழ்வு மனப்பான்மையை வர வைக்கிறீர்கள். அது பல பேருக்குப் புரியாது. அது உண்மை. நீங்கள் கவனித்துப் பாருங்கள், கருப்பாக இருப்பது ஒரு அழகுதான் என கருப்பாக இருக்கிற யாரும் சொல்ல மாட்டார்கள். சிகப்பாக இருக்கிறவர்கள் மட்டும் தான் இதைச் சொல்வார்கள். ஏனெனில் அந்த வலி அவர்களுக்குத் தெரியாது. அதை உணரும்போதுதான் எங்களுக்குத் தெரியும். கல்லூரி படிக்கும் காலங்களில் பட்டிமன்றங்களில் பேச ஆரம்பித்தேன். நிகழ்ச்சியில் ரூ. 500 எனக்குக் கொடுத்தார்கள் என்றால் வீட்டுக்கு ரூ. 400 கொடுத்துவிட்டு ரூ.100-ஐ பேருந்துச் செலவு உள்பட என்னுடைய செலவுகளுக்காக நான் வைத்துக்கொள்வேன். 

அங்கேயும் நான் அதை அனுபவித்தேன். நிகழ்ச்சிகளிலும் நான் தான் கடைசிப் பேச்சாளராக இருப்பேன். மூன்று மணிக்கு, இரண்டு மணிக்குப் பேசுவேன். அந்த நேரத்தில் அங்கே இருக்கும் எல்லோரையும் கலாய்த்துச் சிரிக்க வைப்பேன். மைக் செட் காரரைப் பார்த்து, நீங்க என்னையே பார்க்கிறீங்க, நான் அவ்வளவு அழகாக இருக்கிறேனா எனக் கேட்பேன். அவர் தலையில் அடித்துக்கொண்டு போய்விடுவார். ஒருவேளை நான் கலாய்த்ததை அவர்கள் ஏற்றுக்கொண்டதால் தான் இன்றைக்கு நிறைய பேருடைய கிண்டலை ஏற்றுக்கொள்வதற்குத் தகுதியானவளாக இருக்கிறேன்.

கல்லூரிக் காலங்களில் எல்லோருக்கும் காதல் கடிதங்கள் வரும். எனக்கு ஒருவர் கூட கடிதம் கொடுத்ததில்லை. என் நண்பர்களிடம் வாயை விட்டே கேட்டிருக்கிறேன், ஏன் எனக்கு மட்டும் யாரும் காதல் கடிதங்கள் கொடுப்பது இல்லை என்று. ஆனால் என் தோழிகளுக்கு எல்லாம் காதல் கடிதங்கள் வரும். என்னை கொரியர் கேர்ளாகக் கூட யாரும் பயன்படுத்தியதில்லை. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் நான் கவலைப்பட்டுள்ளேன்.

வீட்டில் எனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார்கள். அதற்கு முன்பே என் அத்தை பையன் என் வீட்டுக்கு வந்திருந்தார். எங்கள் ஊரில் ஒரு கல்யாணம். அப்போது மின்சாரம் போயிருந்தது. உலகத்திலேயே கரண்ட் போனபோது காதலைச் சொன்னது என் புருஷன் மட்டும்தான். அந்த ஆள் இருட்டுக்குள்ளேயே ஒரு இருட்டிடம் காதலைச் சொல்லிவிட்டுப் போய்விட்டார். உள்ளே வந்து ஐ லவ் யூ எல்லாம் சொல்லவில்லை, கல்யாணம் செய்துகொள்ளலாம் என்றார். அப்போது இருந்த சூழலில் வேண்டாம் என்று முடிவெடுத்து அதை விட்டுவிட்டேன். எம்பிஏ எல்லாம் முடித்தபிறகு வீட்டில் பெண் பார்க்கும் படலம் நடந்தது. மூன்று பேர் தான் என்னைப் பெண் பார்த்தார்கள். மூன்று பேரும் முகத்துக்கு முன்பே, பொண்ணு கருப்பாக இருக்கிறது என்று சொன்னார்கள். அப்போது மனத்துக்குள் வேண்டிக்கொண்டேன், மூன்று பேருக்கும் கல்யாணமே நடக்கக்கூடாது என்று. ஆனால் அவர்களுக்கு இந்நேரம் கல்யாணம் ஆகியிருக்கும். 

நான் பெரிதாக மனத்துக்குள் என்ன நினைப்பேன் என்றால், பள்ளியில் படிக்கும்போது எல்லோரும் என்னைப் பின்னால் தான் உட்கார வைத்தார்கள். அப்போது முன்னால் இருந்த யாரையும் இன்று உலகத்துக்குத் தெரியாது. பின்னாடி நின்ற நான் இன்று எல்லோருக்கும் முன்பு நிற்கிறேன்.

கலக்க போவது யாரு தேர்வின்போது நான் போக மறுத்தேன். கருப்பாக இருக்கிறவர்களைத் தேர்வு செய்ய மாட்டார்கள் என அம்மாவிடம் சொன்னேன். இல்லை போ என்றார் அவர். இயக்குநரைப் பார்த்து என்னுடைய நகைச்சுவைகளைச் சொன்னேன். அவருக்குப் பிடித்ததால் நேரடியாக நிகழ்ச்சிக்கு வாருங்கள் என்றார். அப்போது மனத்துக்குள் நினைத்தேன், அழகுக்கும் திறமைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லைடி நிஷா. தயவுசெய்து இதை மனத்தில் வைத்துக்கொள். திரும்பத் திரும்ப உன்னை மட்டம் தட்டாதே என. 

நான் படிக்க வரும்போதும் சரி, வெளியே வரும்போது சரி, எங்கள் குடும்பத்துக்குத் தெரிந்தவர்கள், இப்படிப் பிள்ளையை அனுப்புகிறீர்களே, ஏதாவது ஒன்று ஆனால் அவ்வளவுதான், நம்ம கூட்டம் என்ன ஆவது, பரம்பரை என்ன ஆவது என்று கேள்வி எழுப்பினார்கள். ஆனால் இதைக் கேட்டு என் குடும்பத்தில் யாரும் கவலைப்படவில்லை. நீ போ, ஏதாவது செய், நீ இருப்பதை நான்கு பேருக்குத் தெரிய வை என்றார்கள். நான் நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். 

சினிமா என்றால் சிலர் பயப்படுவார்கள். ஆண்களைக் குற்றம் சொல்வார்கள். ஆனால் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் இருந்த ஆண்கள், எனக்குக் கிடைத்த சொக்கத் தங்கங்கள். 50 பையன்கள், நான் ஒருத்தி தான் பொம்பளை. அதை எவனும் நம்பலை. என்னைத் தாங்குவார்கள். 50 பேரும் என்னை ஒன்றாக அழைத்துச் சென்றார்கள். கிட்டத்தட்ட இப்போது வரை அதுதான் நடக்கிறது. நாம் சரியாக இருந்தால் நம் கூட இருப்பவர்களும் சரியாக இருப்பார்கள். 

வெளியே நிறைய பேர் கேட்பார்கள், உங்கள் நிறத்தைக் கலாய்க்கிறார்களே, உங்களுக்குக் கோபம் வரவில்லையா என. சமுதாயம் என்னைக் கலாய்த்ததை விட இவர்கள் ஒன்றும் பெரிதாகக் கலாய்க்கவில்லை. நீ என்ன பெரிதாகக் கிழித்துவிடுவாய் எனக் கேட்டார்கள். 

ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பாள் என எல்லோருக்கும் தெரியும். ஆனால் ஒரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னால் அவமானம் இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது. நம்மிடம் உள்ள பலவீனத்தை ஒருவன் எப்போது பலமாக மாற்றுகிறானோ அப்போது பலவீனம் செத்துப்போய் விடும். சிவகார்த்திகேயன் சொல்வார், நம்மைப் போன்றவர்கள் எல்லாம் ஜெயித்தால் மட்டும் போதாது, ஜெயித்துக்கொண்டே இருக்கவேண்டும் என்பார். எனவே ஒவ்வொரு நாளும் நம்மை நிரூபித்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று பேசினார்.

Tags : Bigg Boss Tamil 4 Aranthangi Nisha
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT