செய்திகள்

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறதா விஜய்யின் மாஸ்டர் படம்?: புதிய தகவலால் பரபரப்பு

28th Nov 2020 11:20 AM

ADVERTISEMENT

 

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள மாஸ்டர் படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிகில் படத்துக்குப் பிறகு மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ளார் விஜய். மாஸ்டர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு இசை - அனிருத். விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் போன்றோர் நடித்துள்ளார்கள்.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக, திரையரங்குகள் எட்டு மாதங்களாக இயங்கவில்லை. இதனால் மாஸ்டர் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.

ADVERTISEMENT

கடந்த நவம்பர் 14 மாலை 6 மணிக்கு மாஸ்டர் பட டீசர் சமூகவலைத்தளங்களில் வெளியானது. இந்திய அளவில் அதிக லைக்ஸ் பெற்ற டீசர் என்கிற பெருமையை மாஸ்டர் பட டீசர் பெற்றுள்ளதாக படத்தயாரிப்பு நிறுவனமான எக்ஸ்பி ஃபிலிம் கிரியேடர்ஸ் தகவல் தெரிவித்தது.

சமீபகாலமாக ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷ் நடித்த பெண்குயின், சூர்யா நடித்த சூரரைப் போற்று, நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் போன்ற படங்கள் நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியாகின. இதனால் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படமும் ஓடிடி தளத்தில் வெளியாகும் எனத் தகவல் வெளியானது. ஆனால் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இதை மறுத்தார். கடந்த செப்டம்பர் மாதம், கோவையில் விஜய் ரசிகர் மன்றம் சார்பாக நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட லோகேஷ் கனகராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாஸ்டர் படம் ஓடிடியில் வெளியாவதற்கு வாய்ப்பு இல்லை. திரையரங்கில் தான் வெளியாகும். திரையரங்குகள் என்றைக்கும் திறக்கப்படுகிறதோ அதன்பிறகு மாஸ்டர் பட வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றார்.

கடந்த 10-ம் தேதி முதல் தமிழ்நாட்டில் மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டன. தீபாவளிக்கு சந்தானம் நடித்த பிஸ்கோத் படம் திரையரங்கில் வெளியானது. எனினும் இதுவரை வெளியான படங்களைப் பார்க்க ரசிகர்கள் அதிக ஆர்வம் காண்பிக்கவில்லை எனத் தெரிகிறது. மக்களிடம் கரோனா குறித்த அச்சம் இன்னும் நிலவுவதால் திரையரங்குகளுக்கு வரத் தயங்குகிறார்கள். திரையரங்குகளிலும் 50 சதவீத இருக்கைகள் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் தான் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

மேலும் தீபாவளி சமயத்தில் ஓடிடி தளங்களில் வெளியான சூரரைப் போற்று, மூக்குத்தி அம்மன் ஆகிய படங்களுக்கு ரசிகர்கள் அதிக வரவேற்பு தந்துள்ளார்கள்.

இந்தக் காரணங்களை முன்வைத்து மாஸ்டர் படத்தைத் திரையரங்குகளில் வெளியிடாமல் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியிட படக்குழு தீர்மானித்துள்ளதாகத் தெரிகிறது. பெரிய தொகைக்கு டிஜிட்டல் உரிமையை விற்றுள்ளதால் வரும் பொங்கலுக்கு நெட்பிளிக்ஸ் தளத்தில் மாஸ்டர் படம் வெளியிடப்படுவதாகப் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இதனால் சமூகவலைத்தளங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆனால் மற்றொரு தகவலும் வெளியாகி குழப்பத்தை ஏற்படுத்துகிறது. மாஸ்டர் படத்தின் டிஜிட்டல் உரிமை மட்டுமே விற்கப்பட்டுள்ளது. திரையரங்கில் வெளியான பிறகே ஓடிடி தளத்தில் மாஸ்டர் படம் வெளியிடப்படும். எனினும் ஜனவரியிலும் தற்போதைய நிலைமை நீடித்தால் மட்டுமே ஓடிடி தளத்தில் மாஸ்டர் படத்தை நேரடியாக வெளியிடப்படுவது குறித்து முடிவெடுக்கப்படும் எனத் தயாரிப்பு நிறுவனத்தின் தரப்பில் கூறுவதாக மற்றொரு செய்தி வெளியாகியுள்ளது. இதனால் எந்தச் செய்தியை நம்புவது என்கிற குழப்பத்தில் உள்ளார்கள் ரசிகர்கள்.

மாஸ்டர் படம் ஓடிடியில் வெளியாவது குறித்த தனது இறுதி முடிவை தயாரிப்பாளர் முறையாக அறிவிக்கவேண்டும் என ரசிகர்கள் விரும்புகிறார்கள். 

Tags : master OTT
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT