செய்திகள்

விமல் நடித்த கன்னிராசி திரைப்படத்தை வெளியிட இடைக்காலத் தடை

27th Nov 2020 01:42 PM

ADVERTISEMENT

 

சென்னை, நவ.27: நடிகர் விமல் நடிப்பில் இன்று வெளியாகவிருந்த கன்னிராசி திரைப்படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றத்தில் மீடியா டைம்ஸ்  நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், நடிகர் விமல் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கன்னிராசி. இந்த திரைப்படத்தை கிங் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்தின் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரிக்கான விநியோக உரிமை எங்கள் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.

இதற்காக படத்தின் தயாரிப்பாளர் ஷமீன் இப்ராஹிமுக்கு ரூ.17 லட்சத்தை மீடியா டைம்ஸ் நிறுவனர் அல்டாப் ஹமீது வழங்கினார். ஆனால், ஒப்பந்தத்தின்படி கடந்த 2018-ஆம் ஆண்டுக்குள் படத்தை தயாரிப்பாளர் வெளியிடவில்லை. இந்த நிலையில் கன்னிராசி திரைப்படம் நவ.27 அன்று வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரிக்கான விநியோக உரிமை வேறொரு நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே எங்கள் நிறுவனத்திடம் பெற்ற தொகையை வட்டியுடன் சேர்த்து ரூ. 21 லட்சத்து 8 ஆயிரமாக வழங்க உத்தரவிட வேண்டும். அதுவரை திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.

ADVERTISEMENT

இந்த வழக்கை விசாரித்த சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றம், கன்னி ராசி திரைப்படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், மனு தொடர்பாக கிங் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர் ஷமீன் இப்ராஹிம் வரும் டிசம்பர் 7-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்துள்ளது.
 

Tags : Kanni Rasi Vimal
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT