செய்திகள்

சரியான நேரத்தில் உதவி செய்யுங்கள்: தவசி மறைவு குறித்து ரோபோ சங்கர் உருக்கம்

24th Nov 2020 12:57 PM

ADVERTISEMENT

 

புற்று நோயால் பாதிக்கப்பட்டு, மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நடிகா் தவசி நேற்றிரவு காலமானாா்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே மட்டப்பாறையைச் சோ்ந்தவா் திரைப்பட நடிகா் தவசி (60). இவருக்கு, கடந்த ஆண்டு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு, அதற்கான சிகிச்சையைப் பெற்று வந்தாா். இருப்பினும், போதிய பொருளாதார வசதியின்றி சிகிச்சையைத் தொடர முடியாமல், உடல்நிலைப் பாதிக்கப்பட்டாா்.

இதையடுத்து, மதுரையில் தனியாா் மருத்துவமனையில் நடிகா் தவசி அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தாா். அவா், வறுமையில் வாடுவதை அறிந்த பல்வேறு நடிகா்கள், வெளிநாடுவாழ் தமிழா்கள், ரசிகா்கள் மற்றும் பல்வேறு அமைப்பினா் அவரது மருத்துவச் சிகிச்சைக்கு நிதியுதவி செய்தனா்.

ADVERTISEMENT

இந்நிலையில், மருத்துவமனையில் கடந்த 10 நாள்களாக இருந்த தவசி, சிகிச்சைப் பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தாா். இவருக்கு, அங்கம்மாள் என்ற மனைவியும், மகன் பீட்டர்ராஜ், மகள் முத்தரசியும் உள்ளனா்.

இவா், கிழக்குச் சீமையிலே என்ற படத்தில் துணை நடிகராக அறிமுகமாகி, வருத்தப்படாத வாலிபா் சங்கம், ரஜினிமுருகன் உள்ளிட்ட 147 திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து புகழ்பெற்றாா். அவா், கடைசியாக ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவரவிருக்கும் அண்ணாத்த என்ற படத்தில் நடித்துள்ளாா்.

இந்நிலையில் தவசி மரணம் குறித்து நடிகர் ரோபோ சங்கர் விடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:

தவசி அண்ணனைக் கடைசியாக பார்த்தது நான் தான். எல்லோரும் நிறைய உதவி செய்திருக்கிறார்கள். அதற்கு நன்றி. அவர் இறந்த செய்தியைக் கேட்டு மிகவும் கஷ்டமாகிவிட்டது. இப்போதுதான் பார்த்துவிட்டு வந்தோமே, என்னிடம் ஐ ஆம் பேக் என்று கூட சொன்னாரே... என்று நினைத்துக் கஷ்டமாகி விட்டது. நம் திரைக்கலைஞர்களுக்கு நம் துறையைச் சேர்ந்தவர்கள், சரியான நேரத்தில் உங்களால் முடிந்த அளவு உதவி செய்யுங்கள். இந்த நோயை அவர் ஆரம்பத்திலேயே பார்த்திருந்தால் நிச்சயம் குணமாகியிருப்பார் என்றார்.

Tags : Thavasi Madurai Hospital
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT