செய்திகள்

தீபாவளி வெளியீடு: உறுதி செய்த மூன்று தமிழ்ப் படங்கள்!

10th Nov 2020 04:36 PM

ADVERTISEMENT

 

தீபாவளிக்குப் புதிய தமிழ்ப் படங்கள் வெளியாகும் என அறிவிப்பு வெளியானதையடுத்து தற்போது வரை தீபாவளி வெளியீடாக மூன்று படங்கள் உறுதியாகியுள்ளன. 

கரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க, கடந்த மாா்ச் இறுதியிலிருந்து திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. திரையரங்க உரிமையாளா்கள் மற்றும் திரைத்துறையினரின் கோரிக்கையை ஏற்று, கட்டுப்பாடுகளுடன் இன்று முதல் திரையரங்குகளைத் திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.

அரசின் அனுமதி அறிவிப்பு வந்தவுடனேயே திரையரங்குகளைத் தயாா்ப்படுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுள்ளன. இருப்பினும், புதிய திரைப்படங்கள் வெளியிடுவது தொடா்பான எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. 

ADVERTISEMENT

திரையரங்குகளைத் திறக்க 50 சதவீத இருக்கைகள் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் வி.பி.எஃப். கட்டணத்தை ரத்து செய்யாவிட்டால், புதிய படங்களை வெளியிட மாட்டோம் என்று தயாரிப்பாளா்கள் சங்கம் தெரிவித்துள்ளதால், புதிய பட வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அடுத்த இரு வாரங்களுக்குப் புதிய தமிழ்ப் படங்கள் வெளியாகும் என தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பாரதிராஜா கூறியுள்ளார். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

டிஜிட்டல் புரொஜக்‌ஷன் நிறுவனங்கள் தற்காலிகமாக இரு வாரங்களுக்கு வி.பி.எஃப் இல்லை என அறிவித்துள்ளது. இதை எங்கள் சிறு வெற்றியாகக் கருதி வி.பி.எஃப். கட்டணம் இல்லாத இந்த இரு வாரங்கள் மட்டும் எங்கள் திரைப்படங்களை திரையிட முடிவு செய்துள்ளோம். அதேசமயம் வி.பி.எஃப். கட்டி படங்கள் திரையிடுவதில்லை என்ற நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என்று கூறியுள்ளார். 

இதையடுத்து தீபாவளிக்கு வெளியீடாக இதுவரை மூன்று படங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இரண்டாம் குத்து, பிஸ்கோத், இவனுக்கு சரியான ஆள் இல்லை.

ஹரஹர மஹா தேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து, கஜினிகாந்த் ஆகிய தமிழ்ப் படங்களை இயக்கியவர் சந்தோஷ் பி ஜெயக்குமார். இதற்கு அடுத்ததாக இரண்டாம் குத்து என்கிற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் கதாநாயகனாகவும் அவர் நடித்துள்ளார். இப்படத்தின் போஸ்டரும் டீசரும் சமீபத்தில் வெளியாகின. 

ஆர். கண்ணன் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள படம் - பிஸ்கோத். தாரா அலிஷா பெர்ரி, ஸ்வாதி முப்லா, ஆடுகளம் நரேன், செளகார் ஜானகி போன்றோர் நடித்துள்ளார்கள். 

சரிலேரு நீக்கெவரு என்கிற தெலுங்குப் படம் இந்த வருடத் தொடக்கத்தில் வெளியானது. இதில் மகேஷ் பாபு, ராஷ்மிகா நடித்தார்கள். இந்தப் படம் தற்போது, இவனுக்கு சரியான ஆள் இல்லை என்கிற பெயரில் தமிழில் டப் ஆகி வெளியாகவுள்ளது.

இந்த மூன்று படங்கள் தவிர எம்.ஜி.ஆர். மகன், களத்தில் சந்திப்போம் உள்ளிட்ட வேறு சில படங்களும் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Irandam Kuththu Cinema
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT