செய்திகள்

கரோனாவால் ரஜினி - கமல் இணையும் படத்துக்குச் சிக்கல்?

14th May 2020 03:47 PM

ADVERTISEMENT

 

இந்தச் செய்தி கடந்த ஜனவரி மாதம் வெளியானது.

சிவா இயக்கத்தில் தற்போது நடித்து வரும் ரஜினி, அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.

ரஜினி, கமல் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் தமிழ்த் திரையுலகுக்கே இது பரபரப்பான விஷயமாக மாறியது. தமிழ்த் திரையுலகில் இப்படியொரு படமும் கூட்டணியும் இதுவரை நிகழாததால் இது தொடர்பான புதிய தகவல்களை அறிய ரசிகர்கள் மிகவும் ஆவலாக இருந்தார்கள்.

ADVERTISEMENT

மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராக் அடுத்ததாக கைதி என்கிற படத்தை இயக்கி அதை சூப்பர் ஹிட்டாக்கியதால் அவருக்குத் தமிழ்த் திரையுலகில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இதற்கடுத்து ரஜினி நடிக்கும் படத்தை லோகேஷ் இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகின.

சமீபத்தில் கடாரம் கொண்டான் படத்தைத் தயாரித்த ராஜ்கமல் நிறுவனம் அடுத்ததாக 83 என்கிற ஹிந்திப் படத்தைத் தமிழ்நாட்டில் வெளியிடுகிறது. இதற்கு அடுத்ததாக, ரஜினி - லோகேஷ் இணையும் படத்தை கமல் தயாரிக்கிறார் என்பதுதான் அடுத்தக்கட்டத் தகவலாக வெளியாகி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியது.

கமல் தயாரிப்பில் ரஜினி நடிப்பதால் அதுவே ரஜினி நடிக்கும் கடைசிப் படம், அதற்குப் பிறகு அவர் அரசியலுக்குள் நுழைந்துவிடுவார் என்றும் கூறப்பட்டது.

சமீபத்தில் நடைபெற்ற ஜீ சினிமா விருதுகள் நிகழ்ச்சியில் லோகேஷ் கனகராஜுக்கு விருது வழங்கினார் கமல். அப்போது பேசிய லோகேஷ், நான் யாரிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றியதில்லை. ஆனால் கமலின் அனைத்துப் படங்களையும் நான் பார்த்துள்ளேன். அவருடைய படங்கள் தான் கைதி படத்தை இயக்க எனக்கு ஊக்கமாக இருந்தது என்றார். பிறகு பேசிய கமல், என்னுடைய படங்கள் லோகேஷுக்கு ஊக்கமாக இருந்ததில் மகிழ்ச்சி. அப்படிப் பார்க்கும்போது நானும் கைதி படத்தின் இயக்குநர் தான். அவரைப் பற்றி இன்னும் சொல்லலாம். என்றாலும் அதை வேறொரு தருணத்தில் கூறுகிறேன் என்றார். இதனால் கமல் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் ஒரு படம் இயக்கவுள்ளார் என்றும் செய்திகள் வெளியாகின. ஆனால் அந்தப் படத்தின் கதாநாயகனாக கமல் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தை கமல் தயாரிக்கவுள்ளார் என்கிற அளவுக்கு இந்த விஷயம் அடுத்தக்கட்டத்துக்குச் சென்றது.

ரஜினி - கமல் இணையும் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கரோனா வைரஸின் பாதிப்பால் அனைத்துத் திட்டங்களும் மாற்றத்துக்கு ஆளாகியுள்ளதாகத் தெரிகிறது.

தா்பாா் படத்தையடுத்து சிவா இயக்கத்தில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இது ரஜினியின் 168-வது படம். கரோனா அச்சுறுத்தல் காரணமாகப் படப்பிடிப்புகள் ரத்தாகியுள்ள நிலையில் அண்ணாத்த படத்தின் வெளியீட்டுத் தேதியில் மாற்றம் உருவாகியுள்ளது. தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட அண்ணாத்த படம், அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா சிக்கல் வராமல் இருந்திருந்தால் ரஜினி - கமல் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி நிச்சயம் நிகழ்ந்திருக்க வாய்ப்புண்டு. ஆனால் தற்போதைய சூழலில் ரஜினியால் 2021-லும் தொடர்ந்து நடித்துக்கொண்டிருக்க முடியாது. அடுத்த வருடம் தமிழக அரசியலில் ரஜினி முழுநேரமும் செயல்பட வேண்டிய தேவை உள்ளது. இதனால் கமல் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் உருவாக வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது. வேறுவழியில்லாமல் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. எனினும் கமலிடமிருந்து இதுகுறித்து அதிகாரபூர்வத் தகவல் வரும் வரை காத்திருப்போம்.

Tags : Rajinikanth
ADVERTISEMENT
ADVERTISEMENT