செய்திகள்

அடுத்த வருடம் திருமணம் செய்ய இருந்தார் சுசாந்த் சிங்: தந்தை பேட்டி

26th Jun 2020 10:57 AM

ADVERTISEMENT

 

பிப்ரவரி - மார்ச் மாதத்தில் திருமணம் செய்ய சுசாந்த் சிங் திட்டமிட்டிருந்ததாக அவருடைய தந்தை கே.கே. சிங் கூறியுள்ளார்.

கிரிக்கெட் வீரா் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தோனி வேடத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான இளம் பாலிவுட் நடிகா் சுசாந்த் சிங் ராஜ்புத் (34) மும்பையில் உள்ள அவருடைய வீட்டில் ஜூன் 14 அன்று தற்கொலை செய்துகொண்டாா்.

திரைத்துறை மீதான ஆா்வத்தில் பொறியியல் படிப்பை பாதியில் கைவிட்ட சுசாந்த் சிங் ராஜ்புத், நடனம் மற்றும் நடிப்புக் கலைகளை முறைப்படி கற்று, திரைத் துறைக்குள் நுழைந்தாா். ஆரம்பத்தில் நடனக் கலைஞராகவும், சிறிய வேடங்களிலும் நடித்து வந்த அவா், 2013-இல் ‘காய் போ சே’ திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானாா். அதன் பிறகு, ‘சுத் தேசி ரொமான்ஸ்’, ‘ராப்டா’, ‘கேதா்நாத்’, சொன்சிரியா’ உள்ளிட்ட படங்களில் நடித்த அவா், கிரிக்கெட் வீரா் எம்.எஸ். தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் கதாநாயகனாக நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானாா். 

ADVERTISEMENT

இந்நிலையில் சுசாந்த் சிங்கின் தந்தை கே.கே. சிங், தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

ஆரம்பத்தில் சுசாந்த் மிகவும் வெளிப்படையாகப் பேசி வந்தார். ஆனால் கடைசிக் காலத்தில் சரியாக மனம் திறந்து பேசவில்லை. சுசாந்தின் முன்னாள் காதலி அங்கிதா மும்பையில் மட்டுமல்ல பாட்னாவுக்கு வந்து எங்களைச் சந்தித்தார். எங்களுக்குத் தெரிந்து சுசாந்த் காதலித்த ஒரே பெண் அவர் தான். ரியா பற்றி எங்களுக்குத் தெரியாது. 

திருமணம் செய்வது பற்றி சுசாந்திடம் முன்பு பேசினோம். கரோனா காலத்தில் தான் திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்று கூறினார். தன்னுடைய அடுத்த படம் வெளிவந்த பிறகு, பிப்ரவரி - மார்ச் மாதத்தில் திருமணம் செய்யலாம் என்றிருப்பதாக சுசாந்த் கூறினார். இதுதான் அவருடைய திருமணம் பற்றி அவரிடம் கடைசியாக நாங்கள் பேசியது. திருமணம் செய்யும் பெண்ணை அவரே தான் தேர்வு செய்யவேண்டும் எனக் கூறியிருந்தோம் என்றார்.

ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் சுசாந்த் சிங் நடித்த தில் பேசாரா படம் ஹாட்ஸ்டார் தளத்தில் ஜூலை 24 அன்று நேரடியாக வெளியாகவுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT