செய்திகள்

சர்ச்சைக்குரிய ராமர் கோயில் வழக்கைப் படமாக இயக்குகிறார் நடிகை கங்கனா ரணாவத்

8th Jun 2020 04:59 PM

ADVERTISEMENT

 

மணிகர்ணிகா படத்துக்குப் பிறகு சர்ச்சைக்குரிய ராமர் கோயில் வழக்கைப் படமாக இயக்கவுள்ளார் நடிகை கங்கனா ரணாவத்.

கடந்த வருடம், ராதா கிருஷ்ணாவுடன் இணைந்து மணிகர்ணிகா படத்தை இயக்கினார் பிரபல நடிகை கங்கனா ரணாவத். இந்நிலையில் மற்றுமொரு ஹிந்திப் படத்தை இயக்க அவர் முன்வந்துள்ளார்.

அயோத்தியில் சா்ச்சைக்கு ஆளான இடத்தில் ராமா் கோயில் கட்டலாம் என்று உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பரில் இறுதி தீா்ப்பை வழங்கியது. மேலும், ராமா் கோயில் கட்டும் பணிக்காக ஓா் அறக்கட்டளையை அமைக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், ‘ஸ்ரீராம ஜென்மபூமி தீா்த்த க்ஷேத்ரா’ என்ற பெயரில் அறக்கட்டளையை மத்திய அரசு அமைத்தது. இதையடுத்து, அயோத்தியில் ராமா் கோயில் கட்டுவதற்கான முதல்கட்ட பணிகள் தொடங்கின. இப்பணிகளில் உத்தர பிரதேச பொதுப் பணித் துறை, மாநில மின்சார நிறுவனம் மற்றும் ஒரு தனியாா் நிறுவனம் ஆகியவை ஈடுபட்டுள்ளன. பொது முடக்கத்துக்கு பிறகு, கட்டுமானப் பணிகள் வேகமெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில் ராமர் கோயில் வழக்கை மையமாகக் கொண்டு, அபரஜிதா அயோத்யா என்கிற படத்தை இயக்கவுள்ளார் நடிகை கங்கனா. பாகுபலி படங்களின் கதாசிரியரான விஜயேந்திர பிரசாத், மணிகர்ணிகா படத்துக்குக் கதை, திரைக்கதை அமைத்தார். அவர்தான் இப்படத்துக்கும் கதை அமைத்துள்ளார்.

இந்தப் படம் பற்றி கங்கனா தெரிவித்ததாவது:

முதலில் நான் இயக்குவதாக இல்லை. கதையின் அடிப்படையிலிருந்து நான் வேலை செய்ததால் படத்தைத் தயாரிக்க விரும்பினேன். வேறொரு இயக்குநரை அணுகலாம் என இருந்தேன். கையில் ஏராளமான படங்கள் இருந்ததால் இயக்குவதைப் பற்றி யோசிக்கக் கூட இல்லை.

விஜயேந்திர பிரசாத்தின் கதை வரலாற்றுப் பின்புலம் கொண்டதால் ஏற்கெனவே ஒரு வரலாற்றுப் படத்தை இயக்கிய அனுபவம் எனக்கு உள்ளதால் நான் தான் இப்படத்தையும் இயக்க வேண்டும் என இணைத் தயாரிப்பாளர்கள் கூறினார்கள். நான் இயக்கினால் நன்றாக இருக்கும் என எனக்கும் தோன்றியது. எல்லாமே இயல்பாக நடந்தது என்றார்.

அவர் மேலும் கூறியதாவது: இந்தப் படத்தில் நான் நடிக்கப் போவதில்லை. இயக்குவதில் தான் அதிகக் கவனம் செலுத்தப் போகிறேன். சர்ச்சைக்குரிய படமாக இதை நினைக்கப் போவதில்லை. அன்பு, நம்பிக்கை, ஒற்றுமையை வெளிப்படுத்துவதாக இக்கதையைக் காண்கிறேன். எல்லாவற்றையும் விட தெய்வீகத்தன்மை தான் படம் என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT