செய்திகள்

மின்சார வாரியத்துடன் முடிவுக்கு வந்த மோதல்: மின்சாரக் கட்டணத்தைச் செலுத்தினார் நடிகர் பிரசன்னா

4th Jun 2020 12:43 PM

ADVERTISEMENT

 

நடிகர் பிரசன்னா மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் இடையிலான மோதல் ஒரு முடிவுக்கு வந்துள்ளது.

கரோனா ஊரடங்கில் தமிழ்நாடு மின்சார வாரியம் கொள்ளையில் ஈடுபடுகிறது என்பதை எத்தனை பேர் உணர்கிறீர்கள் என்று கடந்த செவ்வாய் அன்று ட்வீட் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார் நடிகர் பிரசன்னா.

இதுபற்றி ஊடகங்களுக்குப் பேட்டியளித்த பிரசன்னா, என் வீட்டுக்கு மின்சாரக் கட்டணம் ரூ. 70,000-க்கும் அதிகமாக வந்துள்ளது. என் தந்தை, மாமனார் மற்றும் என்னுடைய வீட்டுக்கான இந்தக் கட்டணம் ஜனவரி மாதத்தை விடவும் அதிகமாக உள்ளது. என்னால் இந்தத் தொகையைக் கட்ட முடியும். ஆனால், சாதாரண மக்களால் கட்ட முடியாது என்றார்.

ADVERTISEMENT

பிரசன்னாவின் இந்தக் குற்றச்சாட்டுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் பதில் அளித்துள்ளது. பிரசன்னா வீட்டில் இரண்டு மின் இணைப்புகள் உள்ளன. மார்ச் மாதத்துக்கான ரூ. 13,528 கட்டணத்தை பிரசன்னா செலுத்தவில்லை. மின்சார வாரியத்தை கடும் சொற்களால் பிரசன்னா குற்றம்சாட்டுவது கண்டிக்கத்தக்கது. இரண்டு மாதங்களுக்கு ஒருமுறையே மின் கட்டணம் செலுத்தப்படுகிறது. நான்கு மாத மின்நுகர்வை இரண்டாகப் பிரித்து மின் கட்டணம் கணக்கிடப்படுகிறது. ஊரடங்கு காரணமாக பிரசன்னா வீட்டில் மின்நுகர்வைக் கண்டக்கிட முடியவில்லை. நான்கு மாதங்களுக்கான மொத்த நுகர்வு, 6920 யூனிட். முந்தைய மாதக் கட்டணத்தை பிரசன்னா செலுத்தாததால் மொத்தமாக அவர் செலுத்த வேண்டிய தொகை, ரூ. 44,152 என்று விளக்கம் அளித்துள்ளது.

இதையடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பிரசன்னா தெரிவித்திருப்பதாவது: கணக்கு எடுப்பதிலிருந்து 10 நாள்களுக்குள் கட்டணத்தைச் செலுத்தும் பக்கமுள்ளவன் நான். மார்ச் மாதம் கணக்கு எடுக்காததால் கட்டணத்தைச் செலுத்த தவறியது உண்மைதான். இதற்கு முன்பு காலதாமதம் இல்லாமல் கட்டணத்தைச் செலுத்தியுள்ளேன். மார்ச் மாதக் கட்டணத்தைச் சேர்த்ததால் எனக்குக் கூடுதலாக வந்திருக்கலாம். என்னுடைய தனிப்பட்ட பிரச்னையாக இந்த விவகாரத்தை எழுப்பவில்லை. அதிகத் தொகை கட்டணமாக வந்திருப்பதாக எத்தனை பேர் எண்ணுகிறார்கள் என்பதை அறிந்துகொள்ளவே ட்வீட் செய்தேன். மின் வாரியத்தைக் குறை சொல்வது என் நோக்கமல்ல. மின்கட்டணத்தில் ஒரு தளர்வோ கட்டணத்தைச் செலுத்த தவணையோ அவகாசமோ தந்தால் மிகவும் உதவியாக இருக்கும் என்பது என் வேண்டுகோள்.

என் வார்த்தைகள் மின்வாரிய ஊழியர்களை மனம்நோகச் செய்திருந்தால் அதற்காக வருந்துகிறேன். மின் கட்டணத்தின் முழுத் தொகையையும் இன்று காலையில் நான் செலுத்திவிட்டேன் என்று கூறியுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT