சென்னை: அமைதியாக கடந்து செல்வதே சிறந்தது என்று தனக்கு பாலிவுட்டில் வாய்ப்பு மறுக்கப்படுவது குறித்த சர்ச்சைக்கு ஏ.ஆர். ரஹ்மான் பதில் அளித்துள்ளார்.
மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் கடைசி படமான ‘தில் பேச்சாரா’ சமீபத்தில் ஒடிடி தளத்தில் வெளியானது. இப்படத்தின் இசையமைப்பாளரான ஏ.ஆர். ரஹ்மான், இதையொட்டி ரேடியோ மிர்ச்சி பண்பலை வானொலிக்கு அளித்த பேட்டியொன்றில் பேசியதாவது:
நல்ல படங்களுக்கு இசையமைக்க மாட்டேன் என நான் சொல்வதில்லை. தவறான புரிதால் ஒரு கூட்டம் எனக்கு எதிரான கருத்துகளைப் பரப்பி வருகிறது.
‘தில் பேச்சாரா இயக்குநர் முகேஷ் சாப்ரா என்னிடம் வந்தபோது இரு நாள்களில் அவருக்கு நான்கு பாடல்களைத் தந்தேன். உங்களிடம் செல்லக்கூடாது என எத்தனை பேர் சொன்னார்கள் தெரியுமா?! உங்களைப் பற்றி கதை கதையாகச் சொன்னார்கள் என்று என்னிடம் அவர் சொன்னார். அதைக் கேட்ட பிறகுதான் எனக்குப் புரிந்தது - நான் எதனால் பாலிவுட்டில் குறைவான படங்களுக்கு இசையமைக்கிறேன், எதனால் நல்ல படங்கள் எனக்கு வருவதில்லை என்று. கெடுதல் செய்வது தெரியாமல் எனக்கு எதிராக ஒரு கூட்டம் வேலை செய்கிறது.
நான் சிலவற்றைச் செய்யவேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் மற்றொரு கூட்டம் அது நடப்பதைத் தடுக்கிறது. பரவாயில்லை. எனக்கு விதியின் மீது நம்பிக்கை உண்டு. எல்லாமே கடவுள் மூலமாக வருவதாக நம்புகிறேன். எனக்கான படங்களை எடுத்துக்கொண்டு கூடவே மற்ற வேலைகளையும் செய்கிறேன். அனைவரையும் நான் வரவேற்கிறேன். அழகான படங்களை உருவாக்குங்கள், என்னை வந்து சந்தியுங்கள் என்று கூறி இருந்தார்.
ரஹ்மானின் இந்தக் குற்றசசாட்டு பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அவருக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் பாலிவுட் இயக்குநர் சேகர் கபூர் ரஹ்மானுக்கு ஆதரவாக் ட்வீட் செய்திருந்தார். அதற்கு பதிலளித்து ரஹ்மான் ட்விட்டரில், ‘இழந்த நேரத்தை மீட்க முடியாது. இழந்த பணத்தை மீட்டு விடலாம்; இழந்த புகழை மீட்டு விடலாம்; ஆனால் இழந்த நேரம் திரும்ப வராது. அமைதியாக கடந்து செல்வதே சிறந்தது; நாம் செய்ய வேண்டிய காரியங்கள் நிறைய உள்ளன என்று பதிவிட்டுள்ளார்.