செய்திகள்

சிம்பு நடிக்கும் மாநாடு: பொங்கல் அன்று நல்ல செய்தி!

1st Jan 2020 04:32 PM | எழில்

ADVERTISEMENT

 

பொங்கல் அன்று சிம்பு நடிக்கும் மாநாடு படம் குறித்த தகவல்கள் வெளியிடப்படும் என்று அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் மாநாடு என்கிற படம் உருவாகவுள்ளதாகக் 2018-ம் வருடம் அறிவிக்கப்பட்டது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு, 2019 கோடைக்காலத்தில் படம் வெளியாகும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. பிறகு 2019 ஜூன் 25 முதல் படப்பிடிப்பு தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், மாநாடு படத்திலிருந்து சிம்பு நீக்கப்பட்டதாக அறிவித்தார் படத்தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. எவ்வளவோ இழுத்துப் பிடித்தும் கால விரயம் தான் நிகழ்ந்ததே தவிர, படம் தொடங்க இயலவில்லை. அதனால் சிம்பு ’நடிக்க இருந்த’ மாநாடு படத்தைக் கைவிடுவதைத் தவிர்க்க இயலவில்லை. சிம்புவின் அன்பும் நட்பும் தொடரும். வெங்கட் பிரபு இயக்க, மாநாடு படம் எனது தயாரிப்பில் புதிய பரிமாணத்தோடு தொடங்கும். விரைவில் அந்த அறிவிப்பு வரும் என்று அவர் அறிக்கை வெளியிட்டார். இதன் பிறகு, சிம்புவின் புதிய படம் குறித்து டி.ராஜேந்தர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். சிம்பு அடுத்ததாக மகா மாநாடு என்கிற படத்தை இயக்கி நடிக்க உள்ளதாகவும் அந்தப் படத்தின் பட்ஜெட் ரூ. 125 கோடி என்றும் அறிவித்தார். 5 மொழிகளில் உருவாகவுள்ள இந்தப் படத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரிக்கவுள்ளது என்றும் கூறினார். 

எனினும் திடீர் திருப்பமாக சில வாரங்களுக்கு முன்பு, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி - சிம்பு இடையே புதிய ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி, மாநாடு படத்தில் நடிக்க தான் தயாராக இருப்பதாக சிம்பு அறிவித்தார். படப்பிடிப்புக்குச் சரியாக வந்து ஒத்துழைப்பு கொடுப்பதாகவும் அவர் உத்தரவாதம் அளித்ததால் மாநாடு படத்துக்கு மீண்டும் உயிர் வந்தது.

ADVERTISEMENT

இந்நிலையில் மாநாடு படத்தின் புதிய தகவல் குறித்து பதிவு எழுதியுள்ளார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. அவர் கூறியதாவது:

சிம்பு ரசிகர்களுக்கு, மாநாடு படத்தின் புதிய தகவல்.

நடிகர்கள் மற்றும் படக்குழுவினரின் பட்டியலுடன் படப்பிடிப்புத் தேதியை பொங்கல் அன்று அறிவிக்கிறேன். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT