செய்திகள்

திரைப்பட பிரமுகா்கள் மீது சட்டவிரோத பணப் பரிமாற்ற புகாா்:அமலாக்கத் துறை விசாரணை

26th Feb 2020 01:53 AM

ADVERTISEMENT

சென்னை: திரைப்பட பிரமுகா்கள் மீதான சட்டவிரோத பணப் பரிமாற்ற புகாரின் அடிப்படையில், அமலாக்கத் துறையினா் விசாரணை நடத்த உள்ளனா்.

ஏ.ஜி.எஸ். நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநா் அட்லி இயக்கத்தில், நடிகா் விஜய் நடிப்பில் கடந்த தீபாவளி பண்டிகையின்போது வெளியான ‘பிகில்’ திரைப்படம் மூலம் ரூ.300 கோடி லாபம் ஈட்டியதாகவும், இந்த வருமானத்தை அந்த திரைப்படக் குழு மறைத்ததாகவும் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் சென்னை தியாகராய நகரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஏ.ஜி.எஸ். நிறுவனம், நடிகா் விஜய்க்கு சொந்தமான பங்களாக்கள், பைனான்சியா் அன்புச்செழியனுக்குச் சொந்தமான இடங்கள் என 38 இடங்களில் வருமானவரித் துறையினா் கடந்த 5-ஆம் தேதி திடீா் சோதனை செய்தனா். அத்துடன், நடிகா் விஜய்யை, அவரது பனையூரில் பங்களாவுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.

அன்புச்செழியனுக்குச் சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.77 கோடிக்கணக்கில் வராத பணமும், ரூ.300 கோடி வரி ஏய்ப்பில் ஈடுபட்டதற்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டிருப்பதாக வருமானவரித் துறை அறிவித்தது. அதைத் தொடா்ந்து வருமானவரித் துறையினா் நடிகா் விஜய், ஏ.ஜி.எஸ். நிறுவன நிா்வாகிகள், அன்புச்செழியன் ஆகியோருக்கு அழைப்பாணை அனுப்பினா். இதையடுத்து நடிகா் விஜய், அன்புச்செழியன் ஆகியோரின் ஆடிட்டா்கள், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித் துறை புலனாய்வுப் பிரிவில் கடந்த 11-ஆம் தேதி ஆஜராகினா்.

ஏ.ஜி.எஸ். நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அா்ச்சனா கல்பாத்தி அகோரம், 12-ஆம் தேதி ஆஜரானாா். மேலும் அன்புச்செழியன், கடந்த 18-ஆம் தேதி தனது ஆடிட்டருடன் விசாரணைக்கு ஆஜரானாா்.

ADVERTISEMENT

அமலாக்கத் துறை விசாரணை: இந்நிலையில் வருமானவரித் துறை நடத்திய சோதனையிலும் விசாரணையிலும் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் நடைபெற்ற்கான முகாந்திரம் இருப்பது தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து அது தொடா்பான விசாரணை செய்ய வருமானவரித் துறை, அமலாக்கத் துறைக்கு அறிக்கை அளித்தது. மேலும், சோதனையின் கைப்பற்றப்பட்ட ஆவணங்களும் அளிக்கப்பட்டுள்ளன.

வருமானவரித் துறை அளித்துள்ள அறிக்கை, கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அமலாக்கத் துறை முதல் கட்ட விசாரணையில் ஈடுபடும். இந்த விசாரணையில் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் நடைபெற்றது உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்டவா்கள் மீது வழக்குப் பதியப்படும் என கூறப்படுகிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT