செய்திகள்

யாரைக் காப்பாற்ற ஹேம்நாத்தைக் கைது செய்தார்கள்?: சித்ராவின் மாமனார் பேட்டி

15th Dec 2020 03:17 PM

ADVERTISEMENT

 


யாரைக் காப்பாற்ற ஹேம்நாத்தைக் கைது செய்தார்கள் எனத் தெரியவில்லை என்று நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் அவருடைய மாமனார் ரவிச்சந்திரன் பேட்டியளித்துள்ளார். 

நடிகை சித்ரா சில தினங்களுக்கு முன்பு பூந்தமல்லி அருகே உள்ள தனியாா் விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். அவரது இறப்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக சித்ராவின் தந்தை காமராஜ், நசரத்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், சித்ராவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஹேம்நாத்திடம் காவல்துறையினா் கடந்த 4 நாள்களாக விசாரணை நடத்தி வந்தனா்.

ஹேம்நாத்தும் சித்ராவும் ஏற்கெனவே பதிவுத் திருமணம் செய்து கொண்டதால் சித்ராவின் இறப்பு குறித்து கோட்டாட்சியா் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி, ஸ்ரீபெரும்புதூா் வருவாய்க் கோட்டாட்சியா் திவ்யஸ்ரீ, சித்ராவின் தாய் விஜயா, அக்கா சரஸ்வதி, புகாா்தாரரும் தந்தையுமான காமராஜ், அண்ணன் சரவணன் ஆகியோரிடம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை 3 மணிநேரத்துக்கு விசாரணை நடத்தினாா்.

ADVERTISEMENT

சித்ராவின் கணவா் ஹேம்நாத்திடம் வருவாய்க் கோட்டாட்சியா் இன்று விசாரணை நடத்த இருந்தார். இந்நிலையில் நேற்றிரவு, காவல்துறையினரால் ஹேம்நாத் கைது செய்யப்பட்டார். பல முக்கியமான ஆதாரங்களின் அடிப்படையில் சித்ராவைத் தற்கொலைக்குத் தூண்டியதாக ஹேம்நாத் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தற்போது பொன்னேரி சிறையில் அவரை அடைத்துள்ளார்கள். டிசம்பர் 28-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.

நேற்று, சித்ராவின் பெற்றோரிடம் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்ட நிலையில் இன்று ஹேம்நாத்தின் பெற்றோரை நேரில் அழைத்து விசாரணை செய்தார். 

விசாரணைக்குப் பிறகு, ஹேம்நாத்தின் தந்தை ரவிச்சந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

ஆறு நாள்களாகக் காவல்துறையின் விசாரணை நடைபெற்று வருகிறது. இன்று கோட்டாட்சியர் மேடத்தைச் சந்தித்துள்ளேன். நியாயமாகப் பார்த்தால் இன்று என் மகனும் இந்த விசாரணையில் கலந்துகொண்டிருக்க வேண்டும். ஆனால் நேற்று அவரை அவசரகதியில் கைது செய்துவிட்டார்கள். எதனால் என்று எனக்குப் புரியவில்லை. என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. யாரைக் காப்பாற்றுவதற்காக இது நடக்கிறது என்றும் புரியவில்லை. நாங்கள் வரதட்சணை எதுவும் கேட்கவில்லை. அவர்கள் குடும்பத்துக்கு இது தெரியும். சித்ராவின் தந்தையும் இதுபற்றி பேட்டியளித்துள்ளார். இன்றைய விசாரணையில் எங்களுக்குத் தெரிந்ததைச் சொல்லியிருக்கிறோம் என்றார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT