செய்திகள்

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட நடிகை சனம் ஷெட்டி: ரசிகர்கள் அதிர்ச்சி!

7th Dec 2020 12:51 PM

ADVERTISEMENT

 

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நடிகை சனம் ஷெட்டி குறைந்த வாக்குகளின் அடிப்படையில் வெளியேற்றப்பட்டிருப்பது ரசிகர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி, இந்த வருடம் கரோனா அச்சுறுத்தல் காரணமாக தாமதமாகத் தொடங்கியுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், இந்த முறையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

ரம்யா பாண்டியன், ஆஜித், ஆரி, அனிதா சம்பத், வேல் முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி, சோம், ஷிவானி, சனம் ஷெட்டி, பாலா, கேப்ரியலா, ஜித்தன் ரமேஷ், அறந்தாங்கி நிஷா, ரேகா, ரியோ, சம்யுக்தா என 16 பேர் பிக் பாஸ் இல்லத்துக்குள் முதலில் நுழைந்தார்கள். பிரபல தொகுப்பாளர் அர்ச்சனா மற்றும் பிரபல பாடகி மற்றும் ரேடியோ ஜாக்கியுமான சுசித்ரா ஆகியோர் வைல்ட் கார்ட் வழியாக புதிய போட்டியாளர்களாக நுழைந்தார்கள். 

ADVERTISEMENT

இந்த வருட பிக் பாஸ் போட்டியில் முதலில் வெளியேறியவர் மூத்த நடிகை ரேகா. பாடகர் வேல்முருகன் 2-வது போட்டியாளராகவும் அடுத்ததாக நடிகர் சுரேஷ் சக்ரவர்த்தியும் வெளியேறினார்கள். இதையடுத்து பாடகி சுசித்ரா, மாடல் சம்யுக்தா ஆகியோரும் வெளியேறியுள்ளார்கள். 

இந்நிலையில் மக்களின் குறைந்த வாக்குகளைப் பெற்றதாக நடிகை சனம் ஷெட்டி தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். இதனால் பிக் பாஸ் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள். இதையடுத்து சமூகவலைத்தளங்களில் சனம் ஷெட்டிக்கு ஆதரவாகவும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராகவும் பலர் பதிவுகள் எழுதியுள்ளார்கள்.

பிக் பாஸ் இல்லத்தில் குழு மனப்பான்மை அதிகமாக உள்ளதாக ரசிகர்கள் மட்டுமல்லாமல் கமலும் போட்டியாளர்களிடம் குற்றம் சாட்டியுள்ளார்கள். பாலா, அர்ச்சனா, ரியோ போன்றோர் தங்களுக்கென ஒரு குழுவை ஏற்படுத்திக்கொண்டு விளையாடுவதாகப் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். இவர்களுடைய நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாகக் கேள்வி கேட்டு வந்தவர் தான் சனம் ஷெட்டி. இதனால் சக போட்டியாளர்களுடன் பலமுறை மோதியுள்ளார்கள். முக்கியமாக பாலாவுக்கு இவருக்கும் பலமுறை சண்டை நிகழ்ந்துள்ளது.

பாலா, அர்ச்சனா, ரியோவின் நடவடிக்கைகளை சனம் ஷெட்டி தொடர்ச்சியாகக் கேள்வி கேட்டு வந்ததால் நிகழ்ச்சியும் சுவாரசியமாக இருந்தது. இதனால் சனம் ஷெட்டிக்கு ஏராளமான ரசிகர்கள் உருவானார்கள். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து திடீரென சனம் ஷெட்டி வெளியேற்றப்பட்டிருப்பது பார்வையாளர்களிடையே அதிருப்தியை உருவாக்கியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு இதுவரை பெரிதும் பங்களிக்காத ஷிவானி, ஆஜித், சோம், நிஷா, கேப்ரியலா, ரமேஷ் ஆகியோர் நிகழ்ச்சியில் தொடர்ந்து நீடிக்கும்போது பல சுவாரசியத் தருணங்களை உருவாக்கிய சுரேஷ் சக்ரவர்த்தி, சனம் ஷெட்டி போன்றோர் வெளியேற்றப்பட்டிருப்பது பல கேள்விகளை உருவாக்குகிறது. இதனால் சனம் ஷெட்டிக்கு ஆதரவான பல பதிவுகளைச் சமூகவலைத்தளங்களில் காண முடிகிறது. மேலும் ரசிகர்களும் நிகழ்ச்சியில் யார் நீடிக்க வேண்டும், யார் வெளியேறவேண்டும் என்பதில் தெளிவான முடிவுகளை எடுக்காததாலும் வாக்களிப்பதில் அலட்சியம் காட்டுவதாலும் பல தகுதியான போட்டியாளர்கள் வெளியேற்றப்படுவதாகவும் ரசிகர்கள் பலர் குறைப்பட்டுக் கொள்கிறார்கள். ஹாட்ஸ்டார் செயலியில் மட்டும் வாக்களிக்கும் முறை இருப்பதால் பலராலும் வாக்களிக்க முடியாத நிலை ஏற்படுவதாகவும் தெரிகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாக்களிப்பதில் பல குழப்பங்கள் உள்ளதால் நிகழ்ச்சிக்குச் சுவாரசியத்தைத் தரும் போட்டியாளர்கள், தொடர்ந்து நீடிக்க பிக் பாஸ் நிர்வாகம் ஏதாவது வழி செய்ய வேண்டும் என்றும் சிலர் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

இதற்குப் பிறகாவது ஷிவானி, ஆஜித், சோம், நிஷா போன்றவர்கள் தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்தி, எந்தக் குழுவிலும் சேராமல் தனித்தன்மையுடன் போட்டியை விளையாட வேண்டும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT