செய்திகள்

திருமணத்துக்குப் பிறகு இரு தமிழ்ப் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள காஜல் அகர்வால்!

5th Dec 2020 04:39 PM

ADVERTISEMENT

 

திருமணத்துக்குப் பிறகு டீகேவின் இயக்கத்தில் நடிக்கவுள்ள காஜல் அகர்வால் அடுத்ததாக இயக்குநர் கல்யாணின் அடுத்த படத்திலும் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிரபல நடிகையாக உள்ளார் காஜல் அகர்வால். தமிழில் கடைசியாக, இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில், ஜெயம் ரவிக்கு ஜோடியாக கோமாளி திரைப்படத்தில் நடித்திருந்தார். 

தொழிலதிபர் கெளதம் கிச்லுவை சமீபத்தில் திருமணம் செய்தார் காஜல் அகர்வால். மும்பையில் உள்ள தாஜ்மஹால் பேலஸ் ஹோட்டலில் நடைபெற்ற திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டார்கள்.

ADVERTISEMENT

திருமணத்துக்குப் பிறகு இரு தமிழ்ப் படங்களில் நடிக்க காஜல் அகர்வால் ஒப்புக்கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

டிகேவின் இயக்கத்தில் திகில் படமொன்றில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் காஜல் அகர்வால். யாமிருக்க பயமே, கவலை வேண்டாம், காட்டேரி ஆகிய படங்களை இயக்கியவர் டீகே. ஸ்டூடியோ கிரீன் தயாரித்துள்ள காட்டேரி படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. வைபவ், வரலட்சுமி சரத்குமார், ஆத்மிகா, சோனம் பாஜ்வா, கருணாகரன், பொன்னம்பலம் போன்றோர் நடித்துள்ளார்கள்.

தற்போது மற்றுமொரு பேய்க்கதையைப் படமாக்க டீகே தயாராகியுள்ளார். நான்கு கதாநாயகிகள் நடிக்கும் இப்படத்தில் காஜல் அகர்வாலும் நடிக்கிறார். இதற்கு முன்பு டீகே இயக்கத்தில் கவலை வேண்டாம் படத்தில் நடித்திருந்தார் காஜல் அகர்வால்.

சமீபத்தில் தன் கணவருடன் சென்னை வந்த காஜல் அகர்வால், டீகேவுடன் இணைந்து படம் பற்றி விவாதித்துள்ளார். மூவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

இதுதவிர, ஜாக்பாட், குலேபகாவலி போன்ற படங்களை இயக்கிய கல்யாணின் அடுத்த படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார் காஜல் அகர்வால். 20-க்கும் மேற்பட்ட நகைச்சுவை நடிகர்களுடன் முன்னணி கதாநாயகன் ஒருவரும் இப்படத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஷங்கர் இயக்கத்தில் கமலுடன் இணைந்து நடிக்கும் இந்தியன் 2, சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா, துல்கர் சல்மானுடன் ஹே சினாமிகா, இயக்குநர்கள் டீகே, கல்யாணின் படங்கள் என திருமணத்துக்குப் பிறகு ஐந்து படங்களில் தொடர்ந்து நடிக்கவுள்ளார் காஜல் அகர்வால்.

காஜல் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மற்றொரு தமிழ்ப் படம், பாரிஸ் பாரிஸ். கங்கனாவிற்கு தேசிய விருதைப் பெற்றுக் கொடுத்த குயின் படத்தின் ரீமேக்காக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் ஓடிடியில் வெளியாகும் எனத் தெரிகிறது. 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT