செய்திகள்

"விவேகம்' திரைப்படத்தின் வெளிநாட்டு உரிமை வழங்கியதில் மோசடி: தயாரிப்பாளர் மீது வழக்குப் பதிய உத்தரவு

22nd Sep 2019 12:39 AM

ADVERTISEMENT

நடிகர் அஜீத் நடித்த "விவேகம்' திரைப்படத்தின் வெளிநாட்டு உரிமை வழங்கியதில் மோசடி செய்த விவகாரம் தொடர்பாக, மலேசிய நிறுவனம் அளித்த புகாரின் அடிப்படையில், தயாரிப்பாளர் தியாகராஜன் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மலேசியாவைச் சேர்ந்த டி.எஸ்.ஆர். பட நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கிளாட்டஸ் பிரெட்ரிக் ஹென்றி என்பவர் தாக்கல் செய்த மனுவில், "நடிகர் அஜீத் நடித்த "விவேகம்' திரைப்படத்தின் மலேசியா, தாய்லாந்து, புரூனே உள்ளிட்ட தெற்காசிய நாடுகளின் வெளியிடும் உரிமையை எங்களது நிறுவனம் வாங்கியது. 
இதற்காக கடந்த 2017-ஆம் ஆண்டு சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் நிர்வாக பங்குதாரர் தியாகராஜனிடம் ரூ.4.25 கோடி செலுத்தி ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.
ஆனால், மலேசியாவைச் சேர்ந்த மற்றொரு பட நிறுவனம் திரைப்படத்தின் விநியோக உரிமையைப் பெற்றுள்ளதாகக் கூறி, எங்களுக்கு வழக்குரைஞர் நோட்டீஸ் அனுப்பியது. இந்த விவகாரத்தில் தியாகராஜன் எங்களை ஏமாற்றி மோசடி செய்துள்ளார். இதுதொடர்பாக அவரிடம் கேட்டபோது சரிவர பதில் அளிக்கவில்லை.  இந்த மோசடி குறித்து கடந்த 2017-ஆம் ஆண்டு சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தோம். அந்தப் புகாரின் பேரில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சத்யஜோதி பிலிம்ஸ் நிர்வாக பங்குதாரர் தியாகராஜன் மீது வழக்குப்பதிவு செய்ய போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும்' எனக் கோரியிருந்தார். 
இந்த மனு நீதிபதி பி.நாகராஜன் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர் பி.தீபிகா ஆஜரானார்.  இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, "மனுதாரரின் குற்றச்சாட்டில் முகாந்திரம் உள்ளது. எனவே மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர், மனுதாரரின் புகார் மீது வழக்குப்பதிவு செய்ய ஆய்வாளருக்கு உத்தரவிட வேண்டும்.  அதன்படி ஆய்வாளர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை விரைவாக நடத்தி குற்றப்பத்திரிக்கையை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT