‘சின்னச் சின்ன ஆசை' பாடல் புகழ் மின்மினி குறித்தொரு தகவல்!

இப்போது மின்மினி மீண்டும் பாடத்தயார். அவரது குரலை பயன்படுத்திக் கொள்ள இன்றைய இசையமைப்பாளர்கள் தயாரா? என்பது தான் அது. நியாயமான வேண்டுகோள் தானே இது.
‘சின்னச் சின்ன ஆசை' பாடல் புகழ் மின்மினி குறித்தொரு தகவல்!

இப்போ இவர் பாடத் தயார், இசையமைப்பாளர்களே வாய்ப்புத் தருவீங்களா?

முகநூலில் நண்பர் ஒருவர் பாடகி மின்மினி குறித்து நீண்ட கட்டுரை ஒன்றைப் பதிவிட்டிருந்தார். இசை விமர்சகர் ஷாஜி எழுதிய கட்டுரை அது. தமிழ்நாட்டில் சின்னச் சின்ன ஆசை, சிறகடிக்க ஆசை பாடலை அறியாதவர் எவரும் இருக்க வாய்ப்பில்லை. 90 களில் ஏ.ஆர். ரகுமான் இசையில், இயக்குனர் மணிரத்னத்தின் ‘ரோஜா’ திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் அது. இன்றும் கூட பள்ளிசிறுவர், சிறுமியர் தங்களது பள்ளி ஆண்டு விழாக்களிலும், கல்ச்சுரல் நிகழ்ச்சிகளிலும் இந்தப் பாடலுக்குத்தான் பாடி ஆடிக்கொண்டிருக்கிறார்கள். அந்த அளவுக்கு தமிழகத்தில் பட்டி, தொட்டியெங்கும் சென்றடைந்த படு பிரபலமான பாடல் அது. பலரையும் போல அந்தப் பாடல் தான் பாடகி மின்மினியின் முதல் பாடல் எனவே நானும் நினைத்திருந்தேன். இப்போது ஷாஜியின் கட்டுரையை வாசித்த பின்பு அந்தப் பாடல் குறித்து மட்டுமல்ல பாடகி மின்மினி குறித்தும் பல அறிந்திராத தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது. 

நடுவில் திடீர், திடீரென நினைத்துக் கொண்டு தமிழ் ஊடகங்களில் பாடகி மின்மினி குறித்த செய்திகள் வருவதுண்டு. பிறகு ஒன்றுமில்லாமலாகி விடும்.

பிறகும் ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் ’சின்னச் சின்ன ஆசை பாடலைப் பாடிய பாடகி மின்மினி எங்கே போய்விட்டார்? இப்போது அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? என்று கன அக்கறையாக யாரேனும் விசாரிப்பார்கள், அதற்கு யாரேனும் ஒருவர் அவர் அறிந்த ஏதேனும் ஒரு தகவலை பகிர்வார். அத்துடம் முடியும் மின்மினி குறித்த விசாரணை. 

ஆனால், இந்தக் கட்டுரை அப்படி ஒற்றை வரியில் மின்மினி குறித்துப் பகிரவில்லை.

இக்கட்டுரையில் மின்மினி இதுவரை பாடிய அத்தனை அருமையான பாடல்களைப் பற்றிய தகவல்களும் மிக ரசனையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. அத்துடன் அவ்வளவு பிஸியாகப் பாடிக்கொண்டிருந்த அந்த இசையரசி திடீரென ஏன் திரையிசை உலகில் இருந்து மாயமாகி மறைந்தார்? காரணம் என்ன? மினிமினிக்கு நடந்தது என்ன? அதிலிருந்து அவர் மீண்டாரா? மீண்டவர் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்? எல்லாமும் சொல்கிறது இந்தக் கட்டுரை.

கட்டுரையை விளம்பரப்படுத்த இதை நான் பகிரவில்லை. அந்தக் கட்டுரையின் இறுதியில் சொல்லப்பட்ட விஷயமொன்று சின்ன சின்ன ஆசை பாடலுக்கு நானும் ரசிகை என்ற வகையில் என்னை உறுத்திக் கொண்டே இருந்தது. 

ஆம், சின்னச் சின்ன ஆசை மட்டுமல்ல, அதைத் தொடர்ந்து, அரண்மனைக்கிளி திரைப்படத்தின் ‘அடி பூங்குயிலே பூங்குயிலே கேளு’ சின்ன மாப்பிள்ளை திரைப்படத்தின் ‘கண்மணிக்குள் சின்னச் சின்ன மின்மினிகள் மின்ன மின்ன’ எங்க தம்பி படத்தின் ‘மலையோரம் மாங்குருவி மாவிலையில் பாட்டெழுதி’ ஐ லவ் இந்தியா திரைப்படத்தில் வரும் ‘ குறுக்குப் பாதையில மறிச்சு வழியில் நின்னு’ வண்டிச்சோலை சின்னராசுவில் ‘சித்திரை நிலவு சேலையில் வந்தது’ போன்ற பல பாடல்கள் மின்மினியின் எலெக்ட்ரிக் குரலில் நம்மை அப்படியே பாடலோடு பாடலாகக் கட்டிப்போட்டு இன்று வரையில் அந்தப் பாடல்களைக் கேட்ட மாத்திரத்தில் ஹம் செய்ய வைப்பவை. 

தன் குரலால் நம்மை மயக்கிய அந்தப் பாடகி அதற்கப்புறம் என்ன ஆனார்? என்று தெரிந்து கொண்டதில் வருத்தம் மிஞ்சினாலும் இப்போது அவர் தனக்கு நேர்ந்த சிரமத்தில் இருந்து மீண்டு விட்டார் என்று ஷாஜி கட்டுரை வாயிலாக அறிய முடிந்தது.

அதில் மின்மினிக்காக அவர் ஒரு வேண்டுகோள் வைத்திருந்தார்.

இப்போது மின்மினி மீண்டும் பாடத்தயார். அவரது குரலை பயன்படுத்திக் கொள்ள இன்றைய இசையமைப்பாளர்கள் தயாரா? என்பது தான் அது.

நியாயமான வேண்டுகோள் தானே இது.

இன்றைய பிரபல இசையமைப்பாளர்களின் கவனத்துக்குச் செல்லுமா மின்மினியின் இந்த வேண்டுகோள்.

தினமணி மூலமாக அதற்கொரு வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சியே!

Image courtesy: mazhavil manorama

Thanks to Shaji

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com