செய்திகள்

அப்படியே கொஞ்சம் இந்தப் படத்துக்கும் ஒரு வழி சொல்லுங்களேன்: கெளதம் மேனனிடம் முறையிட்ட இளம் இயக்குநர்!

4th Nov 2019 12:01 PM | எழில்

ADVERTISEMENT

 

கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ், சுனைனா, சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் - எனை நோக்கி பாயும் தோட்டா. இசை - தர்புகா சிவா. இதன் படப்பிடிப்பு 2016-ல் தொடங்கி, செப்டம்பர் 2018-ல் முடிந்தது. ரசிகர்களின் எதிர்பார்ப்பில் உள்ள இந்தப் படம், செப்டம்பர் 6 அன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. படத்தைத் தயாரித்த நிறுவனத்துக்குச் சில கடன்கள் நிலுவையில் உள்ளதால் அந்தப் பிரச்னை காரணமாக இப்படத்தின் வெளியீடு மீண்டும் தள்ளிவைக்கப்பட்டது. பலமுறை தாமதமான இப்படத்தின் வெளியீட்டுக்கு ஒரு தீர்வு கிடைத்துள்ளது. ஐசரி கணேஷின் வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் இப்படத்தை வெளியிட முடிவு செய்துள்ளது. அதன்படி, நவம்பர் 29 அன்று எனை நோக்கி பாயும் தோட்டா படம் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதவிர ஐசரி கணேஷின் உறவினரான வருண் நடிப்பில் ஜோஷுவா - இமை போல் காக்க என்கிற படத்தையும் இயக்குகிறார் கெளதம் மேனன். இந்தப் படத்தையும் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். ஜோஷுவா, அடுத்த வருடம் பிப்ரவரி 14 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு படங்களின் வெளியீட்டுக்கும் ஐசரி கணேஷ் பொறுப்பேற்றுக்கொண்டதால், விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் துருவ நட்சத்திரம் படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார் கெளதம் மேனன். அடுத்த 60 நாள்களில் இந்தப் பணிகள் முடிந்து படம் வெளிவரும் என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புகள் எல்லாம் சனிக்கிழமை அன்று வெளியாகின. இதனால் ஒரே நாளில் கெளதம் மேனனின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு ஏற்பட்டதாக ரசிகர்கள் உணர்ந்துள்ளார்கள். இந்த நடவடிக்கைகளால் வரும் மாதங்களில் கெளதம் மேனின் படங்கள் அடுத்தடுத்து வெளியாகும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஆனால் இன்னொரு பிரச்னை இருக்கிறதே, அதற்கு எப்போது தீர்வு காணப் போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார் இளம் இயக்குநர் கார்த்திக் நரேன்.  

ADVERTISEMENT

துருவங்கள் 16 படத்தின் மூலம் அதிகக் கவனம் பெற்ற இயக்குநர் கார்த்திக் நரேனின் அடுத்தப் படம் - நரகாசூரன். அரவிந்த சாமி, இந்திரஜித், சுந்தீப் கிஷன், ஸ்ரேயா சரண், ஆத்மிகா போன்றோர் நடித்துள்ள இப்படத்துக்கு இசை - யோகன். இந்தப் படம் கடந்த வருடம் ஆகஸ்ட் 31 அன்று வெளிவருவதாக இருந்தது. பிறகு செப்டம்பர் 13 அன்று வெளிவருவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்றுவரை இந்தப் படம் வெளியாகவில்லை. 

கெளதம் மேனன் மற்றும் பத்ரி கஸ்தூரி ஆகிய இருவரும் இணைந்து நரகாசூரன் படத்தைத் தயாரிக்கவுள்ளதாக ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால் பட வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டதால், சமூகவலைத்தளங்களில் ஒருவரையொருவர் புகழ்ந்து எழுதிய கெளதம் மேனனும் கார்த்திக் நரேனும் திடீரென ஒருவரையொருவர் தாக்கிப் பதிவுகளை எழுதினார்கள். பிறகு, எனக்கும் கார்த்திக் நரேனுக்கும் இடையிலான இந்தக் கருத்துவேறுபாடுகள் களையப்பட்டு விட்டன. படம் விரைவில் வெளிவருவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறோம் என்று கடந்த வருடம் கூறினார் கெளதம் மேனன். 

இந்நிலையில் தற்போது தனது அடுத்தடுத்தப் படங்களின் தகவல்கள் குறித்து கெளதம் மேனன் வெளியிட்ட ட்வீட்களுக்குப் பதில் அளித்துள்ளார் இயக்குநர் கார்த்திக் நரேன். அதில் அவர் கூறியதாவது: நரகாசூரன் படம் எப்போது வெளிவரும் என்று சொன்னால் உதவியாக இருக்கும் சார். இந்தப் படம் என் மனத்துக்கு நெருக்கமானது என்று கூறியுள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT