மன்னிப்பு கோரி, சர்ச்சைக்குரிய ட்வீட்டை நீக்கினார் விவேக் ஓப்ராய்!

பலதரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்புகள் வந்த நிலையில் சர்ச்சைக்குரிய அந்த ட்வீட்டை நீக்கியுள்ளார் விவேக் ஓப்ராய்...
மன்னிப்பு கோரி, சர்ச்சைக்குரிய ட்வீட்டை நீக்கினார் விவேக் ஓப்ராய்!

மக்களவைக்கு 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தல் ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது. மொத்தம் 542 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றுள்ளது. மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்று பெரும்பாலான வாக்குக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. அந்தக் கூட்டணி 300-க்கும் அதிகமான தொகுதிகளைக் கைப்பற்றும் என்று சில முடிவுகள் தெரிவிக்கின்றன. இதனால், மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைவதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளன.

இந்த வாக்குக் கணிப்பு குறித்த அநாகரிகமான மீம் ஒன்றைப் பகிர்ந்து ரசிகர்களின் கண்டனத்துக்கு ஆளாகியுள்ளார் பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓப்ராய். அவர் பகிர்ந்த மீமில், ஐஸ்வர்யா ராய் - சல்மான் கான் உள்ள புகைப்படத்தைக் கருத்துக் கணிப்பு என்றும் ஐஸ்வர்யா ராய் - விவேக் ஓப்ராய் உள்ள படத்தை வாக்குக் கணிப்பு என்றும் தேர்தல் முடிவுகள் என ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் - இந்தத் தம்பதியரின் மகள் ஆகியோரைக் கொண்ட படத்தையும் குறிப்பிட்டிருந்தது. 

ஐஸ்வர்யா ராய் - சல்மான் குறித்த காதல் செய்திகள் 2000-ம் ஆண்டு வெளிவந்தன. ஆனால் இருவரும் 2002-ல் பிரிந்தார்கள். பிறகு ஐஸ்வர்யா ராய், விவேக் ஓப்ராயைக் காதலிப்பதாகச் செய்திகள் வெளியாகின. ஆனால் இது பற்றி ஐஸ்வர்யா ராய் எதுவும் பேசியதில்லை. 2007-ல் அபிஷேக் பச்சனை மணந்தார் ஐஸ்வர்யா ராய். இருவருக்கும் ஆராத்யா என்கிற மகள் உண்டு. 

ஐஸ்வர்யா ராயின் தனிப்பட்ட வாழ்க்கையைக் குறிக்கும் இந்த மீமை விவேக் ஓப்ராயே பகிர்ந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள். ஹாஹா.. கிரியேட்டிவ், அரசியல் எதுவும் இல்லை. இதுதான் வாழ்க்கை என்று அந்த மீமைப் பகிர்ந்து விளக்கத்துடன் ட்வீட் செய்திருந்தார் விவேக் ஒப்ராய். ஆனால் ரசிகர்கள் பலரும் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இதுபோன்ற அநாகரீகமான செயலில் இறங்கவேண்டாம் என்று விவேக் ஓப்ராய்க்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.

பலதரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்புகள் வந்த நிலையில் சர்ச்சைக்குரிய அந்த ட்வீட்டை நீக்கியுள்ளார் விவேக் ஓப்ராய். ட்விட்டரில் அவர் கூறியதாவது:

முதல் கண்ணோட்டத்தில் வேடிக்கையாகவும் ஊறு விளைவிக்காததாகவும் உள்ள மீம் அதேபோல மற்றவர்களுக்குக் காட்சியளிக்காது. கடந்த 10 வருடங்களாக, சமூக அடிநிலை வகுப்பைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட பெண்களின் முன்னேற்றத்துக்குப் பாடுபட்டுள்ளேன். எந்தப் பெண்ணையும் அவமதிப்பதை என்னால் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாது.

அந்த மீமுக்கான என்னுடைய பதிலால் யாராவது ஒரு பெண்ணைப் புண்படுத்தியிருந்தால் கூட அது களையப்படவேண்டிய குறையாகும். மன்னிப்புகள். ட்வீட் நீக்கப்பட்டுள்ளது. என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com