பாகுபலி 2 படத்தின் முதல் வார வசூலைத் தொட முடியாத அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்!

இந்த வகையில் பாகுபலி 2 படத்தின் முதல் வார வசூலைப் பின்னுக்குத் தள்ள இனிமேல் தான் புதிய படமொன்று வெளிவரவேண்டும்...
பாகுபலி 2 படத்தின் முதல் வார வசூலைத் தொட முடியாத அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்!

இந்தியாவில் வெளியான ஹிந்திப் படங்களில் அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம் படத்துக்கு நிகராக இன்னொரு படம் முதல் வாரத்தில் இத்தனை வசூலை அள்ளியிருக்குமா என்பது சந்தேகமே. எனினும் இந்தப் படத்தால் பாகுபலி 2 படத்தின் முதல் வார வசூலைத் தொடமுடியவில்லை. 

அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் படத்தின் அடுத்தப் பாகமான அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம் (Avengers: Endgame) படம் அதே படக்குழுவினரால் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. ராபர்ட் டெளனி ஜூனியர், கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், மார்க் ருஃபல்லோ நடிப்பில் ஆந்தோனி ரூஸோ, ஜோ ரூஸோ இயக்கியுள்ளார்கள்.

இந்தப் படமும் தமிழில் டப் செய்யப்பட்டுள்ளது. இதற்கான வசனத்தை பிரபல இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் எழுதியுள்ளார். இந்தப் படத்துக்கு பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், மார்வெல் ஏந்தம் என்கிற பாடலுக்கு இசையமைத்துள்ளார். இதுதவிர இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா ஆகியோரும் பங்கேற்றுள்ளார்கள். அயர்ன்மேனுக்கு விஜய் சேதுபதியும் பிளாக்விடோவுக்கு ஆண்ட்ரியாவும் குரல் கொடுத்துள்ளார்கள். இந்தியாவில் 2டி, 3டி, ஐமேக்ஸ் ஆகிய வடிவங்களில் வெளியாகியுள்ளது அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம் படம்.

இந்தியாவில் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு என நான்கு மொழிகளில் 2845 திரையரங்குகளில் கடந்த வாரம் வெளியான அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம் படம், முதல் ஐந்து நாள்கள் வசூலில் பல சாதனைகளைப் படைத்துள்ளது.

அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம் படம், முதல் நாளில் ரூ. 53.10 கோடி வசூலை எட்டியது. முதல் 5 நாள்களில் மொத்தமாக ரூ. 256.90 கோடி அதாவது வரி நீங்கலாக ரூ. 215.80 கோடி வசூலித்து சாதனை படைத்தது.

இந்நிலையில் இந்தியாவில் முதல் வார வசூலாக மொத்தமாக ரூ. 310 கோடி வசூலித்துள்ளது (வரிகள் நீங்கலாக ரூ. 260.40 கோடி). 

இந்தியாவில் வெளியான எந்தவொரு ஹிந்திப் படத்தை விடவும் முதல் வாரத்தில் அதிகமாக வசூலித்துள்ளது அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம். இந்தத் தகவல்களை பாலிவுட் செய்தியாளர் தரண் ஆதர்ஷ் வெளியிட்டுள்ளார். 

அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம் மற்றும் ஹிந்திப் படங்களின் முதல் வார இந்திய வசூல் (வரிகள் நீங்கலாக)

அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம் - ரூ. 260.40 கோடி
பாகுபலி 2 (ஹிந்தி) - ரூ. 247 கோடி 
சுல்தான் -  ரூ. 229.16 கோடி (புதன் வெளியீடு, 9 நாள்கள்) 
டைகர் ஹிந்தா ஹை - ரூ. 206.04 கோடி
சஞ்சு - ரூ. 202.51 கோடி 
டங்கல் -  ரூ. 197.54 கோடி

அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம் இந்திய வசூல்

முதல் நாள்: ரூ. 50 கோடியைத் தாண்டியது
2-ம் நாள்: ரூ. 100 கோடியைத் தாண்டியது
3-ம் நாள்: ரூ. 150 கோடியைத் தாண்டியது
5-ம் நாள்: ரூ. 200 கோடியைத் தாண்டியது
7-ம் நாள்: ரூ. 250 கோடியைத் தாண்டியது

வரும் நாள்களில் இந்தப் படம் ரூ. 350 கோடி வசூலைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தச் செய்தியைப் படிக்கும்போது பாகுபலி 2 படத்தின் முதல் வார வசூல் குறித்து உங்களுக்குக் கேள்வி  எழுந்திருக்கும். பாகுபலி 2 படத்தின் ஹிந்திப் பதிப்பு முதல் வாரத்தில் ரூ. 247 கோடி வசூலித்தது. ஆனால் அனைத்து மொழிகளிலும் சேர்த்து முதல் வாரத்தில் பாகுபலி 2 படம்  ரூ. 534 கோடி வசூலித்தது. அதாவது அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம் படம் அனைத்து மொழிகளையும் சேர்த்து இந்தியாவில் வசூலித்த ரூ. 260.40 கோடி தொகையை விடவும் பாகுபலி 2-வின் வசூல் இரு மடங்கு அதிகம்.

அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் vs பாகுபலி 2: முதல் வார இந்திய வசூல்

அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம் (அனைத்து மொழிகளிலும்): ரூ. 260.40 கோடி
பாகுபலி 2 (ஹிந்தி): ரூ. 247 கோடி
பாகுபலி 2 (அனைத்து மொழிகளிலும்): ரூ. 534 கோடி

இந்த வகையில் பாகுபலி 2 படத்தின் முதல் வார வசூலைப் பின்னுக்குத் தள்ள இனிமேல் தான் புதிய படமொன்று வெளிவரவேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com