அம்பேத்கர் குறித்த ஆவணப்படத்தைத் தயாரிக்கும் பா. இரஞ்சித்

பல வருடங்களாகத் தான் சேகரித்து வைத்துள்ள விஷயங்களை இந்த ஆவணப் படத்தில் இணைத்துள்ளார் இயக்குநர் ஜோதி நிஷா...
அம்பேத்கர் குறித்த ஆவணப்படத்தைத் தயாரிக்கும் பா. இரஞ்சித்

இயக்குநர் பா. இரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் முதல் படமாக வெளிவந்து பலத்த பாராட்டுகளைப் பெற்றது, பரியேறும் பெருமாள். இதற்கு அடுத்ததாக, இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு என்கிற படத்தைத் தயாரித்துவருகிறது.

இந்நிலையில் மும்பையைச் சேர்ந்த ஆவணப் பட இயக்குநர் ஜோதி நிஷா-வுடன் கைகோர்க்கிறது நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம். ‘பி.ஆர் அம்பேத்கர் - இன்றும் நாளையும் (BR Ambedkar Now And Then)’ என்கிற இந்த ஆவணப் படத்தை இயக்குநர் ஜோதி நிஷாவுடன் இணைந்து தயாரிக்கிறார் இயக்குநர் பா. இரஞ்சித்.

90 நிமிடம் நீளமுள்ள இந்த ஆவணப் படத்தில் அம்பேத்கரின் மதம் குறித்த பார்வை, சுதந்தரம், இந்தியாவில் புராணங்கள்,  இந்திய அரசியலில் சாதி நிறுவனமாக்கப்பட்டது, இந்தியாவில் ஒடுக்கப்பட்டோர் மற்றும் பெண்களின் நிலை ஆகியவை உள்ளிட்ட பலவற்றை ஆவணப்படுத்தத் திட்டமிட்டுள்ளார்கள். மேலும் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்கள், பேரணிகள், ஹார்வேர்டு பல்கலைக்கழகப் பேராசிரியர்களின் பேட்டிகள், தலித் அரசியல் களத்தில் இயங்கும் படைப்பாளிகளின் பேட்டிகள் என பல வருடங்களாகத் தான் சேகரித்து வைத்துள்ள விஷயங்களை இந்த ஆவணப் படத்தில் இணைத்துள்ளார் இயக்குநர் ஜோதி நிஷா.

இந்த ஆவணப் படம் குறித்து அவர் கூறுகையில், இந்திய இலக்கியங்கள் மற்றும் சினிமாவில் நாயகக் கண்ணோட்டத்தில் இருந்து புறக்கணிக்கப்பட்டவற்றை இதில் ஆவணப் படுத்த இருக்கிறோம். குறிப்பாக வெகுஜன ஊடகங்கள் பேச மறுத்த வரலாறுகளைப் பதிவு செய்கிறோம். சமூக அரசியல் சூழல் மாறியிருக்கும் இந்நேரத்தில், பி.ஆர் அம்பேத்கர் - இன்றும் நாளையும் ஆவணப்படம் பெண்ணிய நிலைப்பாட்டில் இருந்து சமூகப் புரட்சியையும், பெரும்பான்மை மக்களின் வாழ்விடம் மற்றும் பார்வை குறித்தும் பேச இருக்கிறோம் என்றார்.

ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் இந்த ஆவணப்படம் உருவாகவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com