சர்கார் படம் ஏற்படுத்திய 49 பி பிரிவு விழிப்புணர்வுக்குக் கிடைத்த வெற்றி!

சர்கார் படம் ஆரம்பித்துவைத்த ஒரு விவாதம் இன்று நடைமுறைக்கு வந்துள்ளது என்று...
சர்கார் படம் ஏற்படுத்திய 49 பி பிரிவு விழிப்புணர்வுக்குக் கிடைத்த வெற்றி!

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த சர்கார் படத்தில், வெளிநாட்டிலிருந்து வாக்களிக்க வந்த விஜய்யின் வாக்கை யோகி பாபு பதிவு செய்துவிடுவார். இதனால் விஜய் வெகுண்டெழுந்து நியாயம் கேட்பதும் அதனால் தமிழக அரசியல் சூழல் மாறுவதுமே சர்கார் படத்தின் கதையாக அமைந்தது.

ஒருவருடைய வாக்கைக் கள்ளத்தனமாக இன்னொருவர் பதிவு செய்தாலும் அதற்குப் பதிலாக அசல் வாக்காளர் 49 பி பிரிவின் கீழ் வாக்களிக்க முடியும் என்கிற விழிப்புணர்வை சர்கார் படம் ஏற்படுத்தியது. 

மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல்-மே மாதங்களில் நடத்தப்பட வாய்ப்பு உள்ளது. தேர்தல் தேதிகளை இறுதி செய்வது தொடர்பாக தேர்தல் ஆணையம் தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. இந்நிலையில் 49 பி தொடர்பான விழிப்புணர்வு பிரசாரத்தை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. 

உங்கள் வாக்கினை வேறு எவரும் பதிவு செய்துவிட்டால் கவலை வேண்டாம். தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஓர் ஆவணத்தைச் சமர்ப்பித்து வாக்குச் சீட்டின் மூலம் வாக்களிக்கலாம் என்கிற வாசகங்களுடன் விளம்பரம் செய்துவருகிறது தேர்தல் ஆணையம். இதையடுத்து சர்கார் படம் ஆரம்பித்துவைத்த ஒரு விவாதம் இன்று நடைமுறைக்கு வந்துள்ளது என்று விஜய் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் இதுகுறித்த தகவல்களைப் பகிர்ந்துவருகிறார்கள்.

அரசால் அங்கீகரிக்கப்பட்ட  வாக்காளர் அடையாள அட்டை, கடவுச்சீட்டு, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்கள் ஆகியோருக்கு புகைப்படத்துடன் அளிக்கப்பட்டுள்ள அடையாள அட்டைகள், வங்கிகள் அல்லது தபால் நிலைய கணக்கு புத்தகங்கள், பான் அட்டை, பதிவாளர் ஜெனரலால் அளிக்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட அடையாள அட்டை, மத்திய தொழிலாளர் அமைச்சகத்தால் அளிக்கப்பட்ட ஹெல்த் இன்சூரன்ஸ் ஸ்மார்ட் அட்டை உள்ளிட்ட 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை வாக்களிக்கும்போது கொண்டு வர வேண்டியது அவசியமாகும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் சமீபத்தில் தெரிவித்தது.  அரசால் அங்கீகரிக்கப்பட்ட 12 அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை வாக்குச்சாவடிக்கு கொண்டு வர வேண்டும் என்று வாக்காளர்களை தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com