பிக் பாஸ் நிகழ்ச்சியில் தமிழ்ப் பெண்களுக்கு வேலை: ஆச்சர்யப்பட்ட கமல்!

வந்தவங்களை வாழ வைக்கணும்னா நாங்களும் கொஞ்சம் வாழணும் இல்லை, அதான் சொன்னேன்...
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தமிழ்ப் பெண்களுக்கு வேலை: ஆச்சர்யப்பட்ட கமல்!

விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 நேற்று முதல் தொடங்கியுள்ளது. 

விஜய் டி.வி.யில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த "பிக் பாஸ்' நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே பரவலான வரவேற்பு உண்டு. தொலைத் தொடர்பு, இணையம், தொலைக்காட்சி என எந்தத் தகவல் தொடர்பு சாதனங்களும் இல்லாமல் 100 நாள்கள் இருப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் போட்டி விதி. கடந்த இரண்டு ஆண்டுகளாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், இந்த முறையும் தொகுத்து வழங்குகிறார். பிக் பாஸ் முதல் சீஸனை நடிகர் ஆரவ்வும் கடந்த வருட போட்டியை நடிகை ரித்விகாவும் வென்றார்கள். சமூகவலைத்தளங்களில் பிக் பாஸ் குறித்த விவாதங்கள் அதிகமாக இடம்பெறுவதால் இதில் இடம்பெற்ற போட்டியாளர்கள் அதிகக் கவனம் பெற்று புகழை அடைந்துள்ளார்கள். 

இந்த வருட பிக் பாஸ் போட்டியில் 15 போட்டியாளர்கள் கலந்துகொள்கிறார்கள்.

தமிழகத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில் தமிழர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை சமீபகாலமாக வலுத்து வருகிறது. இதனையொட்டி பிக் பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடைய கருத்தைப் பதிவு செய்துள்ளார் கமல். 

நேற்று தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் நிகழ்ச்சி அரங்கத்தின் பகுதிகளைப் பார்வையாளர்களுக்கு அறிமுகம் செய்தார் கமல். அப்போது, போட்டியாளர்களின் படுக்கை அறைக்குச் சென்றார். அங்கு ஏராளமான படுக்கைகள் இருந்தன. அவற்றை இரு பெண்கள் சுத்தம் செய்துகொண்டிருந்தார்கள். அவர்களை வட இந்தியப் பெண்கள் என நினைத்து அவர்களிடம் ஹிந்தியில் பேச முயன்றார் கமல்.

நமஸ்தே என்று கூறிக்கொண்டு அவர்களிடம் ஹிந்தியில் பேசினார். ஆனால், அவர் பேசுவது புரியாமல், தான் தமிழ்ப் பெண் என்றார் ஒருவர். உடனே ஆச்சர்யத்துடன் தமிழா.. நீங்க தமிழா என்று ஆச்சர்யப்பட்டார் கமல். மற்றவரும் தான் தமிழ் என்று கூற உடனே உற்சாகமாகி அவரிடம் கைக்குலுக்கினார். பிறகு, அவர் பேசியதாவது: 

தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு வேலை. ரொம்ப சந்தோஷம். ஒண்ணும் தப்பா சொல்லலைங்க. 

(பிறகு கேமராவின் அருகில் சென்று) வந்தாரை வாழ வைக்கும் தமிழகம். அதுல மாற்றம் கிடையாது. ஆனா, வந்தவங்களை வாழ வைக்கணும்னா (பின்னால் அந்த இரு பெண்களையும் பார்த்துவிட்டு) நாங்களும் கொஞ்சம் வாழணும் இல்லை,  அதான் சொன்னேன். சான்ஸ் கிடைக்கும்போதெல்லாம் இப்படித் தாக்கறே, ‘செண்டர்’ல, அப்படின்னு சொல்லாதீங்க. தாக்கறேன்னா அதுக்குக் காரணம், நிலவும் சூழல்தானே தவிர, வேறொண்ணும் இல்லைங்க என்றார். பிறகு, ஒரு தாய் மக்கள் நாம் என்போம்... ஒன்றே எங்கள் குலம் என்போம்... என்று பாடினார் கமல்.

நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே தனது அரசியல் கருத்தை கமல் பதிவு செய்துள்ளதாக பிக் பாஸ் ரசிகர்கள் பலரும் சமூகவலைத்தளங்களில் எழுதியுள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com