21 ஜூலை 2019

இன்று நடிகர் சங்கத் தேர்தல்: 3 ஆயிரம் பேர் வாக்களிக்கிறார்கள்

DIN | Published: 22nd June 2019 11:55 PM

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 23) நடைபெறுகிறது. 

தமிழ்த் திரைப்படத்துறையில் பணியாற்றும் நடிகர்களையும், நடிகைகளையும் உறுப்பினராகக் கொண்ட சங்க அமைப்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் செயல்பட்டு வருகிறது. கே.சுப்பிரமணியம், என்.எஸ்.கே., டி.கே.பகவதி, டி.கே.சண்முகம், தங்கவேலு உள்ளிட்ட கலைஞர்களால் இந்தச் சங்கம் 1952-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.  அதன் முதல் தலைவராக கே.சுப்பிரமணியம் இருந்தார். அதைத் தொடர்ந்து எஸ்.எஸ். ஆர், எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், அஞ்சலிதேவி உள்ளிட்டோர் தலைவர்களாக இருந்துள்ளனர். பின்னர் விஜயகாந்த், சரத்குமார் உள்ளிட்டோர் இந்த சங்கத்தின் தலைவர்களாக இருந்து நிர்வகித்தனர்.  கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சரத்குமார் அணியை வென்று, நாசர் தலைமையிலான அணி நிர்வாகத்தை கவனித்து வந்தது. 

மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை:  

இந்த சங்கத்துக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்துவது வழக்கம். கடந்த முறை நாசர் தலைமையிலான குழு இந்த நிர்வாகத்தை கைப்பற்றி நிர்வகித்து வந்தது.  நடிகர் சங்க நிலம் மீட்பு, சங்கத்துக்கென புது கட்டடம் என்பது இவர்களின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளாக இருந்தன. தற்போது சங்க கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் சுமார் 75 சதவீதம் முடிந்துள்ளன. 

இந்த நிலையில் 2019 - 2022- ஆம் ஆண்டுக்கான தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன், தேர்தல் அதிகாரியாக இருந்து இதனை நடத்துகிறார்.

பாண்டவர் அணி:  கடந்த முறை தலைவராக இருந்த நாசர் மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். இவர் தலைமையிலான அணிக்கு "பாண்டவர் அணி' என்று பெயரிடப்பட்டுள்ளது. பொதுச் செயலாளர் பதவிக்கு விஷாலும், பொருளாளர் பதவிக்கு கார்த்தியும், துணைத் தலைவர்கள் பதவிக்கு கருணாஸ் மற்றும் பூச்சி முருகனும் போட்டியிடுகின்றனர். 

சுவாமி சங்கரதாஸ் அணி: "பாண்டவர் அணி'யை எதிர்த்து போட்டியிடும் அணிக்கு "சுவாமி சங்கரதாஸ் அணி' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த அணியில்  கே.பாக்யராஜ் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார். செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷும், துணைத் தலைவர் பதவிக்கு குட்டி பத்மினி, உதயா ஆகியோரும் போட்டியிடுகின்றனர். பொருளாளர் பதவிக்கு பிரசாந்த் போட்டியிடுகிறார்.

69 பேர் போட்டி: தலைவர், துணைத் தலைவர்கள், செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு மொத்தமாக 69 பேர் போட்டியிடுகின்றனர். 

வாக்குப்பதிவு மட்டுமே: 

நடிகர் சங்கத்துக்கான தேர்தலை திட்டமிட்டபடி நடத்த உத்தரவிட்டுள்ள நீதிமன்றம், மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை வாக்கு எண்ணிக்கையையோ அல்லது முடிவுகளையோ வெளியிடக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது. மறு உத்தரவு வரும் வரை வாக்குப் பெட்டிகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால், ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 23) வாக்குப்பதிவு மட்டுமே நடைபெறவுள்ளது. 

சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் நடக்கவுள்ள இந்தத் தேர்தலில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 5 மணி வரை  நடைபெறும்.

3 ஆயிரம் பேர்: நாடக நடிகர்கள், சினிமா நடிகர்கள் ஆகியோர் இந்தச் சங்கத்தில் வாக்களிக்க தகுதிப் பெற்றவர்களாக உள்ளனர்.  மொத்த வாக்குகள் 3, 644. இதில் வாக்களிக்க தகுதி உள்ளவர்கள் 3,171 பேர். தமிழகத்தின் பிற மாவட்டங்களில் உள்ள நாடக நடிகர்கள் இத்தேர்தலில் வாக்களிப்பதற்காக சென்னைக்கு வந்துள்ளனர். 

கமல், அஜித், விஜய்: நடிகர்கள் கமல்ஹாசன், அஜித், விஜய், விக்ரம், சூர்யா, நடிகைகள் நயன்தாரா, தமன்னா உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் இத்தேர்தலில் வாக்களிக்கவுள்ளனர்.  

இவர்கள் அனைவரும் வாக்களிக்க வசதியாக ஞாயிற்றுக்கிழமை சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் உள்ளவர்கள் தபால் மூலம் வாக்களிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. 


நடிகர் சங்கம் கடந்து வந்த பாதை...

அன்றைய சென்னை மாகாணத்தில் பிரபலமாக இயங்கி வந்த நவாப் ராஜமாணிக்கம் நாடகக் குழுவில் நடித்து வந்தவர் சோமசுந்தரம். இவர்தான் நடிகர்களுக்காக ஒரு சங்கம் அமைத்து நாடக நடிகர்களை ஒருங்கிணைக்க முயற்சி செய்தார். அதாவது நடித்து முடித்த பின்னர் பலருக்கு உரிய ஊதியம் வாங்குவது பெரும்பாடாக இருந்துள்ளது. அதை கவனத்தில் கொண்டு தொடங்கப்பட்டதே நடிகர் சங்கம்.  

சக்தி நாடக சபாவில் நடித்து வந்த கே.ஆர். ராமசாமி, எஸ்.வி.சுப்பையா, நம்பியார், சிவாஜி கணேசன் உள்ளிட்ட பலர் அந்த அமைப்பில் உறுப்பினர்களாயினர். மயிலாப்பூர் ஜம்மி பில்டிங் எதிரில் ஒரு அறையில் சக்தி நாடக சபா குழுவினர் ஒத்திகைப் பார்ப்பார்கள். அங்குள்ள ஒரு சிறு அறையில்தான் ஆரம்பத்தில் நடிகர் சங்க அலுவலகம் செயல்பட்டது.

பிற்காலத்தில் பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் இடம் பெற்ற இந்த நடிகர் சங்கம் முதலில் ஒரு சாதாரண நாடக நடிகரால் தொடங்கப்பட்டது என்பது முக்கியமான விஷயம். ஆரம்பத்தின் அதன் நிதி இருப்பு பூஜ்ஜியம்தான். உறுப்பினர் அடையாள அட்டை அச்சிட இருபது ரூபாய் கூட இல்லாமல் இருந்துள்ளனர். சினிமாவின் ஆரம்ப காலத்தில் ஸ்டுடியோக்கள் சேலம், கோவை போன்ற இடங்களில்தான் இருந்தன. சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ், கோவை பட்சிராஜா ஸ்டுடியோ என சில ஸ்டுடியோக்கள் பிரபலமாக விளங்கின. அங்கெல்லாம் படப்பிடிப்பு நடக்கும். அங்கே போய் தங்கி நடிப்பார்கள் நடிகர்கள்.

ஸ்டுடியோக்கள் சென்னை வந்த பிறகுதான், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளிலும் நடிக்கும் நடிகர், நடிகைகள் சென்னையில் தங்கினார்கள். இதையடுத்து திரைப்படக் கலைஞர்களுக்கென்று ஒரு தொழில்முறை அமைப்பு வேண்டும் என்ற எண்ணத்தில் இயக்குநர் கே.சுப்பிரமணியம் எடுத்த முயற்சியால் தென்னிந்திய நடிகர் சங்கம் உருவானது.

கே.சுப்ரமணியத்தை தொடர்ந்து, டி.வி.சுந்தரம், சித்தூர் வி.நாகைய்யா, என்.எஸ். கிருஷ்ணன், எம்.ஜி.ஆர்., அஞ்சலிதேவி, ஆர்.நாகேந்திர ராவ், எஸ்.எஸ். ராஜேந்திரன், எம்.வி. சாமிநாதன், கே.ஆர்.ராமசாமி, சிவாஜி கணேசன், ராதாரவி, விஜயகாந்த், சரத்குமார் என புகழ் பெற்ற பல கலைஞர்கள் தலைவர்களாக இருந்து வழி நடத்திய இந்த சங்கத்திற்குத் தான் இப்போது தேர்தல் நடக்கிறது.  இதுவரை பதினைந்து தலைவர்களை சந்தித்துள்ளது நடிகர் சங்கம்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

சர்ச்சைக்குள்ளான கொலையுதிர் காலம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
ஹிட் அடித்த பாலிவுட் பட போஸ்டரை ‘பிட்’அடித்த பிகில்!
நல்ல சினிமாவை நேசிக்கும் புதுப்படைப்பாளிகளின் கவனத்துக்கு!
இயக்குநர் சிகரத்துக்கு மூன்று விழாக்கள்! 
தொட்டு விடும் தூரம்