லெட்டர் டெலிவரி பண்றதை விட ‘பாட்ஷா’ படம் பார்க்கறது தானே முக்கியம்!

திரைப்படங்கள், சின்னத்திரை தாண்டி இனி நடிகர்களுக்கான நல்ல எதிர்காலம் வெப் சீரிஸ்களிலும் காத்துக்கொண்டிருப்பதை முனீஸ்காந்தின் முடிவு உறுதி செய்திருக்கிறது.
லெட்டர் டெலிவரி பண்றதை விட ‘பாட்ஷா’ படம் பார்க்கறது தானே முக்கியம்!

முனீஸ்காந்த் ராமதாஸ். தமிழில் வளர்ந்து வரும் காமெடி நடிகர்களில் இவரைத் தவிர்த்து விட முடியாது. முண்டாசுப் பட்டி மூலமாக ஏராளமான ரசிகர்களை ஈர்த்து தொடர்ந்து இன்றைய இளம்நடிகர்கள் முதல் சூப்பர் ஸ்டாரின் பேட்ட வரை இவரது காமெடி கிராஃபில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம். சரி, அதற்காகத் திரைப்படங்களில் மட்டுமே தொடர்ந்து கவனம் செலுத்திக் கொண்டே இருந்தால் போதுமா? இன்றைய இணைய யுகத்தில் ‘வெப் சீரிஸ்’ என்றொரு வெரைட்டி கல்லா கட்டிக் கொண்டிருக்கிறதே அதைப் பற்றியும் கொஞ்சம் யோசிக்கலாமே என்று நண்பர்கள் சிலர் பரிந்துரைக்க, இதோ முனீஸ்காந்த் போஸ்ட் மேன் என்றொரு வெப் சீரிஸில் ரஜினி ரசிகராக நடித்துக் கொண்டிருக்கிறார்.  தொடரில் போஸ்ட் மேன் இவர் தான். போஸ்ட் மேனாகவும் இருந்துகொண்டு தீவிர ரஜினி ரசிகனாகவும் இருக்கிறார் முனீஸ்காந்த். அப்போது தான் ‘பாட்ஷா’ படம் வெளியாகிறது. ஆம், கதை நிகழும் காலம் 1995 என்ரு வைத்துக் கொள்ளுங்கள். பாட்ஷா ரிலீஸ் எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள். 90 களில் ரஜினிக்கு தோல்விப் படங்கள் குறைவு. எஜமான் மட்டுமே ஓரளவுக்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யாத படமாக இருந்ததே தவிர பிற அனைத்துப் படங்களுமே பக்கா மாஸ். இதில் பாட்ஷாவுக்கு என்றுமே தனி இடம் உண்டு.

ரஜினி நடித்த திரைப்படங்களில் அவருக்கொரு காட் ஃபாதர் இமேஜை அள்ளித்தந்த படமென்றால் அது பாட்ஷா தான். அந்தப் படத்தின் ரிலீஸ் அன்று தமிழ்நாடே சும்மா அதகளப்பட்டது. அப்போது முனீஸ்காந்த் போஸ்ட் மேனாக இருப்பதைப் போல இந்த வெப் சீரிஸில் கதை அமைந்திருப்பதால். ஒரு ரஜினி ரசிகராக அவர் என்ன செய்ய வேண்டும்?

ஒன்று வேலையைப் புறக்கணித்து விட்டு தலைவர் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்த்தே ஆக வேண்டும். இல்லா விட்டால் அவரெப்படி ரஜினி ரசிகராக ஆக முடியும்?

இல்லாவிட்டால், தன்னைத்தானே நொந்து கொண்டு கடமை, கண்ணியம், கட்டுப்பாடு கதையாக செய்யும் தொழிலே தெய்வம் எனக்கருதி வீடு வீடாகச் சென்று கடிதங்களைப் பட்டுவாடா செய்ய வேண்டும்.

இப்போது நீங்கள் சொல்லுங்கள்;

நீங்கள் ஒரு தீவிர ரஜினி ரசிகராக இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?

வேலையாவது ஒண்ணாவது? அதை மறுநாள் பார்த்துக்கலாம் பாஸ்... இப்போ தலைவர் படம் தான் முக்கியம் என்று ஒரு நாள் விடுமுறை எடுத்துக் கொண்டு படம் பார்க்கப் போய்விடுவீர்கள் இல்லையா?

அதைத்தான் முனீஸ்காந்த் இந்த வெப் சீரிஸில் செய்திருக்கிறார். அதனால் அவரது வாழ்விலும், அவரிடமிருந்து உரிய நேரத்தில் கடிதங்களைப் பெற முடியாத நபர்களின் வாழ்விலும் நிகழும் மிகப்பெரிய மாற்றங்களை சுவாரஸ்யமாகச் சித்தரிக்கும் வகையில் இந்த வெப் சீரிஸ் இயக்கப் பட்டிருக்கிறது. முனீஸ்காந்த் இருக்கிறார் என்பதால் காமெடிக்குப் பஞ்சம் இருக்கப் போவதில்லை.

அத்துடன் திரைப்படங்கள், சின்னத்திரை தாண்டி இனி நடிகர்களுக்கான நல்ல எதிர்காலம் வெப் சீரிஸ்களிலும் காத்துக்கொண்டிருப்பதை முனீஸ்காந்தின் முடிவு உறுதி செய்திருக்கிறது. இவரைப் போல மேலும் பல பிரபலங்களின் தரிசனம் கூடிய விரைவில் வெவ்வேறு வெப் சீரிஸ்களில் கிட்டலாம்.

திரைப்படங்கள் மற்றும் மெகா சீரியல்களைக் காட்டிலும் இந்த வெப் சீரிஸ்களுக்கு இனி வரும் காலங்களில் மிகச்சிறந்த எதிர்காலமுண்டு.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com