செய்திகள்

என்னை மூளைச்சலவை செய்ய முயற்சி செய்தார்: இயக்குநர் சேரன் மீது நடிகை மீரா மிதுன் குற்றச்சாட்டு!

31st Jul 2019 02:58 PM | எழில்

ADVERTISEMENT

 

பிக் பாஸ் 3 போட்டியாளர் மீரா மிதுன் கடந்த வாரம் வெளியேற்றப்பட்டார். இவருக்கு இயக்குநர் சேரனுடன் பிரச்னை ஏற்பட்டதால் அதுவே அவருடைய வெளியேற்றத்துக்குக் காரணமாக அமைந்துவிட்டது. டாஸ்க் ஒன்றில் இயக்குநர் சேரன் வேண்டுமென்றே கோபத்தில் தன்னை இழுத்து வெளியே தள்ளியதாக அவர் மீது குற்றம் சாட்டினார் மீரா மிதுன். ஆனால் குறும்படம் வழியாக மீரா சொன்னது தவறு எனத் தீர்ப்பளித்தார் கமல். இந்தப் பிரச்னை வரும்வரை மக்கள் வாக்குகள் உங்களுக்கு இருந்தன. இந்த விவகாரத்துக்குப் பிறகு வாக்குகள் குறைந்துவிட்டன என்று மீராவிடம் கூறினார் கமல்.

இந்நிலையில் சினிமா எக்ஸ்பிரஸ் இணைய இதழுக்கு மீரா மிதுன் பேட்டியளித்ததாவது:

சேரன் சாரைப் பற்றிய புகாரில் அதைச் சொன்ன விதம் தான் எல்லோருக்கும் பிரச்னையாக இருந்தது. இப்போது அந்த விவகாரத்தை வேறு மாதிரி சொல்லியிருக்கலாமோ எனத் தோன்றுகிறதா?

ADVERTISEMENT

அந்தச் சம்பவம் நடந்த சமயத்தில் உடனே என்னால் சொல்லமுடியவில்லை. ஒரு கதாபாத்திரத்தில் இருந்ததால் அதை முடித்துவிட்டுச் சொல்லவேண்டிய நிலைமையில் இருந்தேன். எனக்கும் சேரன் சாருக்கும் ஏற்கெனவே ஒத்துப்போகவில்லை. எனவே என்னிடம் அவர் இப்படித்தான் நடந்துகொள்வார் என்கிற எண்ணம் ஒன்று இருக்கும் அல்லவா, அதை அவர் செய்தவுடன் நான் டென்ஷன் ஆகிவிட்டேன். பயம், பதற்றம் ஏற்பட்டன. அவர் தப்பாகச் செய்தார் என நான் சொல்லவில்லை. என்னிடம் கைக்குலுக்கக்கூட தயங்கியவர் என்னைப் பிடித்துத் தள்ளியது ஏன் என்றுதான் கேட்டேன். இதை நான் சொல்லியபோது மற்றவர்களுக்கு வேறு மாதிரி புரிந்துள்ளது. அவர் மிகவும் வேதனைப்பட்டார். டாஸ்கில் நடந்த விஷயம் என்றார்கள். ஆனால் என் மீதான வெறுப்பினால் அப்படிச் செய்ததாகத் தோன்றியது. மதுமிதா, சாண்டி மீது கோபப்பட்டார். ஆனால் எனக்கு நேர்ந்தபோது யாரும் என் உணர்வைப் புரிந்துகொள்ளவில்லை. முதலில் எனக்குத்தான் அறிவுரை வழங்கினார்கள். இப்படிச் சொன்னது தவறு என்று. வீட்டில் எல்லோருக்கும்  ஏதாவது நடந்தால் எல்லோரும் போய் நிற்பார்கள். ஆனால் எனக்கென்று வரும்போது என் பக்கம் தான் தவறு என்பார்கள். சேரன் விஷயத்திலும் இப்படி நடந்தபோது அதை நான் சொல்லியிருக்கவே கூடாது என எண்ணினேன். சேரனுக்கு என் மீதான கோபத்தின் வெளிப்பாடு வேறு மாதிரி போவதாக உணர்ந்ததால் அப்படிச் சொன்னேன். 

சேரன் உங்களிடம் மன்னிப்பு கேட்ட பிறகும் உங்களால் அதை ஏன் ஏற்கமுடியவில்லை?

எதற்காக ஒவ்வொரு விஷயத்தையும் செய்த பிறகு அவர் மன்னிப்பு கேட்கிறார்? பிக் பாஸ் வீட்டுக்குள் ஸாரி கேட்பது என்பது சுலபமான விஷயமாகிவிட்டது. ஒருத்தரைக் குத்திவிட்டு மன்னிப்புக் கேட்டுவிடலாம். நீங்கள் தெரியாமல் ஒன்றைச் செய்துவிட்டால் மன்னிக்கலாம். தெரிந்து தெரிந்து செய்துவிட்டு மன்னிப்பு கேட்பது தப்பிப்பதற்கான சுலப வழி என்று சொல்வார்கள். அதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. முகெனும் நானும் சண்டை போட்டாலும் மன்னிப்புக் கேட்டுக்கொள்ளாமல் அப்படியே நட்பைத் தொடர்வோம். எங்களுக்குள் விவாதம், பிரச்னைகள் வரும். ஆனால் மன்னிப்பு கேட்டுக்கொள்ளமாட்டோம். நட்பு அப்படியே தொடரும். எதைச் செய்தாலும் பிறகு மன்னிப்பு கேட்பது பெருந்தன்மையான விஷயம் என்று நினைக்கிறார்கள். இதனால் என்னால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 

சேரன் சாரை வெளியே எனக்குத் தெரியும். ஒரு பாடல் வெளியீட்டு விழாவில் சந்தித்துப் பேசிக்கொண்டோம். பிக் பாஸ் அரங்குக்குள் வந்தபோது அவருக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. ஏற்கெனவே சந்தித்தது குறித்து சொன்னபிறகு ஓ ஆமாம் என்றார். 2-வது நாள் அவரிடம் கைக்குலுக்கச் சென்றேன். ஆனால் அவர் என் கையைக் குலுக்காமல் பதிலுக்கு வணக்கம் என்றார். நான் பெண்களைத் தொடமாட்டேன். டி.ராஜேந்தர் படங்களைப் பார்த்திருக்கிறீர்களா, அந்த மாதிரி என்றார். ஓ அப்படியா, ஸாரி சார் என்று சொல்லி நானும் வணக்கம் சொன்னேன். ஆனால் அதே மூன்றாவது, நான்காவது நாள் நான் பார்க்கிறேன், மொத்தப் பெண்களையும் தொட்டு சகஜமாகப் பேசுகிறார். பிறகு ஏன் என்னிடம் அப்படிச் சொன்னார் என்று தெரியவில்லை. 

என்னை அழைத்து நிறைய பேசுவார். உங்களுக்குள் தாழ்வு மனப்பான்மை இருப்பதாக நினைக்கிறேன் என்றார்.  அப்படியெல்லாம் இல்லை சார், இருந்தால் நானே சொல்வேன் என்றேன். இல்லைம்மா, அப்படி இப்படி என்றார். என்னை மூளைச்சலவை செய்து என்னைப் பலவீனமாக்க முயற்சி செய்தார். இதை நான் 3-வது நாளிலிருந்து புரிந்துகொண்டுவிட்டேன். ஏன் என்னிடம் அப்படிப் பேசினார் என்று தெரியவில்லை. அதைப் பற்றி ஆராயவும் விரும்பவில்லை. அதனால் அவரிடமிருந்து தள்ளி இருக்க முடிவு பண்ணினேன். என்னிடம் இல்லாத ஒன்றை அவர் புகுத்திவிட்டால்? அதற்காக. பிக் பாஸ் வீடே, ஒருவரை பலவீனப்படுத்துவதற்குத்தான். நாம் எவ்வளவு வலுவாக இருந்தாலும் ஏதாவதொரு கட்டத்தில் உடைவோம். இன்னொன்றும் சொல்வார், நீ தியானம் எல்லாம் செய்கிறாய், பிறகு ஏன் கோபப்படுகிறாய் என்று. நான் சொல்வேன், நான் மனுஷன் தான் சார். சாமி இல்லை. அப்பேர்ப்பட்ட முருகனே கோபப்பட்டுள்ளார். எனவே கோபம் என்பது இயல்பான விஷயம். அவர் என் குணாதிசயத்தை மாற்ற முயற்சி செய்தார். இதுதான் நான். மாறமாட்டேன் என்று அவரிடம் கூறிவிட்டேன். நான் உடை உடுத்துவது குறித்து நிறைய சொல்வார். நான் செளகரியமாக உள்ளேன் சார் என்று கூறிவிடுவேன். ஆனால் அதேபோன்ற உடைகளைத்தான் மற்ற பெண்களும் அணிந்தார்கள். ஆனால் அவர்களிடம் அவர் அதுபோலச் சொன்னதில்லை. என்னிடம் மட்டுமே ஏன் இந்த வேறுபாடு என்று என்று புரியவில்லை.

நிறைய தடவை என்னை வேறு மாதிரி போர்ட்ரே செய்ய முயற்சி செய்தார். அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருந்தது. பாத்ரூம் டாஸ்கில் நான் எல்லா வேலையையும் செய்தேன். எதுவும் வேலை செய்யாமல் இல்லை. அதை வைத்து அவர் ஏன் பிரச்னை செய்தார் எனத் தெரியவில்லை. சார் நீங்க பொய் சொல்றீங்க என்று என்னால் சொல்லமுடியாது. நானும் சாக்‌ஷியும் சிறையில் இருந்தபோது ஒரு விவாதத்தில் அவர் அழுதுவிட்டார். அப்போது சேரன் சாக்‌ஷியிடம் வந்து, இவ உன்னைப் பலவீனமாக்க முயற்சி செய்கிறாள் என்றார். அவர் சொன்ன பிறகு எல்லோரும் அதையே பின்பற்றிச் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். சிறையிலும் என்னை ஓரங்கட்டினார்கள். எனவே அவரிடமிருந்து நான் தள்ளியே இருந்தேன். கமல் சார் நிகழ்ச்சியின்போது அவரிடம் என்னைப் பற்றி இவ்வாறு சொன்னார்: அந்தப் பொண்ணு என்னை இயக்குநர் போல பார்ப்பதில்லை என்று. ஒருவேளை, அதுதான் பிரச்னையாக இருக்கும். எல்லோரும் அவரிடம் டைரக்டர் சார் டைரக்டர் சார் என்பார்கள். ஒருவேளை, அவரை நான் புகழவேண்டும் என்று நினைத்தாரோ என்னவோ. மற்றவர்கள் அதை அவருக்குச் செய்தார்கள். நானும் அவரும் பலமுறை உட்கார்ந்து பேசியிருக்கிறோம். நீ கருப்பா இருக்கிறதால எல்லோரும் உன்னிடம் பிரச்னை செய்கிறார்கள் என்றார். சம்பந்தமே இல்லாமல் பேசுகிறீர்கள் சார். உங்கள் எண்ணங்கள் எனக்குப் புரியவில்லை என்றேன். 

ADVERTISEMENT
ADVERTISEMENT