பேட்ட, விஸ்வாசம் படங்களின் சிறப்புக் காட்சிகளை வெளியிட்ட திரையரங்குகளுக்கு நோட்டீஸ்: அமைச்சர் கடம்பூர் ராஜு

எந்தப் படத்துக்கும் சிறப்புக்காட்சியை ஒளிபரப்ப அனுமதி தரவில்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார்...
பேட்ட, விஸ்வாசம் படங்களின் சிறப்புக் காட்சிகளை வெளியிட்ட திரையரங்குகளுக்கு நோட்டீஸ்: அமைச்சர் கடம்பூர் ராஜு

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள பேட்ட படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா, சசிகுமார், நவாசுதீன் சித்திக் போன்றோரும் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இசை - அனிருத்.

அஜித் - சிவா ஆகிய இருவரும் மீண்டும் இணைந்துள்ள படம் - விஸ்வாசம். கதாநாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் ஜகபதி பாபு, விவேக், யோகி பாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா, கோவை சரளா போன்றோரும் நடித்துள்ளார்கள். இப்படத்துக்கு இசை - இமான், ஒளிப்பதிவு - வெற்றி. இவ்விரு படங்களும் இன்று வெளியாகியுள்ளன. 

இந்நிலையில், கழுகுமலை மற்றும் வானரமுட்டியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டியளித்தபோது கூறியதாவது: பேட்ட படத்துக்கு தற்போதுவரை சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு கோப்பு வரவில்லை. அதனால் தரவில்லை. அப்படி யாரேனும் சிறப்புக் காட்சிகள் கேட்டு அணுகினால் அதை பரிசீலிப்போம் என்றார். ஆனால் இன்று வெளியான பேட்ட, விஸ்வாசம் ஆகிய இரு படங்களுக்கும் அதிகாலையிலேயே சிறப்புக் காட்சிகள் நடைபெற்றன. தமிழகம் முழுக்கவுள்ள பல திரையரங்குகளில் ரசிகர்கள் அதிகாலைக் காட்சிகளைப் பார்த்து சமூகவலைத்தளங்களில் விமரிசனம் எழுதி வருகிறார்கள். இந்நிலையில் எந்தப் படத்துக்கும் சிறப்புக்காட்சியை ஒளிபரப்ப அனுமதி தரவில்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார். இதுகுறித்து அவர் பேட்டியளித்ததாவது:

திரையரங்குகளில் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் சிறப்புக் காட்சிகளை ஒளிபரப்பிய திரையரங்குகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அனுமதியின்றி சிறப்புக் காட்சிகளை ஒளிபரப்பிய திரையரங்குகளுக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். திரையரங்குகள் அனுமதியின்றி சிறப்புக் காட்சிகளை ஒளிபரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com