எனக்குள்ளும் இத்தனை அறையா.. எனக்கின்று புரிகிறதே: வைரமுத்து எழுதிய வர்மா படப் பாடல் வரிகள்!

எனக்குள்ளும் இத்தனை அறையா.. எனக்கின்று புரிகிறதே: வைரமுத்து எழுதிய வர்மா படப் பாடல் வரிகள்!

வர்மா படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்றின் வரிகள் வெளியாகியுள்ளன. கவிஞர் வைரமுத்து எழுதியுள்ள...

அர்ஜூன் ரெட்டி என்கிற தெலுங்குப் படம் 2017-ல் வெளியாகி அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தது. விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் சந்தீப் வங்கா இயக்கிய படத்துக்கு நல்ல விமரிசனங்கள் கிடைத்தது மட்டுமல்லாமல் வசூலிலும் அசத்தியது. 

இந்தப் படம் தமிழில் வர்மா என்கிற பெயரில் ரீமேக் ஆனது. பிரபல இயக்குநர் பாலா இயக்கினார். விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக இப்படத்தின் மூலமாக அறிமுகமானார். வங்காள நடிகையான மேகா செளத்ரி, துருவ் ஜோடியாக நடித்தார். ஈஸ்வரி ராவ், பிக் பாஸ் ரைஸா போன்றோரும் இப்படத்தில் நடித்தார்கள். இயக்குநர் ராஜூ முருகன் வசனம் எழுதினார். அர்ஜூன் ரெட்டி படத்துக்கு இசையமைத்த ரதன், வர்மா படத்துக்கும் இசையமைத்தார். இது அவருடைய 4-வது தமிழ்ப்படம். விகடகவி, வாலிபராஜா, டார்லிங் 2 ஆகிய படங்களுக்கு ரதன் இசையமைத்துள்ளார். பிப்ரவரி 14 அன்று வெளிவருவதாக இருந்த வர்மா படம் திடீரென கைவிடப்பட்டது. படத்தின் இறுதி வடிவம் குறித்து பாலா - தயாரிப்பாளர் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் இந்த நிலை உருவானது.

இந்நிலையில், வர்மா படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்றின் வரிகள் வெளியாகியுள்ளன. கவிஞர் வைரமுத்து எழுதியுள்ள அப்பாடலின் வரிகள்:

மழையில்லை மேகமில்லை – ஆயினும்
மலர்வனம் நனைகின்றதே                                                                                
திரியில்லை தீயுமில்லை – ஆயினும்                                                    
திருவுடல் எரியுண்டதே

ஒருவரின் சுவாசத்திலே
இருவரும் வாழுகின்றோம்
உடல் என்ற பாத்திரத்தில்
உயிர்ப்பொருள் தேடுகின்றோம்

காற்றில் ஒலிபோலே
கடலில் மழைபோலே
இருவரும் ஒருவரில் ஒன்றினோம்

*
பூக்கள் ஒன்றுதிரண்டு                                     
படைகூட்டி வருவதுபோல்                                       
இன்பம் ஒன்றுதிரண்டு
என்மீது பாய்கிறதே

என் ஆவி பாதி குறைந்தால்
என் மேனி என்னாகும்?
ஆகாயம் அசைகிறபோது
விண்மீன்கள் என்னாகும்?

தரையில் கிடந்தேனே
தழுவி எடுத்தாயே
தலைமுதல் அடிவரை நிம்மதி

*
பண்ணும் தொல்லைகளெல்லாம்                                                                                      
துன்ப வாதை செய்கிறதே                            
இன்னும் தொல்லைகள் செய்ய  
பெண்ணின் உள்ளம் கெஞ்சியதே

திறக்காத ஜன்னல்கள் எல்லாம்
திடுக்கிட்டுத் திறக்கிறதே
எனக்குள்ளும் இத்தனை அறையா
எனக்கின்று புரிகிறதே

மழையில் தலைசாயும்
இலையின் நிலைபோல
எனதுயிர் உன்வசம் ஆனதே

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com