செய்திகள்

சர்ச்சைப் பேச்சு: மகளிர் ஆணையத்தில் பாக்யராஜ் ஆஜர்!

16th Dec 2019 12:59 PM | எழில்

ADVERTISEMENT

 

கருத்துகளை பதிவு செய் என்கிற படத்தின் பாடல் வெளியிட்டு விழாவில் இயக்குநரும் நடிகருமான கே. பாக்யராஜ் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. பாக்யராஜ் பேசியதாவது: ஒரு பட்டிமன்றத்தில், ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது என்று பேசி, விவாதம் செய்தேன். பெண்கள் நீங்கள் இடம் கொடுப்பதால் தான் தவறு நடப்பதற்கு வாய்ப்பாக அமைகிறது. எனவே நீங்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். ஆண்கள் தவறு செய்தால் அது போகிறபோக்கில் சென்றுவிடும். பெண்கள் தவறு செய்தால் அது பெரிய தப்பாகிவிடும். பொள்ளாச்சியில் நடந்த சம்பவத்திற்கு ஆண்கள் மட்டும் காரணமில்லை. அவர்கள் செய்தது தவறு என்றால், அதற்கான வாய்ப்புகளை பெண்கள் நீங்கள் கொடுத்துவிட்டீர்கள். மகளின் பாதுகாப்புக்காகத்தான் ஒரு தந்தை செல்போன் வாங்கித் தருகிறார். ஆனால், அதைப் புரிந்துகொள்ளாமல் தனியாகச் சென்று ரகசியமாக யாருடனோ பேசுவது பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என்றார். 

பாக்யராஜின் இந்தப் பேச்சு மிகவும் சர்ச்சையானது. சமூகவலைத்தளங்களில் பலரும் பாக்யராஜின் கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். பாக்யராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆந்திர மகளிர் ஆணையம், தமிழக மகளிர் ஆணையத்துக்குப் பரிந்துரைத்தது. இதையடுத்து மாநில மகளிர் ஆணையம், டிசம்பர் 2-ம் தேதி பாக்யராஜ் நேரில் ஆஜராக சம்மன் அளித்திருந்தது. 

டிசம்பர் 2 அன்று ஆஜராக முடியாது என நேரம் கேட்டிருந்தார் பாக்யராஜ். இதையடுத்து அவர் இன்று நேரில் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி, மாநில மகளிர் ஆணையத்தில் ஆஜராகி, தனது கருத்துகளுக்கு விளக்கம் அளித்துள்ளார் பாக்யராஜ். 

ADVERTISEMENT

Tags : Bhagyaraj
ADVERTISEMENT
ADVERTISEMENT