செய்திகள்

கெளதம் மேனனின் ‘குயின்’ வெப் சீரிஸில் சிமி கார்வல் நடிக்க மறுத்தது ஏன்?

14th Dec 2019 03:27 PM | சரோஜினி

ADVERTISEMENT

 

மறைந்த முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதையை ‘குயின்’ என்ற பெயரில் வெப் சீரிஸாக பிரசாத் முருகேசனுடன் இணைந்து இயக்கி வெளியிட்டுள்ளார் கெளதம் மேனன். இத்தொடரில் ஜெயலலிதாவின் வாழ்க்கை அவரது சிறுமிப் பருவம் முதற்கொண்டு அவர் இறப்பு வரையிலுமாகப் படமாக்கப்பட்டுள்ளது. இதில் நாயகியாக வரும் சக்தி சேஷாத்ரியின் வாழ்க்கை அப்பட்டமாக ஜெயலலிதாவின் வாழ்வைப் பிரதிபலிக்கிறது. ஜெயலலிதா மறைந்ததும் அவர் 1999 ஆம் ஆண்டில் பாலிவுட் நடிகையும், தொலைக்காட்சி பிரபலமும் ஆன சிமி கார்வலுக்கு அளித்த நேர்காணல் ஒன்று அனைத்து ஊடகங்களிலும் பரவலாகப் பகிரப்பட்டது.

அந்த நேர்காணலில் அப்படி என்ன சிறப்பு என்றால்? ஜெயலலிதா ஆரம்ப காலங்களில் ஊடகத்தினரிடம் எத்தனைக்கெத்தனை நட்புடன் இருந்து வந்தாரோ அத்தனைக்கத்தனை வெறுப்புடன் ஊடகத்தினரை வெறுத்த காலகட்டத்தில் மிகச்சிறப்பாக வழங்கிய நேர்காணல்களில் ஒன்று அது என்ற பெருமை அதற்கு உண்டு. ஜெயலலிதா அடிக்கடி மனம் திறந்து பேசக்கூடியவர் அல்ல. ஆனால், இந்த குறிப்பிட்ட நேர்காணலில் ஜெயலலிதா தன் மனதில் இருப்பதை ஒளிவு மறைவின்றி பகிர்ந்து கொண்டதோடு சிமியுடன் இணைந்து இந்திப் பாடலொன்றையும் பாடி இருப்பார். தான் பிறந்தது முதல் அரசியலில் தலைமைப் பதவிக்கு வந்தது வரை அத்தனை விஷயங்களையும் எவ்வித தடங்கலும் இன்றி ஜெயலலிதா பகிர்ந்து கொண்டது அந்த ஒரே ஒரு நேர்காணலில் மட்டுமே. எம் ஜி ஆருடன் தனக்கிருந்த நெருக்கம், ஷோபன் பாபுவுடன் இருந்த உறவு, தன் அம்மா மீதான தனது ஏக்கம், ஒரு சாதாரண நடுத்தர வர்க்கத்து இல்லத்தரசியாக வாழும் ஆசை கொண்ட தன் ஆழ்மன அந்தரங்கம். இன்றைக்குத் திருமணம் ஆகியிருந்தால் 4 குழந்தைகளுடன் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டிய பெண்களுள் ஒருத்தியாகத் தனக்குத்தானே கற்பனை செய்து கொண்டு அவர் சிமியுடன் பகிர்ந்து கொண்ட தகவல்கள் அனேகமுண்டு அந்த நேர்காணலில்.

கெளதம் மேனனின் ‘குயின்’ தொடங்குவதே இந்த நேர்காணலை முன் வைத்துத் தான்.

ADVERTISEMENT

அதில், சிமி அளிக்கும் அறிமுகப்படலம் அமர்க்களமாக இருக்கும்.

நிஜத்தில் ஜெயலலிதாவை மனம் திறந்து பல உண்மைகளைப் பகிர்ந்து கொள்ள வைத்த சிமியே வெப் சீரிஸிலும் நடித்தால் நன்றாக இருக்கும் என நினைத்து கெளதம் மேனன் தரப்பு அந்தக் காட்சியில் நடிக்க சிமியை அணுகியது. ஆனால், சிமியோ.. ‘அது அந்த நேர்காணலுக்கு கெளரவமாக இருக்காது. நாடு முழுவதும் மிகப்பிரபலமாகப் பரவி விட்ட அந்த நேர்காணலை மீண்டும் போலியாக உருவாக்குவது என்பது தார்மிக ரீதியில் நேர்மையான அணுகுமுறையாக இருக்காது. என்பதால் நான் அதில் நடிக்க மறுத்து விட்டேன் என்கிறார் சிமி.

சரி தான்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT