ஸ்பைடர் மேன் வரிசைப் படங்களுக்கு ஆபத்து?: வருமானப் பகிர்வில் நேர்ந்த புதிய சிக்கல்!

மார்வெல் படங்களின் வரிசையில் ஸ்பைடர் மேன் கதாபாத்திரம் இடம்பெறாது என்கிற நிலைமை ஏற்பட்டுள்ளது... 
ஸ்பைடர் மேன் வரிசைப் படங்களுக்கு ஆபத்து?: வருமானப் பகிர்வில் நேர்ந்த புதிய சிக்கல்!

மார்வெல் காமிக்ஸின் சூப்பர் ஹீரோ படங்களின் 23-வது படமாக, ஸ்பைடர் மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம் படம் சமீபத்தில் வெளியானது. ஸ்டான் லீ மற்றும் ஸ்டீவ் டிட்கோ ஆகிய இருவரும் இணைந்து உருவாக்கிய கற்பனைக் கதாபாத்திரமான ஸ்பைடர்-மேன், நகைச்சுவைப் புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள் ஆகிய இரண்டிலுமே உலக அளவில், மிகப் பிரபலமான ஒரு சூப்பர் ஹீரோ. 2002-இல்  "ஸ்பைடர்-மேன்', 2004-இல் "ஸ்பைடர்-மேன் -2', 2007-ல் ஸ்பைடர் மேன் 3 ஆகிய படங்கள் முதலில் வெளிவந்தன. பிறகு, 2012-இல் "தி அமேஸிங் ஸ்பைடர்-மேன்', 2014-இல் "தி அமேஸிங் ஸ்பைடர்-மேன் 2' மற்றும் 2017-இல் "ஸ்பைடர்-மேன்: ஹோம் கமிங்' , 2019-ல் ஸ்பைடர் மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம் என இதுவரை 7 படங்கள் வெளிவந்துள்ளன. 

இந்நிலையில் தற்போது இந்தத் தொடர் படங்களுக்கு ஓர் ஆபத்து ஏற்பட்டுள்ளது. 

மார்வெல் காமிக் கதாபாத்திரமான ஸ்பைடர் மேனைப் படமாக்க 1985-ல் உரிமம் பெற்றது சோனி நிறுவனம். முதலில் ஐந்து ஸ்பைடர் மேன் படங்களை சோனி நிறுவனம் தயாரித்தது. 2009-ல் 4 பில்லியன் டாலருக்கு மார்வெல் ஸ்டூடியோஸை கையகப்படுத்தியது டிஸ்னி.  2015-ல் டிஸ்னி மற்றும் மார்வெல் ஸ்டூடியோஸுடன் இணைந்து ஒப்பந்தம் செய்துகொண்டது சோனி. இதன்மூலம் சோனி நிறுவனம், ஸ்பைடர் மேன் படங்களின் இணை தயாரிப்பாளராக இருப்பதோடு லாபத்திலும் அதிகப் பங்கு வகிக்கும். இந்தக் கூட்டணியிலிருந்து 2017-இல் "ஸ்பைடர்-மேன்: ஹோம் கமிங்' , 2019-ல் ஸ்பைடர் மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம் என இரு ஸ்பைடர் மேன் படங்கள் வெளிவந்துள்ளன.

இந்நிலையில் வருமானப் பகிர்வில் சோனி - டிஸ்னி நிறுவனங்களிடையே உடன்பாடு ஏற்படாததால் ஸ்பைடர் மேன் வரிசைப் படங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. லாபத்தில் 50 சதவிகிதத்தைத் தனக்குத் தரவேண்டும் என்று டிஸ்னி கோரிக்கை விடுத்தது. ஆனால் தற்போது உள்ள ஒப்பந்தத்தையே தொடர விரும்பியது சோனி நிறுவனம். இதனால் இனிமேல் மார்வெல் படங்களின் வரிசையில் ஸ்பைடர் மேன் கதாபாத்திரம் இடம்பெறாது என்கிற நிலைமை ஏற்பட்டுள்ளது. 

இந்தச் செய்தியை அறிந்த ரசிகர்கள், #SaveSpiderman என்கிற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி சமூகவலைத்தளங்களில் தங்களுடைய வருத்தங்களைப் பகிர்ந்துவருகிறார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com