பிக் பாஸ் வீட்டிலிருந்து மதுமிதா ஏன் வெளியேறினார்? பிக் பாஸ் செய்தது சரியா தவறா?

பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் பார்க்காதவர்கள் என்ற இரண்டு பிரிவினர் உள்ளனர்.
பிக் பாஸ் வீட்டிலிருந்து மதுமிதா ஏன் வெளியேறினார்? பிக் பாஸ் செய்தது சரியா தவறா?

பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் பார்க்காதவர்கள் என்ற இரண்டு பிரிவினர் உள்ளனர். இதில் நிகழ்ச்சியைப் பார்ப்பவர்கள் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்க, பார்க்காதவர்கள் இதுல போய் டைம் வேஸ்ட் பண்ணறீங்க, இது திரைக்கதையாக எழுதப்பட்டு, ஒரு மெகா சீரியல் போல நடிக்க வைக்கறாங்க என்று வசை பாடிக் கொண்டிருக்க, அதையெல்லாம் பற்றி எந்த கவலையும் இல்லாமல் பிக் பாஸ் சீஸன் 3 தொடர்ந்து வெற்றிகரமான ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

இந்நிகழ்ச்சியை சனி மற்றும் ஞாயிறு அன்று மட்டும் பார்ப்பவர்களும் உண்டு. இதற்குக் காரணம் சொல்லவே தேவையில்லை, நிகழ்ச்சியின் நாயகன் கமல்ஹாசன். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் பார்வையாளர்களான லட்சக்கணக்கானவர்களை இது பாதிக்கிறதா என்று கேட்டால், நிச்சயம் பாதிக்கும் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. காரணம் இதில் நடக்கும் சம்பவங்கள் மனரீதியாகவும் உணர்வுரீதியாகவும் காண்போரை பதற்றத்துக்கு உள்ளாக்குகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

பங்கேற்பாளர்களைப் பொருத்தவரையில் அவர்கள் பேருக்கும், புகழுக்கும் ஆசைப்பட்டு, அல்லது அதில் கிடைக்கும் வருமானத்துக்கு அல்லது தனிப்பட்ட சில காரணங்களை முன்னிட்டு கலந்து கொள்கிறார்கள். மேலும், அவர்கள் ஆசைப்பட்ட புகழ் அனைவருக்கும் கிடைத்ததா, பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின் அவர்களின் நிலை மாறியதா என்றால் ஒரு சிலரைத் தவிர யாரும் பெரும் புகழ் அடைந்ததாகத் தெரியவில்லை. முதல் சீஸனில் பிக் பாஸ் வீட்டில் ஓவியாவின் நடவடிக்கைகளை ரசிக்க ஒரு கூட்டமே இருந்தது. பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய உடன் ஓவியா அடைந்த புகழை, தமிழ் பேசும் நல்லுலகம் அறியும். மற்றவர்கள் இதிலிருந்து அடைந்தது என்னவென்று புரியாமல்தான் இருக்கிறார்கள். எனவே இது புகழ் அடைய ஒரு குறுக்கு வழி மட்டுமே. ஏற்கனவே இருக்கும் நல்ல பெயரைக் கூட கெடுத்துக் கொண்டவர்கள் இந்நிகழ்ச்சியில் உண்டு. சரி இப்போதைய சீஸனில் நேற்று நடந்த ஒரு விஷயம் சர்ச்சைக்கு உள்ளானது. என்ன நடந்திருக்கும் என்பது யாருக்கும் தெரியாது ஆனால் என்ன நடந்திருக்கலாம் என்று யூகிக்க முடிகிறது. நீங்கள் நினைப்பது சரிதான். மதுமிதா ஏன் வெளியேறினார் என்பதுதான் அது.

மதுமிதா விஷயத்தில் என்ன நடந்தது? தற்கொலை முயற்சி செய்தாரா என்ற கேள்வி பிக் பாஸ் ரசிகர்களின் மனங்களில் எழுந்துள்ளது. ஆனால் அத்தகைய முயற்சியை அவர்கள் செய்யவில்லை என்பதை இன்னும் சில நாட்களில் மதுமிதா நேர்காணல்களில் நிச்சயம் கூறுவார். உண்மையில் என்னதான் நடந்தது? கடந்த வாரம் வைக்கப்பட்ட டாஸ்க்கில் ஹலோ ஆப் எனும் செயலியில் இன்மேட்ஸ் அனைவரும் வெளியே உள்ள தங்கள் ரசிகர்களுக்கு ஒரு செய்தியை பகிர வேண்டும். இதில், மதுமிதா காவிரி பிரச்னையை பேசும்விதமாக, வருண பகவான் கர்நாடகாவை சேர்ந்தவராகத்தான் இருக்க வேண்டும், இங்கேயும் கொஞ்சம் வரலாம் இல்லையா என்பது போன்று பதிவு செய்துள்ளார். அங்கிருந்த ஷெரீன் கர்நாடகாவை சேர்ந்தவர் என்பதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அரசியல் பேசாதீர்கள் என்றும் எடுத்துக் கூறியிருக்கிறார். இருவரும் விவாதம் செய்ய, மற்றவர்கள் அவர்கள் சமாதானப்படுத்த சார்பு எடுக்கத் தொடங்கினார்கள்.

சேரனும் கஸ்தூரியும் மதுமிதாவுக்கு பரிந்து பேச, மற்றவர்கள் ஷெரீன் கட்சியில் பேசினார்கள் என்பது off the record செய்தி. மதுமிதா விடாப்பிடியாக அவர் சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்க, பிக் பாஸ் குரல் இடையே புகுந்து அவரை நிறுத்த வேண்டியதாகிவிட்டது. இங்கே கவனிக்க வேண்டிய ஒரு விஷயம், மதுமிதா தனது கருத்தை பதிவு செய்ததும் உணர்வாளராக பேசியதும் தவறல்ல, ஆனால் அது அங்கிருந்த மற்றவர்களை, குறிப்பாக ஷெரீனை காயப்படுத்தும்விதமாக இருந்ததால் அது சர்ச்சையாகிவிட்டது. இது சென்சிட்டிவான விஷயம் என்பதால் இதை ஒளிப்பரப்ப முடியாது என்றும் முடிவெடுக்கப்பட்டது.

அதன்பின் நாள் முழுவதும் இந்த விஷயம் நீரு பூத்த நெருப்பாக இருந்துள்ளது. மதுமிதா தன் தரப்பு நியாயத்தை வலியுறுத்த உணர்ச்சிவசப்பட்டு தன் கையை அறுத்துக் கொண்ட சம்பவமும் நடந்தேறியிருக்கிறது. மதுமிதாவை இன்னொரு டாஸ்க் செய்யச் சொன்னபோது அவர் மறுத்துள்ளார். கொடுக்கப்பட்ட டாஸ்கை ஒழுங்காக செய்யாதவர்கள், ஒவ்வொரு வாரமும் எலிமினேட் ஆவார்கள். எனவே மதுமிதா டாஸ்க்கை செய்யாததாலும், தற்கொலை முயற்சி செய்தார் என்பதாலும் வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது.

பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சியில் எது நியாயம் எது சரி, இவர் செய்தது தான் சரி, அவர் செய்தது அநியாயம் என்று முடிவு செய்வது பிக் பாஸோ, கமல்ஹாசனோ அல்லது அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களோ இல்லை, உண்மையில் இந்த நிகழ்ச்சியின் ஒவ்வொரு பார்வையாளர்கள்தான் அதை முடிவு செய்கிறீர்கள். ஆம் உங்களின் மனநிலைக்கு ஏற்றவாறு நீங்கள்தான் எல்லா முடிவுகளையும் செய்கிறீர்கள். சில சமயம் அது நிகழ்ச்சியின் முடிவுகளோடு ஒத்துப் போகிறது. அப்போது நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள், பல சமயம் முரண் படுகிறது, அப்போது கோபப்படுவீர்கள். உண்மைதானே? எது எப்படியோ நிகழ்ச்சி வெற்றியடைந்துவிடும். நீங்கள் போடும் ஓட்டும், உங்களின் பொன்னான நேரத்தையும், அதைவிட பொன்னான மனதையும் நீங்கள் இந்நிகழ்ச்சிக்காக அர்ப்பணித்துள்ளீர்கள். இப்போது சொல்லுங்கள் மதுமிதா வெளியேறியது சரியா தவறா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com