இது ஆணாதிக்க மனோபாவத்துக்கு எதிரான படம்! நேர்கொண்ட பார்வை

நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த வியாழக்கிழமை வெளியான திரைப்படம் ‘நேர்கொண்ட பார்வை'.
இது ஆணாதிக்க மனோபாவத்துக்கு எதிரான படம்! நேர்கொண்ட பார்வை

நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த வியாழக்கிழமை வெளியான திரைப்படம் ‘நேர்கொண்ட பார்வை'. ஹிந்தி திரைப்பட உலகின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் நடிப்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான ‘பிங்க்' என்ற பாலிவுட் திரைப்படத்தின் மறுஆக்கம்தான் நேர்கொண்ட பார்வை. இந்தப் படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார்.

இந்தியா முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் நாள்தோறும் நிகழ்ந்து வருகின்றன. இதற்குக் காரணம் பெண்கள் அணியும் உடைகள்தான் என்று ஒரு பக்கமும், உடைதான் காரணம் என்றால் பச்சிளம் குழந்தைகளுக்குக் கூட பாலியல் வன்கொடுமைகள் நடந்து கொண்டுதானே இருக்கிறது... அதற்கு என்ன பதில்? என்று மறுபுறமும் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. ‘பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் நபர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டும். நடு ரோட்டில் நிற்க வைத்து சுட வேண்டும்' என்றெல்லாம் கொதித்தெழுபவர்களும் இருக்கிறார்கள்.

பெண்கள் குறித்த ஆண்களின் மனோபாவம்தான் முதலில் மாற வேண்டும் என்பதே பொதுவான கருத்தாக உள்ளது. இந்தக் கருத்தை மையப்படுத்தியே இந்தப் படத்தின் கதை எழுதப்பட்டுள்ளது. பெற்றோர்களுடன் இல்லாமல் தனியாக வாழும் மூன்று இளம்பெண்கள், செல்வாக்கு கொண்ட இளைஞர்கள் சிலரால் பாலியல் சீண்டலுக்கு உள்ளாகின்றனர். அப்பெண்கள் காவல் நிலையத்துக்குச் சென்று புகார் அளிக்கும் போது, செல்வாக்கு உள்ள இளைஞர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது காவல்துறை.

பாலியல் வன்கொடுமை செய்ய வந்த இளைஞரை தற்காப்புக்காக தாக்கிய பெண்ணுக்கு எதிராக கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்கிறது போலீஸ். மனைவியை இழந்து வழக்குரைஞர் பணியைத் தவிர்த்து வாழ்ந்து வரும் பரத் சுப்ரமணியம் (அஜித்), இந்தப் பெண்களுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் வாதாடுகிறார்.

முடிவில் இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததா? செல்வாக்கு நிறைந்த இளைஞர்கள் சட்டத்தின் பிடியில் சிக்கினார்களா? என்பதே படம். ஹிந்தியில் அனிருத்தா ராய் செளதரி இயக்கத்தில் வெளியான இந்தப் படம், தமிழில் ஹெச்.வினோத் இயக்கத்தில் தயாராகி உள்ளது. இவர், தனது முந்தைய படங்களான சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களைப் போன்று மிக முக்கியமான கதையை இயக்கியுள்ளார். சிக்கலான கதையில் வசனங்களால் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறார். நீதிமன்றக் காட்சிகளை மிகச் சிறப்பாக கையாண்டிருக்கிறார். ஒளிப்பதிவாளர் நீரவ் ஷாவின் உழைப்பு பல காட்சிகளில் தெரிகிறது.

புதுமைப் பெண் கவிதையை எழுதிய பாரதியாரை நினைவூட்டும் வகையில், அஜித் கதாபாத்திரத்துக்கு பரத் சுப்ரமணியம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது! அஜித் தனது வழக்கமான பாணியைக் கைவிட்டுவிட்டு, மாறுபட்ட நடிப்பை இந்தப் படத்தில் வெளிப்படுத்தியுள்ளார். இளம் ரசிகர்களைக் கொண்டிருக்கும் அஜித் குமார் இது போன்ற படங்களில் நடித்து நல்ல கருத்தை இளைஞர்களின் மனதில் விதைக்க முற்பட்டதற்காக பாராட்டுகள்.

ஹிந்தியில் டாப்ஸி ஏற்றிருந்த பிரதான பாத்திரத்தை ‘விக்ரம் வேதா' புகழ் ஷ்ரத்தா ஸ்ரீநாத், இந்தப் படத்தில் ஏற்று மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். டெல்லி கணேஷ், ஜூனியர் பாலையா ஆகியோர் தலைகாட்டிவிட்டுப் போகின்றனர். அஜித் மனைவியாக நடித்து வித்யா பாலன் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறார். அவர் வரும் காட்சிகளில் இன்னமும் நீளம் இருந்திருக்கலாமோ என்று எண்ண வைத்து விடுகிறார். யுவன்சங்கர் ராஜாவின் இசை தேவையான இடங்களில் பதற்றத்தையும், ‘வானில் இருள்' பாடலில் சோகத்தையும் படர விட்டிருக்கிறது. அஜித்துக்காக சண்டைக் காட்சிகளைத் திணித்திருப்பதை தவிர்த்திருக்கலாம். பெண்கள் ‘நோ' என்று சொன்னால் அதற்கு அர்த்தம் ‘நோ' என்பதுதான். மனைவியாய் இருந்தாலும் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற கருத்தை இளைஞர்களின் மனதில் விதைப்பதில் வெற்றி பெற்றிருக்கிறது 'நேர்கொண்ட பார்வை'.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com