திங்கள்கிழமை 19 ஆகஸ்ட் 2019

தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் 'கேங்ஸ்டர்'!

By ஜி.அசோக்| DIN | Published: 11th August 2019 01:26 PM

நானி, நிவேதா தாமஸ் நடித்த தெலுங்குப் படம் 'நின்னு கோரி'. இந்தப் படம் தமிழில் ரீமேக் ஆகிறது. கண்ணன் இயக்கத்தில் அதர்வா ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கியது. 'கொடி' படத்துக்குப் பின் தமிழுக்கு வந்துள்ள அனுபமா பரமேஸ்வரன் இது பற்றிக் கூறும்போது, 'கொடி படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தேன். அதன் பிறகு நல்ல வாய்ப்பாக இந்த படம் அமைந்துள்ளது. நிவேதா தாமஸ் தெலுங்குப் படத்தில் சிறப்பாக நடித்திருந்தார். நான் எப்படி நடித்தாலும் அவரோடு ஒப்பிடுவார்கள். ஆனால், எனது நடிப்புப் பாணியிலேயே நான் நடிப்பேன். படத்தில் பரதநாட்டியக் கலைஞராக நடிக்கிறேன். கிளாசிக்கல் நடனம் கற்றதால் இந்த வேடம் எனக்குக் கூடுதல் பலமாக அமையும். சரியான தருணத்தில் எமோஷனை வெளிப்படுத்தும் விதமான கேரக்டர் இது. அதைப் புரிந்து நடித்து வருகிறேன்' என்றார்.

**

மலையாளத்தில் 'வந்தே மாதரம்' படத்தில் அர்ஜுன் நடித்திருந்தார். அதன் பின் மலையாளத்தில் அவர் கவனம் செலுத்தாமல் இருந்து வந்தார். தமிழுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்தார். இப்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'ஜேக் டேனியல்' என்ற மலையாளப் படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தமாகியுள்ளார். இதில் திலீப்புடன் அவர் நடிக்கிறார். 'வந்தே மாதரம்' படம் 2010-இல் வெளியானது. 9 ஆண்டுகள் கழித்து மீண்டும் அவர் மலையாளத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் வில்லன் வேடத்தில் அவர் நடிப்பதாகக் கூறப்படுகிறது. 'இரும்புத்திரை' படத்துக்குப் பிறகு அவருக்கு வில்லன் வேட வாய்ப்புகள் அதிகம் வருவதாகவும் அவற்றில் சில படங்களை மட்டுமே ஏற்பதாக அர்ஜுனுக்கு நெருங்கியவர்கள் கூறுகின்றனர்.

**

சாவித்ரி வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்த பின்னர் கீர்த்தியின் சினிமா வாழ்க்கை முழுவதும் திருப்பு முனை. சமீபமாக தமிழில் புதிய படம் எதுவும் ஏற்காமல் இருந்தார் கீர்த்தி சுரேஷ். விரைவில் அவர் ஹிந்தியில் அறிமுகம் ஆகிறார். இதற்காக தென்னிந்திய மொழிப் படங்களில் நடிப்பதை நிறுத்தி வைத்திருந்தார். இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் தமிழ்ப் படத்தில் அவர் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தை ஈஸ்வர் என்ற புதியவர் இயக்குகிறார். இந்தப் படத்துடன் ரதிந்திரன் பிரசாத் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படத்தையும் கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த இரண்டு படங்களுமே ஹீரோயினுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்கள். இந்த படங்களைத் தயாரித்தபடி தனுஷ் நடிப்பில் 'கேங்ஸ்டர்' கதையை இயக்குகிறார் கார்த்திக் சுப்புராஜ்.

**

தெலுங்கில் இருந்து தமிழுக்கு டப்பிங் செய்யப்பட்ட 'டியர் காம்ரேட்' படத்தில் நடித்துள்ள ராஷ்மிகா மந்தானா, அடுத்து விஜய் ஜோடியாகவும், தெலுங்கில் மகேஷ் பாபு ஜோடியாகவும் நடிக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில், 'எப்போதுமே என்னை மிகப் பெரிய நடிகையாக நான் நினைத்ததில்லை. நல்ல கதைகளைக் கேட்கிறேன். அதில் எனக்குப் பொருத்தமான கேரக்டரைத் தேர்வு செய்கிறேன். மற்றபடி வீண் விவகாரங்களில் ஈடுபட மாட்டேன். எவ்வளவு பெரிய பிரச்னையாக இருந்தாலும், ஒரு நிமிடம் கூட என்னால் சோகமாக இருக்க முடியாது. இதை வைத்து, படத்தில் எனக்கு அழத் தெரியாது என்று சிலர் கிண்டல் செய்தனர். அவர்களுக்கு பதில் சொல்லும்விதமாக 'டியர் காம்ரேட்' படத்தில் என் நடிப்பு அமைந்துள்ளது. சோகமான காட்சிகளில் என் நடிப்பு எப்படி இருந்தது என்று ரசிகர்கள் சொல்லி வருகிறார்கள்' என்றார். தற்போது தீவிரமாக தமிழ் கற்று வருகிறார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : dhanush danush gangster karthik subbaraj kodi anupama parameswaran keerthi suresh cinema movie tamil cinema latest news

More from the section

பிக் பாஸ் வீட்டிலிருந்து மதுமிதா ஏன் வெளியேறினார்? பிக் பாஸ் செய்தது சரியா தவறா?
அதை வெளியில் சொல்வதில் தவறில்லை! நடிகை தீபிகா படுகோன்
நடிகை ரேகா செய்த முன்னேற்பாடு!

ரோஜா மலரே!- குமாரி சச்சு
 

கரிசனங்களின் குவியல்