திங்கள்கிழமை 19 ஆகஸ்ட் 2019

தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: சிறந்த தமிழ்ப் படம் "பாரம்', சிறந்த நடிகை கீர்த்தி சுரேஷ்

DIN | Published: 10th August 2019 05:21 AM

66-ஆவது தேசியத் திரைப்பட விருதுகள் தில்லியில் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டன. இதில், தேசிய அளவில் சிறந்த திரைப்படமாக குஜராத்தி மொழிப் படம் "ஹெல்லாரோ', மாநில மொழிகளில் சிறந்த தமிழ்த் திரைப்படமாக "பாரம்' ஆகியவை தேர்வாகியுள்ளன.

சிறந்த நடிகருக்கான தேசிய விருது ஆயுஷ்மான் மற்றும் விக்கி ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகைக்கான தேசிய விருது கீர்த்தி சுரேஷுக்கு கிடைத்துள்ளது. "மகாநடி'  தெலுங்குப் படத்தில் நடித்ததற்காக அவருக்கு இந்த விருது கிடைத்துள்ளது. இப்படம், நடிகை சாவித்ரியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டதாகும்.

கன்னடம்,  மலையாளம்,  ஹிந்தி மொழிப் படங்கள் பல்வேறு பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளன.  ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் "அந்தாதூன்' ஹிந்தி படமும்,  "உரி: தி சர்ஜிகல் ஸ்டிரைக்',  "பதாயி ஹோ' ஆகிய ஹிந்தி படங்களும் பல்வேறு பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளன.  இந்த ஆண்டு பாலிவுட் படங்கள் அதிக விருதுகளை தட்டிச் சென்றுள்ளன. 

ஒவ்வொரு ஆண்டும் மத்திய செய்தி, ஒலிபரப்பு அமைச்சகத்தின் சார்பில் தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. வழக்கமாக ஏப்ரல் மாதம் இதற்கான அறிவிப்பு வெளியாகும்.  மக்களவைத் தேர்தலையொட்டி, இந்த அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், 66-ஆவது தேசியத் திரைப்பட விருதுகள் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டன. விருதுக்குத் தேர்வான திரைப்படங்கள்,  நடிகர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட கலைஞர்கள் குறித்த அறிவிப்பை  விருது  நடுவர் குழுத் தலைவர் ராகுல் ரவய்ல் வெளியிட்டார். ஆவணப்படங்கள் பிரிவு, சினிமா மீதான சிறந்த கட்டுரை,  திரைப்படப் பிடிப்புக்கான உகந்த மாநிலம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டன.

முதல் முறையாக அறிவிக்கப்பட்டுள்ள படப்பிடிப்புக்கு உகந்த மாநில விருது, உத்தரகண்ட்  மாநிலத்துக்கு கிடைத்துள்ளது. சிறந்த திரைப்படமாக அபிஷேக் ஷா இயக்கிய "ஹெல்லாரோ' எனும் குஜராத்தி படத்துக்கு கிடைத்துள்ளது. இந்த படம் சிறப்பு நடுவர் விருதையும் வென்றுள்ளது.

"உரி: தி சர்ஜிகல் ஸ்டிரைக்' ஹிந்தி திரைப்படத்தை இயக்கிய ஆதித்யா தருக்கு சிறந்த இயக்குநர் விருது கிடைத்துள்ளது. இதே படத்துக்கு சிறந்த பின்னணி இசைக்கான விருதும் கிடைத்துள்ளது. நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் வெளிவந்துள்ள "பேட்மேன்' திரைப்படத்துக்கு சமூகப் பிரச்னைகள் தொடர்பான சிறந்த திரைப்பட விருது கிடைத்துள்ளது.

தமிழில் "பாரம்': மாநில மொழிப் படங்களில்  "பாரம்' எனும் தமிழ்ப் படத்துக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. பிரியா கிருஷ்ணஸ்வாமி இயக்கத்தில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது. தமிழ் கிராமம் ஒன்றில் மேற்கொள்ளப்படும் பாரம்பரிய கருணைக் கொலையை வெளிச்சத்துக்கு கொண்டுவரப் போராடும் நபரின் கதை, இப்படமாக உருவாகியுள்ளது.

இதுதவிர, ஆவணப்படப் பிரிவில் சுப்பையா நல்லமுத்து இயக்கத்தில் "நேச்சுரல் ஹிஸ்டரி யூனிட் இந்தியா' நிறுவனம் தயாரிப்பில் உருவான "தி வேர்ல்ஸ் மோஸ்ட் ஃபேமஸ் டைகர்' எனும் ஆவணப்படம் சிறந்த சுற்றுச்சூழல் படத்துக்கான விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

சிறந்த அறிமுக இயக்குநர் திரைப்படத்துக்கான இந்திரா காந்தி விருது,  "நால்' எனும் மராத்தி படத்தின் இயக்குநர் சுதாகர் ரெட்டி யக்கந்திக்கும், சிறந்த பொழுதுபோக்குப் படத்துக்கான விருது "பதாயி ஹோ' எனும் ஹிந்தி படத்துக்கும்,  தேசிய ஒருமைப்பாட்டு மீதான சிறந்த படத்துக்கான நர்கிஸ் தத் விருது, "ஒண்டல்ல எரடல்ல' எனும் கன்னடப் படத்துக்கும் கிடைத்துள்ளது.


விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படங்கள், கலைஞர்கள் விவரம்

சிறந்த திரைப்படம்    "ஹெல்லாரோ' (குஜராத்தி)
சிறந்த குழந்தைகள் திரைப்படம்    "சர்க்காரி ஹிரிதய பிரதாமிகா ஷாலே காஸர்கோடு' ( கன்னடம்)
சிறந்த நடிகர்கள்    ஆயுஷ்மான் குரானா 
(அந்ததாதூன்- ஹிந்தி),  விக்கி கெளசல் ("உரி: தி சர்ஜிகல் ஸ்டிரைக்'-ஹிந்தி)
சிறந்த நடிகை    கீர்த்தி சுரேஷ் (மகாநடி - தெலுங்கு)
சிறந்த துணை நடிகர்    ஸ்வானந்த் கிர்கிரே (சும்பக்- மராத்தி)
சிறந்த துணை நடிகை    சுரேகா சிக்ரி (பதாயி ஹோ- ஹிந்தி)
சிறந்த பாடகர்    அரிஜித் சிங் (பத்மாவத் -ஹிந்தி)
சிறந்த பாடகி    பிந்து மாலினி, (நாத்திசராமி- கன்னடம்) 
சிறந்த ஒளிப்பதிவு    எம்.ஜெ. ராதாகிருஷ்ணன் (ஒலு- மலையாளம்)
சிறந்த திரைக்கதை     ராஹுல் ரவீந்திரன்  (சி அர்ஜுன் லா சோ - தெலுங்கு) 
சிறந்த படத் தொகுப்பு    எடிட்டர் நாகேந்திர கே. உஜ்ஜனி (நாத்திசராமி- கன்னடம்)
சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்    அவே (தெலுங்கு), கேஜிஎப் (கன்னடம்)
சிறந்த பாடலாசிரியர்    மஞ்சுநாதா  (நாத்திசராமி- கன்னடம்)
சிறந்த தமிழ்ப் படம்    பாரம்
சிறந்த கன்னட  திரைப்படம்    நாத்திசராமி 
சிறந்த தெலுங்கு திரைப்படம்    மகாநடி
சிறந்த மலையாள திரைப்படம்    சூடானி ஃப்ரம் நைஜீரியா
சிறந்த ஹிந்தி திரைப்படம்    அந்தாதூன்
சிறந்த இசை இயக்கம் (பாடல்)    பத்மாவத் (ஹிந்தி)
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

பிக் பாஸ் வீட்டிலிருந்து மதுமிதா ஏன் வெளியேறினார்? பிக் பாஸ் செய்தது சரியா தவறா?
அதை வெளியில் சொல்வதில் தவறில்லை! நடிகை தீபிகா படுகோன்
நடிகை ரேகா செய்த முன்னேற்பாடு!

ரோஜா மலரே!- குமாரி சச்சு
 

கரிசனங்களின் குவியல்