தேசிய விருது: வெறுங்கையுடன் திரும்பிய தமிழ்த் திரையுலகம்!

வேறு எந்த தேசிய விருதும் இல்லை. கிட்டத்தட்ட வெறுங்கையுடன் திரும்பி வந்துள்ளது தமிழ்த் திரையுலகம்... 
தேசிய விருது: வெறுங்கையுடன் திரும்பிய தமிழ்த் திரையுலகம்!

66-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. அதில் சிறந்த தமிழ்த் திரைப்படமாக 'பாரம்' தேர்வாகியுள்ளது.

அவ்வளவுதான். வேறு எந்த தேசிய விருதும் இல்லை. கிட்டத்தட்ட வெறுங்கையுடன் திரும்பி வந்துள்ளது தமிழ்த் திரையுலகம். 

2017-ம் வருடம் தமிழ்த் திரையுலகம் ஓரளவு விருதுகளை அள்ளியது. மொத்தமாக தமிழகத்துக்கு 6 தேசியத் திரைப்பட விருதுகள் கிடைத்தன. சிறந்த தமிழ்த் திரைப்படமாக 'ஜோக்கர்' தேர்வானது. சிறந்த பாடலாசிரியாக வைரமுத்துவும், ஒளிப்பதிவாளராக திருவும் தேர்வு செய்யப்பட்டார்கள். வைரமுத்துவுக்கு 7-வது முறையாக தேசிய விருது கிடைத்தது. சிறந்த திரைப்படத் திறனாய்வாளராக தயாரிப்பாளர் தனஞ்செயன் அறிவிக்கப்பட்டார். அவர் பெற்ற இரண்டாவது தேசிய விருதாகும். சிறந்த பின்னணிப் பாடகர் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த சுந்தரய்யர் தேர்வு செய்யப்பட்டார். 'ஜோக்கர்' படத்தில் இடம்பெற்ற 'ஜாஸ்மின்' பாடலைப் பாடியதற்காக அவருக்கு விருது கிடைத்தது. சிறந்த கலை இயக்கத்துக்கான விருது '24' படத்துக்குக் கிடைத்தது. சுப்ரதா சக்ரவர்த்தி, ஸ்ரேயஸ் கெடேகர் மற்றும் அமித் ராய் ஆகிய மூன்று கலை இயக்குநர்கள் இவ்விருதுக்குத் தேர்வானார்கள். 

கடந்த வருடம் மூன்று தேசிய விருதுகள். சிறந்த தமிழ்ப் படமாக செழியன் இயக்கிய டூலெட் தேர்வானது. காற்று வெளியிடை படத்துக்காக சிறந்த இசையமைப்பாளர் விருது ஏ.ஆர். ரஹ்மானுக்கும் காற்று வெளியிடை படத்தின் வான் வருவான் பாடலுக்காக சிறந்த பாடகிக்காக விருது சாஷா திருப்பதிக்கும் கிடைத்தன.

இந்த வருடம் சிறந்த தமிழ்ப்படம் என்கிற விருது மட்டும்தான். 

பரியேறும் பெருமாள், 96, செக்கச் சிவந்த வானம், ராட்சசன், வட சென்னை, மேற்கு தொடர்ச்சி மலை, கனா, 2.0 என எந்தவொரு தமிழ்ப் படமும் தேசிய விருது பெறுவதற்கான தகுதியை அடையவில்லை என்பது ஆச்சர்யமாக உள்ளது. அடுத்த வருடமாவது தமிழ்த் திரையுலகத்துக்கு நல்லது நடக்குமா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com