ஒரு துரோகம், ஒரு மரணம்! ஏரெடுத்து உழுத உழவன் வாளெடுத்து வரலாறு படைத்த கதை இது!

இலங்கையின் கடைசி தமிழ் மன்னனான ஸ்ரீவிக்கிரம ராஜசிங்கனின் வாழ்க்கை வரலாற்றை சிங்கள வரலாற்று
ஒரு துரோகம், ஒரு மரணம்! ஏரெடுத்து உழுத உழவன் வாளெடுத்து வரலாறு படைத்த கதை இது!

இலங்கையின் கடைசி தமிழ் மன்னனான ஸ்ரீவிக்கிரம ராஜசிங்கனின் வாழ்க்கை வரலாற்றை சிங்கள வரலாற்று வீர காவியமாக சிங்கள திரையுலகம் விரைவில் வெளியிட உள்ளது. சிங்கள மக்கள் மத்தியில் கண்டி மன்னன்தான்; இலங்கையின் கடைசி சிங்கள மன்னன் என்று நிலவி வந்த கருத்தை பொய்யாக்கி தமிழரான கண்ணுசாமிதான் ஸ்ரீவிக்கிரம ராஜசிங்கன் என்ற கருத்தை முதல் முறையாக ‘கிரிவெஸிபுர’என்ற  சிங்கள சினிமாவின் மூலமாக மக்கள் மத்தியில் வைக்கிறார்கள். 

கிரிவெஸிபுர என்றால் என்ன அர்த்தம்? மண்டையைக் குடைகிறதா? மலைவாழ் மக்கள் வாழும் இடம்தான் கிரிவெஸிபுர. இந்தத் தலைப்பைத் தான் படத்திற்கு வைத்திருக்கிறார்கள். இலங்கையில் ஒரு படம் எடுக்க சுமார் 50 லட்சம் முதல் 60 லட்சம் தான் செலவழியும். அதிகப்படியாக 1 கோடியில் படம் எடுப்பார்கள். அதுவே இலங்கையில் பெரிய பட்ஜெட் படம் என்று பேசப்படும். ஆனால் இப்படம், 13 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டிருக்கிறது. மிக மிக பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாரிக்கப் பட்டிருக்கிறது.

ஸ்ரீ விக்ரம ராஜசிங்கனின் வரலாற்றை ஆட்சி செய்த கண்டி பிரதேசம், அவர் ஆரம்பத்தில் வாழ்ந்த ஹங்குராங்கெத்த, வரலாற்று முக்கியமான இடங்கள் கொழும்பு போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது. ஒரு வருட காலக்கட்டத்தில் முழு பணிகளும் நடந்து  முடிவடைந்தது. 

கிரிவசிபுர படத்தின் கதை என்ன?

ஏரெடுத்து உழுத உழவன் வாளெடுத்து வரலாறு படைத்த கதை இது...

ஆலமரமாய் அகல கிளை விரித்திருக்கும் அதிகாரத்தை எது தாங்கி நிற்கிறது என்று ஆய்ந்து பார்த்தால் அதன் அடி ஆழத்தில் ஆணிவேராய் சதிகளும் நம்பிக்கை துரோகங்களும் புதைந்து கிடக்கும். அதிகாரம் செய்வது என்பது மலர்பஞ்சணையில் மல்லாக்க படுத்துறங்குவதல்ல நெருப்பாற்றில் நீந்துவது. 

இடது கண்ணை வலது கண்ணும் வலது கண்ணை இடது கண்ணும் 'சம்பவம்' பண்ண நினைக்கும் சம்பவம் அதிகாரம் இருக்கும் இடத்தில் மாத்திரமே சாத்தியம். அதிகாரம் செய்வதற்கு துரோகம் செய்கின்றனர் துரோகத்தின் சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு அதிகாரம் செய்கின்றனர். அதிகாரம் குளத்தைப்போல் ஓரிடத்தில் தேங்கி நிற்பதில்லை காடு மலைகளைத் தாண்டி நதிபோல ஓடவே நினைக்கும். உப்புக் கல்லைக் கூட உப்பரிகையில் ஏற்றி அழகு பார்க்கும் அதிகாரம் வைரக்கல்லை கூட வெறும் செங்கல்லாய் மாற்றும் சக்தி மிக்கது. அதிகாரத்தை உண்பவன் மீண்டும் மீண்டும் அதை உண்ண விரும்புகிறான் பின்னர் ஒருநாள் அவன் அதிகாரத்தாலயே உண்ணப் படுகின்றான்.

அதிகாரத்தில் இருந்த மன்னன் ஒருவனை மரணம் தின்று தீர்க்கிறது. அவன் அருகில் இருக்கும் மந்திரி அதிகாரத்தை கைப்பற்றி ஆட்சி பீடமேற ஆசைப்படுகின்றான். அதனால் சதிகளின் முன்னே சரணடைகின்றான். எங்கோ இருக்கும் உழவனை அழைத்து வந்து அவனை அரியனையேற்றி அழகு பார்க்கிறான். 'அம்பி’யாய் தெரியும் அவனை நம்பி கோட்டையிலே இருந்து கொண்டே கோட்டையை பிடிக்க மனக்கோட்டை கட்டுகின்றான். ஏர் ஏந்தி நின்றவன் வாளேந்தும் நிலைக்கு வந்தவுடன் அதிகார வயாக்கிரா அவனை நிமிர்த்துகிறது. கூடமில்லாமலே அவன் ஆடத் தொடங்குகிறான். விவசாயிடம் வீரத்தை எதிர்பார்க்காத மந்திரி தான் ஏற்றிவிட்டவன் தன்னை ஏமாற்றிவிட்டான் என்பதை உணர்ந்து அவன் அருகில் இருந்து கொண்டே வகை வகையாக வலை பின்னுகிறான்.

மன்னன் கொடியை இறக்க அவன் மகாகொடியவனாகிறான். அதிகாரத்தை கைப்பற்ற துரோகத்திடம் மண்டியிடுகின்றான். நாட்டை எதிரிகளிடம் காட்டிக் கொடுத்தாவது அதிகாரத்தை அடையலாம் என்று சூழ்ச்சி செய்கின்றான். இந்த ஆடு புலி ஆட்டத்தில் மந்திரியின் தலை உருளுகிறது. ஆம் ஆடு புலியை மேய்கிறது. இருந்தும் ஈற்றில் கசாப்பு கடையில் தொங்குகிறது ஆட்டின் தலை.சட்டியில் வெந்து  அகப்பையில் வந்து சாம்பலில் வீழ்ந்த சரித்திரமாகிறது சிரிவிக்கிரமராஜசிங்கன் என்ற கன்னசாமியின்  வாழ்வு. இது நூற்றாண்டு தாண்டிய நிஜமாக இருந்தாலும் இதுதான் நிகழ்காலத்தின் நிஜம். அதிகாரம் எங்கெல்லாம் சிறகு விரிக்கிறதோ அங்கெல்லாம் துரோகத்தின் வேட்டுக்கள் கேட்டுக் கொண்டே இருக்கும்...

'கிரிவெசிபுர' திரைப்படத்தின் சிறப்புக் காட்சிகள் திரையிடல், பாடல் வெளியீடு மற்றும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு அண்மையில் கொழும்பில் இடம்பெற்றது. கொழும்பு இலங்கை மன்ற கல்லூரியில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், திரைப்படத்தின் இயக்குநர் தேவிந்த கோங்கஹகே மற்றும் திரைப்படத்தில் பணியாற்றிய சகலரும் கலந்து கொண்டிருந்தனர்.

போலியாக சித்திரிக்கப்பட்ட ஸ்ரீ விக்ரம ராஜசிங்கனின் வரலாற்றை மறுதலித்து மறைக்கப்பட்ட பல  உண்மைகள் வெளியே வரும்படி ஆய்வு செய்யப்பட்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் குறிப்பிட்டுள்ளனர். இந்த திரைப்படம் இலங்கையில் பலத்த சர்ச்சையினை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ், சிங்களம்  ஆங்கிலம் என மூன்று மொழிகளும் படத்தில் கையாளப்பட்டுள்ளதோடு, பாடல்கள் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளன.

படத்தில் மூன்று மொழிகளையும், மும்மதங்களையும் சார்ந்தவர்கள் பணியாற்றியுள்ள நிலையில், இத்திரைப்படம் இலங்கையில் நல்லிணக்கத்திற்கு உந்து சக்தியாக அமையுமென படத்தின் இயக்குநர் நம்பிக்கை வெளியிட்டார். இலங்கையில் பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் ஆங்கில கலைஞர்கள் நடித்துள்ளதோடு இலங்கையின் பிரபல திரை நட்சத்திரங்களான புபுது சதுரங்க, நிரஞ்சனி ஷண்முகராஜா, எல்ரோய் அமலதாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழ் பாடல்களுக்கான வரிகளை இந்திய திரைப்படங்களுக்கு பாடல் எழுதி புகழ்பெற்ற கவிஞர் பொத்துவில் அஸ்மின் எழுதியுள்ளார். திரைப்படத்தை பெஸ்ட் லைப் நிறுவனம் தயாரித்துள்ளது. இத்திரைப்படம் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் எதிர்வரும் 29-ம் தேதி இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் வெளியிடப்படவுள்ளது.

தகவல் : கவிஞர் பொத்துவில் அஸ்மின் / எழுத்தாக்கம் - மாலதி சந்திரசேகரன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com