சினிமா

அதே சைக்கிள், அதே வாடகை: காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் திரைவிமர்சனம்

கி.ராம்குமார்

மருது, கொம்பன், குட்டிப்புலி, புலிக்குத்தி பாண்டி ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் முத்தையா இயக்கத்தில் நடிகர்கள் ஆர்யா, சித்தி இத்னானி ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்.

பாகநேரி ஊரில் ஒற்றுமையுடன் வாழ்ந்துவரும் இஸ்லாமியர்கள் மற்றும் இந்துக்களால் தனது அரசியல் ஆசை நிறைவேறாமல் தவிக்கிறார் ஆடுகளம் நரேன். சேர்மன் பதவியைப் பெறுவதற்காக ஊரை இரண்டாக்க வேண்டும் எனும் எண்ணத்தில் செயல்படும் ஆடுகளம் நரேனின் திட்டத்திற்கு காதர் பாட்சாவாக வரும் நடிகர் பிரபு முட்டுக்கட்டையாக இருக்கிறார். இதில் நடக்கும் மோதலே காதர் பாட்சா எனும் முத்துராமலிங்கம் திரைப்படத்தின் கதை. 

இயக்குநர் முத்தையா திரைப்படத்தில் இடம்பெறும் அதே அடிதடி, மோதல், ஊர்ப் பஞ்சாயத்து என அனைத்தும் இந்தத் திரைப்படத்திலும் தொடர்கிறது. வரலாற்றில் அனைத்து சண்டைகளும் மண்ணுக்காகவும், பொண்ணுக்காகவும் மட்டுமே நடந்தது எனத் தொடங்கும் திரைப்படத்தை சண்டைக்காட்சிகளால் இட்டு நிரப்பியிருக்கிறார் இயக்குநர் முத்தையா. ஆக்‌ஷன் காட்சிகளுக்காகவே நடிக்க ஒப்புக் கொண்டதைப் போல் இருக்கிறார் நடிகர் ஆர்யா. அவருடைய கருப்பு சட்டையும், கருப்பு வேட்டியும் நன்றாக இருந்தாலும் அவ்வப்போது வேட்டியைக் கழட்டி வைத்து சண்டையிடுவதெல்லாம் அதிகப்பிரசங்கித்தனம்.

தனது அண்ணன் குடும்பத்தின் குழந்தைகளை கவனித்துக் கொள்ளும் கதாநாயகி சித்தி இத்னானி அண்ணி குடும்பத்தினராலேயே சித்ரவதை செய்யப்படுவதும், அதற்காக ஆர்யாவை சந்திக்க நேர்வதும் அதிலிருந்து கதை வேறு ஒரு பாதைக்கு செல்வதுமாக திரைப்படம் நகர்கிறது. 

திரைப்படத்திற்கு தேவையான அளவு கதாபாத்திரங்கள் இருக்கலாம். அதற்காக குறிப்புகளை எழுதி வைத்துத் திருப்பிப் பார்த்துக் கொள்ளும் அளவிற்கு இத்தனை உறவு முறைகளை படத்தில் திணித்தால் ரசிகர்கள் குழம்பிவிட மாட்டார்களா? யார் யாருக்கு உறவு? இவர் யார்? இவருக்கும் அவருக்கும் என்ன பந்தம்? என்பதிலேயே கவனம் சிதறி விடுகிறது. படம் தொடங்கியதிலிருந்து சண்டையிட்டுக் கொண்டே இருக்கிறார் ஆர்யா. ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும் அவர் போடும் சண்டைக்கு எப்படியும் அவரிடம் அடி வாங்கியவர்களின் எண்ணிக்கை மட்டும் ஆயிரத்தைத் தொடும் போல.

முரட்டு ஆளாக ஆர்யா பொருந்தினாலும் அதைத் தாண்டி அவரை இன்னும் அதிகமாகப் பயன்படுத்தியிருக்கலாம் இயக்குநர். முந்தையப் படங்களைக் காட்டிலும் நன்றாக நடித்திருக்கிறார் நாயகி சித்தி இத்னானி. திரைப்படத்தின் தொடக்கத்தில் அவர் பேசும் வசனங்களின்போது பொருந்திப் போகாதா பின்னணி குரல் தொந்தரவு. இவர்களைத் தாண்டி நடிகர்கள் பிரபு, தமிழ், நரேன், சிங்கம்புலி, விஜி சந்திரசேகர், கொஞ்சம் நேரம் மட்டும் வரும் பாக்யராஜ், தீபா என லாரி லாரியாக வந்து நடித்துள்ளனர். 

துணை நடிகர்கள் பலரும் படம் தொடங்கியதிலிருந்து இறுதிவரை ஒரே மாதிரியாக இருக்கின்றனர். ஒருவரை ஒருவர் பழிவாங்கிக் கொள்வதும், வெட்டுவதும் குத்துவதும் மட்டுமே திரைப்படம் முழுக்க காட்சிகளாகத் தொடர்கிறது. விறுவிறுப்பான திரைக்கதை கைகொடுத்தாலும் ஒருகட்டத்தில் எப்போது முடியும் என எண்ணத் தோன்றுவது படத்திற்கு பலவீனம். எதிர்பார்த்த கிளைமேக்ஸ் காட்சிகள், யூகிக்கக் கூடிய காட்சிகள் ரசிகர்களின் பொறுமையை சோதிக்கலாம். 

திரைப்படத்தில் ஆறுதலான விசயம் என்பது பிரிவினைக்கு எதிரான காட்சிகள். “மாட்டை வச்சு அரசியல் பண்றதெல்லாம் இங்க பண்ணாத”, “அய்யனாரும், அல்லாவும் ஒன்னு அத அறியாதவன் வாயில மண்ணு”, “எல்லோரும் ஒன்னு மண்ணா பழகிட்டு இருக்கோம் அதுல மண் அள்ளிப் போட்டுடாதீங்க” மாதிரியான வசனங்கள் கவனம் ஈர்க்கின்றன. 

நடிகர் ஜிவி பிரகாஷ் குமாரின் பின்னணி இசை சண்டைக் காட்சிக்கு பலம் சேர்க்கிறது. மல்லிகைப் பூ வாசம் பாடல் மட்டும் முணுமுணுக்கச் செய்கிறது. 

முத்தையாவின் முந்தைய படங்களிலிருந்து பிரிவினைக்கு எதிரான காட்சிகளால் தனித்திருக்கிறது காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குச்சாவடிகளில் தமிழ் புறக்கணிப்பு: முன்னாள் எம்.எல்.ஏ. கண்டனம்

பனங்குடி: 708 போ் தோ்தல் புறக்கணிப்பு

வாக்காளா்களுக்கு பணம்; 4 போ் மீது வழக்கு

வெண்டைக்காய் விளைச்சல் அதிகரிப்பு விவசாயிகள் மகிழ்ச்சி

விழிப்புணா்வு பிரசாரம் அதிகம்; வாக்குப் பதிவு குறைவு

SCROLL FOR NEXT