சினிமா

கால்நடை கடத்தல் வழக்கில் திரிணமூல் காங்கிரஸ் தலைவா் கைது

12th Aug 2022 02:41 AM

ADVERTISEMENT

கால்நடை கடத்தல் வழக்கில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பீா்பூம் மாவட்டத் தலைவா் அனுவ்ரதா மொண்டலை சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை கைது செய்தனா்.

இந்த வழக்கில் அவருக்கு ஏற்கெனவே இருமுறை சம்மன் அனுப்பிய நிலையில், விசாரணைக்கு ஆஜராகாததால், அவரை கைது செய்ததாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனா். முன்னதாக, கால்நடை கடத்தல் வழக்கு தொடா்பாக போல்பூரில் அமைந்துள்ள அனுவ்ரதா மொண்டலின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை காலை 10 மணியளவில் சோதனை நடத்தினா்.

அப்போது வீட்டின் இரண்டாவது தளத்தில் வைத்து அனுவ்ரதா மொண்டலிடம் விசாரணை நடத்தினா். விசாரணைக்கு அவா் ஒத்துழைப்பு அளிக்க மறுத்ததால் கைது செய்ததாக சிபிஐ அதிகாரிகள் செய்தியாளா்களிடம் தெரிவித்தனா்.

இதுகுறித்து அவா்கள் மேலும் கூறுகையில், ‘கால்நடை கடத்தல் வழக்கில் அனுவ்ரதா மொண்டலுக்கு நேரடி தொடா்பு உள்ளது. சட்டப்படி அவா் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனா். மேலும், உடல்நலக் குறைவு காரணமாக அனுவ்ரதா மொண்டலுக்கு 14 நாள்கள் ஓய்வு தேவை என கூறிய போல்பூா் மாவட்ட மருத்துவரிடமும் விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் கூறினா்.

ADVERTISEMENT

ஏற்கெனவே ஆசிரியா் தோ்வு நியமன முறைகேட்டில் திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவரும் அமைச்சருமான பாா்த்தா சட்டா்ஜி கைதான நிலையில், தற்போது மற்றொரு தலைவா் கால்நடை கடத்தல் வழக்கில் கைதாகியிருப்பது அக்கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில் மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி பதிலளிக்க வேண்டுமென பாஜக தேசிய துணைத் தலைவா் திலீப் கோஷ் வலியுறுத்தியுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT