"மாநகரம்' படத்துக்குப் பிறகு இரண்டு வருடங்கள் கழித்து "கைதி'யுடன் களம் இறங்குகிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். ஓர் இரவு.. ஒரு காடு... ஒரு கைதி... இதுதான் இந்தப் படத்தின் பரபர ஒன் லைன்.
தீபாவளி ரேஸில் முதல் ஆளாக இடம் பிடித்த "கைதி', ஹீரோயினே இல்லாமல் முழுக்க முழுக்க ஆக்ஷன் கதையில் உருவாகியுள்ளது. இப்படத்தின் டீசஸருக்கு இணையத்தில் ஏக வரவேற்பு. அதே போல் படத்தின் ட்ரெய்லருக்கும் அமோக வரவேற்பு.
நடிகர்களுக்கு ரிகர்சல் கொடுக்கிற மாதிரி, இந்தப் படத்தின் படப்பிடிப்பை தொடங்குவதற்கு முன்பு, படத்தின் தொழில்நுட்ப குழுவுக்கு ஒருநாள் ரிகர்சல் நடந்துள்ளது. அதையும் ஒரு படப்பிடிப்பு மாதிரியே நடத்தி ஐந்து நிமிட அளவுக்கான வீடியோவாக எடுத்து, அதை எடிட் செய்து, அதற்குப் பின்னணி இசை சேர்த்து முழுமையான வீடியோவாக தயார் செய்யப்பட்டுள்ளது. இப்படி ஒரு படப்பிடிப்புக்கு தயாராவது தமிழ் சினிமாவில் இதுவே முதல் முறை என்கிறார்கள்.
இந்த வீடியோ மூலமாக கதை எந்த எல்லைக்குள் பயணிக்கப் போகிறது என்ற மைண்ட் செட்டை படக்குழுவுக்கு கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர்.
"தீரன் அதிகாரம்' படத்துக்கு ஒளிப்பதிவு செய்த சத்யன் சூரியன் படத்துக்கு ஒளிப்பதிவு.
கிடைக்கிற வெளிச்சத்திலேயே அழகான காட்சி வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, சண்டைக் காட்சிகளில் எல்லாக் காட்சிகளுக்கும் டூப் போடாமல் நடித்திருக்கிறார் கார்த்தி.
பின்னணி இசையில் சாம் சி.எஸ்ஸும் படத்தொகுப்பில் பிலோமின் ராஜும் தன் பங்கை நேர்த்தியாக கொண்டு வந்துள்ளார்கள்.
படப்பிடிப்பு முழுவதும் தென்மலை பகுதியில் நடந்துள்ளது. கடுமையான குளிரில்தான் படப்பிடிப்பு. குழுவில் எல்லோரும் கம்பளி போர்த்திக் கொண்டுதான் வேலை பார்த்திருக்கிறார்கள். கார்த்திக்கு காட்சிகளுக்கான ஆடை மட்டும்தான். அதனால் குளிரில் பயங்கரமாக சிரமப்பட்டுள்ளார்.