வர்த்தகம்

வேளாண்-தொழில்நுட்பம் புத்தாக்க நிறுவனங்களில் புதிய முதலீடுகள் வீழ்ச்சி

27th Sep 2023 03:17 AM

ADVERTISEMENT


புது தில்லி: இந்தியாவின் வேளாண்-தொழில்நுட்ப (அக்ரி-டெக்) புத்தாக்க நிறுவனங்களில் புதிய முதலீடுகள் முந்தைய 2021-23-ஆம் நிதியாண்டோடு ஒப்பிடுகையில் கடந்த 2022-23-ஆம் நிதியாண்டில் வீழ்ச்சிடைந்துள்ளன.

இது குறித்து துறை ஆலோசனை நிறுவனமான எஃப்எஸ்ஜி-யின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2021 ஏப்ரல் முதல் 2022 மாா்ச் வரையிலான நிதியாண்டுக்கும், 2022 ஏப்ரல் முதல் 2023 மாா்ச் வரையிலான நிதியாண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில், இந்தியாவின் வேளாண்-தொழில்நுட்ப புத்தாக்க நிறுவனங்களில் முதலீடுகள் 45 சதவீதம் சரிவைக் கண்டுள்ளன.

2022-ஆம் ஆண்டுக்கும், 2023-ஆம் ஆண்டுக்கும் (காலண்டா் ஆண்டு) இடைப்பட்ட காலகட்டத்தில் இது 10 சதவீதம் குறைந்துள்ளது.

ADVERTISEMENT

இந்தப் போக்கு நீடித்தால், 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கி 2024-ஆம் ஆண்டு மாா்ச் மாதத்தில் நிறைவடையும் நடப்பு நிதியாண்டிலும் வேளாண்-தொழில்நுட்ப புத்தாக்க நிறுவனங்களில் முதலீடு வீழ்ச்சியடையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

எனினும், அத்தகைய நிறுவனங்களில் அடுத்த 2024-25-ஆம் நிதியாண்டில் முதலீடுகள் மீண்டும் எழுச்சி பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.

தற்போது செயல்பட்டு வரும் வேளாண்-தொழில்நுட்ப புத்தாக்க நிறுவனங்கள் ஏற்கெனவே மேற்கொண்ட முதலீடுகளை வைத்து லாபத்தைப் பெருக்குவதில்யே நடப்பு நிதியாண்டிலும் கவனம் செலுத்தும்.

எனினும், அடுத்த நிதியாண்டில் விரிவாக்கம் போன்றவற்றுக்காக அந்த நிறுவனங்கள் கூடுதல் முதலீடுகளை மேற்கொள்ளும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

உலக அளவில் வேளாண்-தொழில்நுட்ப நிறுவனங்களின் செயல்பாடு மந்தமாக உள்ளது. அந்த சூழலுக்கு ஏற்ற வகையில் புதிய முதலீடுகளை மேற்கொள்வதற்கு இந்திய வேளாண்-தொழில்நுட்ப புத்தாக்க நிறுவனங்கள் தயக்கம் காட்டி வருவதாகத் தெரிகிறது.

முந்தைய 2021-22-ஆம் நிதியாண்டில் 121-ஆக இருந்த வேளாண்-தொழில்நுட்ப புத்தாக்க நிறுவனங்களின் புதிய முதலீட்டு ஒப்பந்தங்கள், கடந்த 2022-23-ஆம் நிதியாண்டில் 140-ஆக அதிகரித்தன.

எனினும், இத்தகைய ஒப்பந்தங்கள் மூலம் மதிப்பீட்டு காலகட்டத்தில் வேளாண்-தொழில்நுட்ப புத்தாக்க நிறுவனங்கள் திரட்டிய முதலீடுகளின் மதிப்பு 127.9 கோடி டாலரிலிருந்து 70.6 கோடி டாலராகச் சரிந்துள்ளது என்று அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT