மும்பை: சர்வதேச சந்தைகளின் பலவீனமான போக்குக்கு மத்தியில் முதலீட்டாளர்கள் ஹெல்த்கேர், நுகர்வோர் சாதனங்கள் மற்றும் கமாடிட்டி பங்குகளை விற்பனை செய்ததால் பங்குச்சந்தை குறியீட்டு எண்களான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி தொடர்ந்து நான்காவது நாளாக சரிவுடன் காணப்பட்டது.
அன்னிய நிதி வெளியேற்றம் மற்றும் எச்.டி.எஃப்.சி வங்கி பங்குகளில் அதிக விற்பனை ஆகியவை முதலீட்டாளர்களின் உணர்வுகளை பாதித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் 221.09 புள்ளிகள் சரிந்து 66,009.15 புள்ளிகளில் நிலைபெற்றது. அதிகபட்சமாக 66,445.47 புள்ளிகளாகவும், குறைந்தபட்சமாக 65,952.83 புள்ளிகளாகவும் இருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 68.10 புள்ளிகள் சரிந்து 19,674.25 புள்ளிகளாக உள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் விப்ரோ 2.32 சதவிகிதம் சரிந்தது, அதைத் தொடர்ந்து எச்டிஎஃப்சி வங்கி, பவர் கிரிட், அல்ட்ராடெக் சிமெண்ட், ஐடிசி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகிய பங்குகள் சற்று சரிந்து முடிவடைந்தன.
அதே வேளையில் இண்டஸ் இண்ட் பேங்க், மாருதி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, ஏசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ் ஆகிய பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின.
ஆசிய சந்தைகளில், சியோல் மற்றும் டோக்கியோ சரிவில் முடிந்தது. அதே வேளையில் ஷாங்காய் மற்றும் ஹாங்காங் எற்றத்தில் முடிவடைந்தன. ஐரோப்பிய சந்தைகள் பெரும்பாலும் இறக்கத்தில் வர்த்தகமாயின. அமெரிக்க சந்தைகள் நேற்று சரிவில் முடிந்தது.
சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 0.59 சதவீதம் உயர்ந்து 93.85 டாலராக உள்ளது.