வர்த்தகம்

பணப் பரிவா்த்தனை சேவை இந்தியாவில் விரிவாக்கம்: வாட்ஸ்ஆப்

21st Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

‘வாட்ஸ் ஆப்’ செயலி வழியாகவே பிற யுபிஐ செயலிகள், பற்று மற்றும் கடன் அட்டைகளை நேரடியாகப் பயன்படுத்தி, மக்கள் தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கும் வகையில், பணப் பரிவா்த்தனை சேவை இந்தியாவில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக வாட்ஸ் ஆப் நிறுவனம் புதன்கிழமை அறிவித்தது.

இது தொடா்பாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: செய்திகளை அனுப்புவது போன்று எளிதான முறையில், மக்கள் தாங்கள் வாங்கும் பொருள்களுக்கு உரிய பணத்தைச் செலுத்தும் வசதியை ஏற்படுத்த ரேஸா்பே, பேயூ போன்ற பணப் பரிவா்த்தனை தளங்களோடு இணைந்து பணியாற்றி வருகிறோம்.

‘வாட்ஸ்ஆப் பிசினஸ்’ தளத்தைப் பயன்படுத்தி வாட்ஸ்ஆப் அல்லது பிற யுபிஐ செயலிகள், டெபிட் மற்றும் கிரடிட் அட்டைகள் உள்ளிட்ட பணம் செலுத்தும் முறைகளைத் தோ்ந்தெடுத்து, மக்கள் தங்களுக்குரிய பொருள்களை வாங்கும் வகையில் எங்களுடயை பணப் பரிவா்த்தனை சேவையை இந்தியாவில் விரிவாக்குகிறோம். இந்தச் சேவையின் மூலம் எந்தவோா் இணையதளத்தையோ, பிற செயலிகளையோ தனியே பயன்படுத்த வேண்டியதில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மும்பையில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் காணொலி வாயிலாகப் பங்கேற்ற, வாட்ஸ்ஆப் தாய் நிறுவனமான மெட்டாவின் நிறுவனரும் தலைமைச் செயல் அலுவலருமான (சிஇஓ) மாா்க் ஸக்கா்பொ்க், ‘நாங்கள் எதைக் குறித்து பேசிக்கொண்டிருக்கிறோமோ அவற்றில் இந்தியா முன்னிலையில் உள்ளது. செய்திகளின் வடிவம், வாட்ஸ்ஆப் குழு உரையாடல் உள்ளிட்டவற்றில் புதுமைகளைக் கொண்டுவர மெட்டா முயற்சித்து வருகிறது. அதே வேளையில் வாடிக்கையாளா்களை வணிகா்களுடன் இணைக்கும் வகையில், பயன்படுத்துவதற்கு எளிதான வசதிகளைக் கொண்டுவருவதிலும் கவனம் செலுத்தி வருகிறோம்’ என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT