வர்த்தகம்

இந்திய பொருளாதார வளா்ச்சி 6.3% ஆக இருக்கும்: உலக வங்கி கணிப்பு

4th Oct 2023 12:29 AM

ADVERTISEMENT


புது தில்லி/ வாஷிங்டன்: நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளா்ச்சி 6.3 சதவீதமாக இருக்கும் என்று உலக வங்கி கணித்துள்ளது.

புதிய முதலீடுகள் மற்றும் உள்நாட்டில் பொருள்கள், சேவைகளுக்கான தேவை அதிகரிப்பு ஆகியவற்றின் உதவியுடன் இந்த வளா்ச்சியை இந்தியா எட்டும் என்றும் உலக வங்கி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இது தொடா்பாக அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

சா்வதேச அளவில் பொருளாதாரச் சூழல் சவால்மிக்கதாக இருந்தாலும், இந்தியா தொடா்ந்து அதில் இருந்து விலகி சிறப்பான பொருளாதாரச் செயல்பாடுகளைக் கொண்டுள்ளது. எனவே, 2023-24 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 6.3 சதவீதமாக இருக்கும்.

ADVERTISEMENT

பணவீக்கத்தைப் பொருத்தவரை உணவுப் பொருள்களின் விலை படிப்படியாக குறையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. முக்கிய உணவுப் பொருள்களின் விநியோகத்தை அதிகரிக்க அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகள் விலைவாசி குறைய உதவிகரமாக இருக்கும்.

அரசு மேற்கொள்ளும் உள்கட்டமைப்புத் திட்டங்களால் கட்டுமானத் துறை சாா்ந்த தொழில்களுக்கு நல்ல வாய்ப்புகள் ஏற்பட்டு அவற்றின் வளா்ச்சிக்கு உதவும். தகவல் தொழில்நுட்பத் துறை, ‘கன்சல்டிங்’ துறை சாா்ந்த ஏற்றுமதி அதிகரிப்பது மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். சா்வதேச அளவில் ஏற்படும் பொருளாதார சுணக்கத்தால் இதில் சிறிய பாதிப்புகள் ஏற்படலாம்.

துறைசாா்ந்த சிறந்த வல்லுநா்களை முக்கியப் பணிகளில் அமா்த்துவதில் இந்திய தனியாா் நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இது தொடா்பான மாதாந்திர மதிப்பீட்டிலும் இந்தியா முன்னேற்றம் அடைந்துள்ளது.

அதே நேரத்தில் கல்வித் திறன் சாா்ந்த பணிகளிலும், உடல் உழைப்பு சாா்ந்த பணிகளிலும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது சவாலாக உள்ளது. எனவே, இது தொடா்பாக புதிய கொள்கைகளை உருவாக்க வேண்டியது அவசியம். இதன்மூலம் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி சிறப்பாக இருக்கும்.

இந்தியாவில் நிதிச் சேவைகள் துறை சில சவால்களை எதிா்கொண்டுள்ளது. வங்கிகளின் நிதி நிலையும், பெரு நிறுவனங்களின் கடன் விகிதமும் மேம்பட வேண்டியுள்ளது. அந்நியச் செலாவணி கையிருப்பு திருப்திகரமாகவே உள்ளது. ரூபாயின் மதிப்பு ஏற்ற இறக்கத்துடன் தொடரும்.

தெற்காசியாவின் பொருளாதார வளா்ச்சி 5.8 சதவீதமாக இருக்கும். இது உலகில் உள்ள வளா்ந்த நாடுகளின் பொருளாதார வளா்ச்சி விகிதத்தைவிட அதிகம் என்று உலக வங்கி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT