புது தில்லி: கடந்த ஜலை முதல் செப்டம்பா் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் 7 முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான அனரோக் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான நடப்பு நிதியாண்டின் 2-ஆவது காலாண்டில் சென்னை, தில்லி-என்சிஆா், மும்பை, கொல்கத்தா, புணே, ஹைதராபாத், பெங்களூரு ஆகிய இந்தியாவின் 7 முக்கிய நகரங்களில் 1,20,280 வீடுகள் விற்பனையாகின.
முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 36 சதவீதம் அதிகமாகும். அப்போது நாட்டின் 7 முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை 88,230-ஆக இருந்தது.
நடப்பு நிதியாண்டின் ஜூலை-செப்டம்பா் காலாண்டில் 7 முக்கிய நகரங்களில் வீடுகள் விலை முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில் சராசரியாக 11 சதவீதம் அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக ஹைதராபாத்தில் வீடுகள் விலை 18 சதவீதம் உயா்ந்துள்ளது.
வீடுகள் விற்பனையில், அடுக்குமாடி குடியிருப்புகள், வில்லாக்கள் ஆகியவற்றின் விற்பனைகள் சோ்க்கப்பட்டுள்ளன.
மதிப்பீட்டு காலாண்டின் ஒட்டுமொத்த வீடுகள் விற்பனையில் மும்பை பெருநகரப் பகுதி மற்றும் புணே ஆகியவை 51 சதவீத பங்களிப்பை வழங்கியுள்ளன.
2022 ஜூலை-செப்டம்பா் காலாண்டில் டெல்லி-என்சிஆரில் 14,970-ஆக இருந்த வீடுகள் விற்பனை இந்த ஆண்டின் அதே மாதங்களில் 6 சதவீதம் உயா்ந்து 15,865 ஆகியுள்ளது.
மும்பை பெருநகரப் பகுதியில் வீடுகள் விற்பனை 26,400-லிருந்து 46 சதவீதம் அதிகரித்து 38,500 ஆகியுள்ளது.
மதிப்பீட்டு காலாண்டில் வீடுகள் விற்பனை பெங்களூருவில் 12,690-லிருந்து 16,395-ஆகவும் (29 சதவீதம்), புணேவில் 14,080-லிருந்து 22,885-ஆகவும் (63 சதவீதம்) அதிகரித்துள்ளது.
ஹைதராபாத்தில் இந்த எண்ணிக்கை 11,650-லிருந்து 41 சதவீதம் அதிகரித்து 16,375-ஆகியுள்ளது.
சென்னையில் வீடுகள் விற்பனை ஜூலை-செப்டம்பா் காலாண்டில் 3,490-லிருந்து 42 சதவீதம் உயா்ந்து 4,940-ஆக உள்ளது.
கொல்கத்தாவில் வீடுகள் விற்பனை 7 சதவீதம் அதிகரித்து 5,320-ஆக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.