வர்த்தகம்

என்எல்சி இந்தியா நிகர லாபம் ரூ.1,426 கோடி

DIN

என்எல்சி இந்தியா நிறுவனம் தனது துணை நிறுவனங்களுடன் இணைந்து கடந்த 2022-23-ஆம் நிதியாண்டில் ரூ.1,426 கோடி நிகர லாபம் ஈட்டியது.
 இதுகுறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
 என்எல்சி தனது துணை நிறுவனங்களுடன் இணைந்து 2022-23-ஆம் நிதியாண்டில் ரூ.16,165 கோடி வருவாய் ஈட்டியது. இது, அதற்கு முந்தைய நிதியாண்டின் வருவாயை விட 35 சதவீதம் அதிகம். இதே போல, துணை நிறுவனங்களுடன் இணைந்து 2022-23-ஆம் நிதியாண்டில் ரூ.1,426 கோடி நிகர லாபத்தை என்எல்சி ஈட்டியுள்ளது. இது முந்தைய நிதியாண்டில் ஈட்டிய நிகர லாபம் ரூ.1,116 கோடியை விட 28 சதவீதம் அதிகம்.
 3,008 கோடி யூனிட் மின் உற்பத்தி: என்எல்சி தனது துணை நிறுவனங்களுடன் இணைந்து 2022-23-ஆம் நிதியாண்டில் மொத்தம் 3,008 கோடி யூனிட் மின் சக்தியை உற்பத்தி செய்துள்ளது. இது முந்தைய நிதியாண்டை விட 3 சதவீதம் அதிகம். 2022-23-ஆம் நிதியாண்டில் 2,681 கோடி யூனிட் மின் சக்தியை மின் வாரியங்களுக்கு விற்பனை செய்துள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 3.55 சதவீதம் அதிகம்.
 பசுமை மின் உற்பத்தி: 2022-23-ஆம் ஆண்டு பசுமை வழியில் 219.50 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்துள்ளது. இதை மாநில மின் வாரியங்களுக்கு விற்றதற்கான கட்டணத் தொகையில் 90.19 சதவீதம் வசூலிக்கப்பட்டது.
 இலக்கை கடந்த செயல்பாடு: புதிய மின் திட்டங்களை அமைப்பது தொடர்பாக என்எல்சி தனது துணை நிறுவனங்களுடன் இணைந்து மத்திய அரசுடன் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நிர்ணயிக்கப்பட்ட செலவுத் தொகை ரூ.2,920 கோடி. இதைவிட 13 சதவீதம் அதிகமாக ரூ.3,308 கோடி செலவிடப்பட்டது.
 மொத்த வருவாய்: என்எல்சி இந்தியா நிறுவனம் மட்டும் 2022-23-ஆம் நிதியாண்டில் ரூ.14,196 கோடி மொத்த வருவாய் ஈட்டியுள்ளது. இது முந்தைய நிதியாண்டில் ஈட்டிய ரூ.10,662 கோடியை விட 33 சதவீதம் அதிகம்.
 தேசிய சராசரியைவிட அதிக மின் உற்பத்தி: நாட்டின் அனல் மின் நிலையங்களுக்கான சராசரி மின் உற்பத்தித் திறன் 2022-23-ஆம் நிதியாண்டில் 64.15 சதவீதமாக இருந்த நிலையில், என்எல்சி அனல் மின் நிலையங்கள் 68.86 சதவீத மின் உற்பத்தித் திறனுடன் இயங்கி, தேசிய சராசரியை விட 4 சதவீதம் அதிகமாக மின் உற்பத்தி செய்துள்ளன.
 நிலக்கரி உற்பத்தி, விற்பனையில் புதிய சாதனை: என்எல்சி சுரங்கத்தில் 2022-23-ஆம் நிதியாண்டில் 1.30 கோடி டன் நிலக்கரி வெட்டி எடுத்து ரூ.1,774 கோடிக்கு விற்பனை செய்தது புதிய சாதனையாகும். இது முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 58 சதவீதம் அதிகம்.
 ரூ.1,774 கோடிக்கு நிலக்கரி விற்பனை என்பது, முந்தைய நிதியாண்டின் விற்பனைத் தொகையான ரூ.920 கோடியை விட 93 சதவீதம் அதிகம்.
 35 சதவீத பங்கு ஈவுத் தொகை: என்எல்சி பங்குதாரர்களுக்கு 2022-23-ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால பங்கு ஈவுத் தொகையாக 15 சதவீதம் ஏற்கெனவே வழங்கப்பட்ட நிலையில், மேலும் 20 சதவீத பங்கு ஈவுத் தொகை வழங்க நிறுவன இயக்குநர்கள் குழு பரிந்துரை செய்தது. இதன் மூலம் மொத்த பங்கு ஈவுத் தொகை 35 சதவீதமாக, அதாவது ஒரு பங்குக்கு ரூ.3.50 வீதம் வழங்கப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT