வர்த்தகம்

எழுச்சியில் தொடங்கி, சரிவில் முடிந்த பங்குச் சந்தை: 344 புள்ளிகளை இழந்தது

தினமணி

இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமை பங்குச் சந்தை எழுச்சியுடன் தொடங்கினாலும், இறுதியில் சரிவில் முடிவடைந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் மேலும் 344 புள்ளிகளை இழந்தது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 71.15 புள்ளிகள் (0.42 சதவீதம்) குறைந்து 16,972.15-இல் நிலைபெற்றது. இதையடுத்து, பங்குச் சந்தை 5-ஆவது நாளாக சரிவைச் சந்தித்துள்ளது.
 உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இருப்பினும், உள்நாட்டுச் சந்தை எழுச்சியுடன் தொடங்கினாலும் இறுதியில் சரிவில் முடிவடைந்தது. அமெரிக்காவின் 3 முக்கிய வங்கிகள் மூடப்பட்டதன் தாக்கம் உலகளாவிய நிதிச் சந்தைகளில் தொடர்ந்து எதிரொலித்து வருகிறது.
 மேலும், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் தொடர்ந்து முதலீடுகளை வாபஸ் பெறுவதும், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருவதும் முதலீட்டாளர்களின் உணர்வுகளை பாதித்துள்ளது. உள்நாட்டுச் சந்தையில் வங்கிகள், நிதி நிறுவனங்கள், தொலைத் தொடர்பு நிறுவனப் பங்குகள் அதிகம் விற்பனையை எதிர்கொண்டன. உலோகப் பங்குகளுக்கு ஓரளவு ஆதரவு இருந்தன என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
 சந்தை மதிப்பு வீழ்ச்சி: இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.49 ஆயிரம் கோடி குறைந்து வர்த்தக முடிவில் ரூ.255.90 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ) கடந்த செவ்வாயன்று ரூ. 3,086.96 கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
 சென்செக்ஸ் 5-ஆவது நாளாக சரிவு: சென்செக்ஸ் காலையில் 368.35 புள்ளிகள் கூடுதலுடன் 58,268.54-இல் தொடங்கி அதிகபட்சமாக 58,473.63 வரை மேலே சென்றது. பின்னர், 57,455.67 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 344.29 புள்ளிகள் (0.59 சதவீதம்) குறைந்து 57,555.90-இல்
 முடிவடைந்தது. ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் 573.44 புள்ளிகள் உயர்ந்திருந்தது. சென்செக்ஸ் பட்டியலில் 9 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 21 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன.
 ஏசியன் பெயின்ட் முன்னேற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள பிரபல பெயின்ட் உற்பத்தி நிறுவனமான ஏசியன் பெயின்ட் 3.03 சதவீதம், ஸ்டீல் உற்பத்தி நிறுவனமான டாடா ஸ்டீல் 2.07 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன.
 இவற்றுக்கு அடுத்ததாக, டைட்டன், எல் அண்ட் டி, பவர்கிரிட், கோட்டக் வங்கி உள்ளிட்டவை 1 முதல் 1.80 சதவீதம் வரை உயர்ந்தன. மேலும், அல்ட்ராடெக் சிமென்ட், என்டிபிசி, பஜாஜ் ஃபின்சர்வ் உள்ளிட்டவையும் சிறிதளவு உயர்ந்து ஆதாயப் பட்டியலில் வந்தன.
 பார்தி ஏர்டெல் சரிவு: அதே சமயம், பிரபல தனியார் தொலைத் தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் 2 சதவீதம், இண்டஸ்இண்ட் வங்கி 1.85 சதவீதம், ரிலையன்ஸ் 1.74 சதவீதம், ஹிந்துஸ்தான் யுனிலீவர் 1.56 சதவீதம், ஹெச்டிஎஃப்சி வங்கி 1.54 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இவற்றுக்கு அடுத்ததாக, எஸ்பிஐ, நெஸ்லே, டாடா மோட்டார்ஸ், ஹெச்டிஎஃப்சி, ஆக்ஸிஸ் வங்கி உள்ளிட்டவை 1 முதல் 1.50 சதவீதம் வரை குறைந்தன.
 மேலும், பிரபல ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ, டெக் மஹிந்திரா, ஹெச்சிஎல் டெக் ஆகியவையும் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எல்லைகளில் தீவிர வாகனச் சோதனை

திருமருகல் ரத்தினகிரீஸ்வரா் கோயிலில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

மாமல்லபுரம் புராதன சின்னங்களை இன்று இலவசமாக சுற்றிப் பாா்க்கலாம்

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேக்கேதாட்டு அணை கட்டப்படும்: டி.கே.சிவகுமாா்

மக்களவைத் தோ்தல்: 2-ஆம் கட்டத் தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று நிறைவு

SCROLL FOR NEXT