வர்த்தகம்

சென்செக்ஸ் தட்டுத்தடுமாறி முன்னேற்றம்

7th Jun 2023 03:29 AM |  நமது நிருபர்

ADVERTISEMENT

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தை நேர்மறையாக முடிவடைந்தது.
 இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 5 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 5 புள்ளிகளும் உயர்ந்து நிலைபெற்றன.
 மத்திய ரிசர்வ் வங்கியின் இந்த வாரம் அறிவிக்கவுள்ள வட்டி விகித முடிவுக்காக காத்திருக்கும் முதலீட்டாளர்கள் வர்த்தகத்தில் அவ்வளவாக ஆர்வம் காட்டாமல் இருந்தனர். இதனால், தொடக்கத்தில் சந்தை பலவீனமாகத் தொடங்கி நாள் முழுவதும் ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வந்தது. இறுதியில் ஆட்டோ, தொழில்துறை, வணிகத் துறை பங்குகளுக்கு கிடைத்த ஆதரவால் சிறிதளவு உயர்ந்து நேர்மறையாக முடிவடைந்தது. கிட்டத்தட்ட மாற்றமின்றி நிலைபெற்றதாகவே இதைக்
 கருத வேண்டும் என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
 சந்தை மதிப்பு: இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.58 ஆயிரம் கோடி உயர்ந்து ரூ.286.57 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ) திங்களன்று ரூ.700.98 கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
 சென்செக்ஸ் சிறிதளவு முன்னேற்றம்: சென்செக்ஸ் காலையில் 49.12 புள்ளிகள் குறைந்து 62,738.35-இல் தொடங்கி 62,554.21 வரை கீழே சென்றது. பின்னர், பிற்பகலில் அதிகபட்சமாக 62,867.95 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 5.41 புள்ளிகள் மட்டும் உயர்ந்து 62,792.88-இல் முடிவடைந்தது.
 16 பங்குகள் விலை உயர்வு: சென்செக்ஸ் பட்டியலில் 14 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும், 16 பங்குகள் விலையுயர்ந்த பட்டியலிலும் இருந்தன. இதே போன்று, தேசிய பங்குச் சந்தையில் மொத்தம் 1,096 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 958 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. 50 முன்னணி நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி பட்டியலில் 28 பங்குகள் ஆதாயம் பெற்றன; 21 பங்குகள் வீழ்ச்சியை சந்தித்தன.
 
 ஏற்றம் பெற்ற பங்குகள்
 அல்ட்ராடெக் சிமென்ட் 2.93%
 ஆக்ஸிஸ் வங்கி 1.90%
 கோட்டக் வங்கி 1.88%
 டாடா மோட்டார்ஸ் 1.68%
 மாருதி 1.57%
 பஜாஜ் ஃபைனான்ஸ் 1.22%
 சரிவைக் கண்ட பங்குகள்
 இன்ஃபோசிஸ் 1.98%
 டெக் மஹிந்திரா 1.88%
 டிசிஎஸ் 1.69%
 விப்ரோ 0.60%
 ஹெச்சிஎல்டெக் 0.82%
 பார்தி ஏர்டெல் 0.61%

ADVERTISEMENT
ADVERTISEMENT